எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 July 2020

படித்ததில் பிடித்தவை (“கடவுளுக்கான இடம்” – சமுத்ரா கவிதை)



*கடவுளுக்கான இடம்*

கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது.

சில வீடுகளில்
பிரம்மாண்டமான பூஜை அறையில்...

சில வீடுகளில்
புத்தக அலமாரிகளில்...

சில வீடுகளில்
கடுகு, சீரக டப்பாக்களுக்கு மத்தியில்...

பேச்சுலர்களின் அறைகளில்
ஒற்றை விநாயகர் பொம்மையாய்...

கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது..!”

   *சமுத்ரா*

Thursday 30 July 2020

படித்ததில் பிடித்தவை (“நிழல்” – சி.மோகன் கவிதை)



*நிழல்*

பெருநகரத் தார்ச்சாலையில்
சட்டென வீழ்ந்து
சல்லென நீந்தி
நீண்டதோர் கட்டிடத்தில் மோதி
சிறு விபத்துமின்றி மறைந்தது
ஒரு பறவையின் நிழல்..!

*சி.மோகன்*

Wednesday 29 July 2020

படித்ததில் பிடித்தவை (“கவிதை” – ரூமி கவிதை)



*கவிதை*

கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்.

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்.

உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்துகொண்டே இரு.

அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒருபோதும்.

*ரூமி*

Tuesday 28 July 2020

படித்ததில் பிடித்தவை (“தேடல்” – யூமா வாசுகி கவிதை)



*தேடல்*

பார்த்தாயா?
இதைத்தான் இவன்
இவ்வளவு நாட்களாகப்
படித்துக்கொண்டிருக்கிறான்
என்று...

மேசைப்புத்தகத்தின் பக்கங்களை
ஒவ்வொன்றாக விரித்துக் காட்டுகிறது
மின்விசிறி ஜன்னலருகில்..!

எழுத்தறிவற்ற அந்தியொளியோ
மஞ்சள் கைகளால் தடவித்தடவி
இல்லாத சித்திரங்களைத் தேடுகிறது..!

*யூமா வாசுகி*

Monday 27 July 2020

படித்ததில் பிடித்தவை (“அம்மாவாகும் குழந்தைகள்” – அ.வெண்ணிலா கவிதை)




*அம்மாவாகும் குழந்தைகள்*

துண்டொன்றைக்
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்..!

குழந்தையாக முடியாமல்
தவித்துக் கொண்டிருப்பது
அம்மாக்கள்தான்..!

*அ.வெண்ணிலா*

Sunday 26 July 2020

படித்ததில் பிடித்தவை (“எறும்பு” – வைத்தீஸ்வரன் கவிதை)



*எறும்பு*

எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிர்ப்பலி கேட்குதாவிரல்?

மீறிக் கடித்தாலும்
சாவு உனக்கில்லையெனத் தெரிந்தும்
ஊறும் எறும்பை
நசுக்குவதேன் சகிக்காமல்?

சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனத்தைக்
குற்றமில்லை என்கிறதா?

உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்புதானென்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

*வைத்தீஸ்வரன்*

Saturday 25 July 2020

படித்ததில் பிடித்தவை (“பெரிதுபடுத்தப்பட்ட துயரம்” – கவிதை)



*பெரிதுபடுத்தப்பட்ட துயரம்*

யார் யாரோ வந்து
ஆறுதல் போல்
ஏதேதோ சொல்ல

இப்போது  என்னிடம்
இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்,

அவர்களிடம்
எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்
எஞ்சி இருந்தது..!

Friday 24 July 2020

படித்ததில் பிடித்தவை (“நீர் தெளித்து விளையாடுதல்” – முகுந்த் நாகராஜன் கவிதை)



*நீர் தெளித்து விளையாடுதல்*

முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவுவிடுதியில்
சாப்பிட்டுவிட்டு
கைகழுவப்போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ் பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்துவிட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்..!

*முகுந்த் நாகராஜன்*

Thursday 23 July 2020

படித்ததில் பிடித்தவை (“அதற்குள்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)



*அதற்குள்*

அதற்குள்
அடுத்த தீபாவளி வந்துவிட்டது.
சென்ற தீபாவளியின்
கரிந்த மத்தாப்புகளையே
இன்னும் நான் செடி மறைவிலிருந்து
எடுத்துப்போடவில்லை.

அதற்குள்
அடுத்த காதல் வந்துவிட்டது.
சென்ற காதலின்
ஈமச்சடங்குகளையே
இன்னும் நான்
செய்து முடிக்கவில்லை.

*மனுஷ்ய புத்திரன்*

Wednesday 22 July 2020

படித்ததில் பிடித்தவை (“நிலவு சாப்பாடு” – தபூ சங்கர் கவிதை)



*நிலவு சாப்பாடு*

அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன்
உயிர் வாழமுடியாது
என்பதை
எப்படி நம்புவது?

*தபூ சங்கர்*

Tuesday 21 July 2020

படித்ததில் பிடித்தவை (“பகல் ஒழியும் காலத்தில்” – ஆதவன் தீட்சண்யா கவிதை)



*பகல் ஒழியும் காலத்தில்*

மாடத்தில் ஒரு மெழுகுவர்த்தி
இருக்கும் தைர்யத்தில்
தனித்திருந்தேன் அறையில்.

தளிரென ஒயிலாய்
அசைந்துருகி ஒளியீந்தும்
அதன் திரியிலிருந்து
சுடர்ந்து பரவியது இருட்டு.

ஒளியையே எதிர்பார்த்திருந்த
அதிர்ச்சியிலும் இருளிலும்
அமிழ்பவனுக்கு சொன்னது:

உனக்கென ஒளி வேண்டின்
பந்தமாய் கொளுத்திக்கொள்ளேன்
உன் தலைமுடியை.

என்னையே உருக்க அஞ்சித்தான்
இதுகாறுமதை
தியாகியாய்  கொண்டாடிய கபடம்
எப்படித்தான் புரிந்ததோ மெழுகுவர்த்திக்கு..?

*ஆதவன் தீட்சண்யா*

{தியாகங்கள் போற்றப்பட வேண்டும். தியாகிகள் வணங்கப்பட வேண்டும் என்ற சொல்லாடல் மகத்தானது. எனினும் பல நேரங்களிலும் அதன் பின்னே ஒரு நுண்அரசியலும், ஏமாற்றுத்தனமும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த கவிதை சொல்கிறது.
நேர்கோணத்தில் நின்று இந்த கவிதையை வாசிக்காமல் எதிர்கோணத்தில் நின்று வாசித்துப் பாருங்கள் . அப்போதுதான் அதன் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும் தோழமைகளே..! தோழர். சக்கையா.}