எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 March 2023

*சிவப்புப் பூக்கள்*

 


நான்

கடையில் வாங்கிய

எறும்பு மருந்தால்

ஓராயிரம்

எறும்பையாவது

கொன்ற பின்தான்

உயிர் பிழைத்தது

வீட்டுத் தோட்டத்திலிருந்த

அந்த ஒற்றை

செம்பருத்திச் செடி..!

 

இப்போதெல்லாம்

நிறைய பூக்களை

பூத்து என்னை

மகிழ்வித்தாலும்...

 

பூக்களின் அதீத சிவப்பு

எனது பாவச் செயலை

நினைவுறுத்தி

வருந்த வைக்கிறது..!

 

*கி.அற்புதராஜு*

(31.03.2023)

Thursday 16 March 2023

*சந்திக்காமலே...*

 


எனக்கும் அவரை

நன்றாகத் தெரியும்.

அவருக்கும் என்னை

நன்றாகத் தெரியும்.

 

அவர் என்னை

பார்க்காத போது

நான் அவரைப்பார்த்தேன்.

அவரும் நான்

பார்க்காத போது

என்னைப் பார்த்திருப்பார்.

 

நான் அவரை 

பார்க்க முயற்சிக்கும்போதெல்லாம்...

அவர் என் கண்களை சந்திக்கவில்லை.

அவருக்கும் எனது கண்கள்

சிக்கவில்லையோ... என்னவோ...

 

அன்றைய தினம்... ஏனோ... 

ஒருங்கிணையவேயில்லை

இருவரின் பார்வையும்..!

 

அந்த ரயில் பிரயாணத்தில்

இறுதி வரை சந்திக்காமலே

இறங்கி விட்டோம்..!

 

*கி.அற்புதராஜு*

(16.03.2023)