எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 30 June 2021

படித்ததில் பிடித்தவை (“கைவிடப்பட்ட குழந்தை” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*கைவிடப்பட்ட குழந்தை*

 

கைவிடப்பட்ட குழந்தை

ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது

ஒரு கதையில் இடம் தேடுகிறது

வாகனங்களை பொம்மைகளைப்போல ரசிக்கிறது

அதன் சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது

விரட்டுபவரின் நிழலை மிதித்துச் செல்கிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

ஒரு பட்டத்தை நோக்கி ஓடுகிறது

கொஞ்சம் அழுகையை நிறுத்துகிறது

சுண்டல் விற்பவனிடம் கை நீட்டுகிறது

அம்மாவின் இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

மணல் அள்ளிப் போடுகிறது

தன் பெயரைத் தேடுகிறது

பொம்மையைப்போல் கிடக்கிறது

கால் பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

தன் மழலை வழியே மேலேறுகிறது

கைகளால் வானவில்லை அசைக்கிறது

விழும் நிறங்களை அள்ளுகிறது

கடலில் தூக்கி எறிகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

காணமல் போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது

அதிலிருக்கும் முகத்தைத் தடவுகிறது

மேல் ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

தாய்களைப் பார்க்கிறது

தந்தைகளைப் பார்க்கிறது

மனிதர்களைப் பார்க்கிறது

யாரும் தன்னைப் பார்க்கவில்லை எனினும்

ஆழ்ந்து உற்று அருகில்போய்

அதிகமாகப் பார்க்கிறது

 

கைவிடப்பட்ட குழந்தை

தான் கைவிடப்பட்டது தெரியாமல்

தேடிச்செல்கிறது இன்னொரு குழந்தையை

தன் கைபிடித்து அழைத்துச் செல்ல..!

 

*ராஜா சந்திரசேகர்*

(ஆனந்த விகடன் இதழில் (25.05.2011)

வெளியான கவிதை)



 

8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. நந்தகுமார்30 June 2021 at 07:26

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்30 June 2021 at 08:27

    கவிதை
    இதயத்தை
    கனக்கச்
    செய்கிறது.
    கைவிடப்பட்ட
    குழந்தையின்
    மனநிலையை
    அழகாகச்
    சொல்லியிருக்கிறார்
    கவிஞர்.

    ReplyDelete
  4. சீனிவாசன்30 June 2021 at 08:39

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. செல்லதுரை30 June 2021 at 16:55

    நன்று.

    ReplyDelete
  6. கமலநாதன்30 June 2021 at 18:59

    அருமையான கவிதை
    குறிப்பாக இறுதி வரிகள்

    கைவிடப்பட்ட குழந்தை
    தேடிச் செல்கிறது
    இன்னொரு குழந்தையை
    தன் கைபிடித்து அழைத்துச் செல்ல.

    பாராட்டுகள் .

    ReplyDelete
  7. கெங்கையா30 June 2021 at 22:30

    அருமையான கவிதை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. பாலமுரளி3 July 2021 at 14:10

    இறைவனின் குழந்தைகள்.

    ReplyDelete