எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 28 July 2016

படித்ததில் பிடித்தவை (“சைக்கிள் கமலம்” – ஞானக்கூத்தன் கவிதை)


சைக்கிள் கமலம்

“அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்.
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்.

தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்.
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்.
கடுகுக்காக ஒரு தரம்.
மிளகுக்காக மறு தரம்.
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்.

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்,
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக.

குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை.

எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் விடுகிறாள்.
என்மேல் ஒருமுறை விட்டாள்.
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்...”
-         ஞானக்கூத்தன்.

கவிதை போன்றதொரு வாழ்க்கையை கடந்து சென்றுவிட்ட ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016)

-          பால்நிலவன்.
தமிழ் நவீனக் கவிதையின் மிக முக்கியமான கவிஞரான ஞானக்கூத்தன் 27.07.2016 அன்று மறைந்துவிட்டார். அவரது கவிதைப் பயணம் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கடந்த 50 வருடங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாறிவரும் சமூக மாற்றங்களின் போக்குகளை எவருக்கும் வளையாமல் எதற்கும் இசைந்து கொடுக்காமல் மிக நாசுக்காக நகைச்சுவையாக எள்ளலோடு கவிதைகளைப் படைத்தவர் அவர். நவீன கவிதைக்கு வேராகத் திகழ்ந்த ஞானரதம், , கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் தனது தீவிர பங்களிப்பை செலுத்தியவர்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதியைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை மரபை பெரும்வீச்சோடு முன்னெடுத்தவர் பாரதிதாசன் என்றாலும் தமிழ் கவிதைக்கு சமகால நவீன மொழியை வழங்கியவர் ந.பிச்சமூர்த்தி.

மாறிவரும் உலக இலக்கியப் போக்கின் கண்ணியை அதன் வேகத்தோடு தமிழ் தன்னை இணைந்துகொண்டதற்கு தமிழிடமுள்ள வரலாறு ஒரு காரணம் என்றால் தக்க நேரத்தில் அதை முன்னெடுத்த அற்புதமான தமிழ் கவிஞர்களும் ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும்.

ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், விக்கிரமாதித்யன், ந.ஜெயபாஸ்கரன், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன் என்று செல்லும் இந்த வரிசை மொழியை வளம் சேர்ப்பதோடு சிந்தனையை செதுக்கவும் துணைநின்றது.

இவர்களில் பலரும் தத்துவம், தனிமை, ஆற்றாமை, காலம், இடம் என தேடலின் தீவிரத்தில் இயங்கியவர்கள்... இவர்களிலிருந்து நிறைய வேறுபட்டு நிற்கிறார் ஞானக்கூத்தன்.

"அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான். மைதானத்தில் சுற்றிச் சுற்றி எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்.. என்று தொடங்கும் அவரது கவிதை ஒன்று, .....எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள். என்மேல் ஒருமுறை விட்டாள். மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்." என்று முடியும் போது வாய்விட்டு சிரிக்கவைக்கக்கூடியது.

''மோசீகீரா உன்மேல் அளவிறந்த அன்பு தோன்றிற்று இன்றெனக்கு அரசாங்கத்துக் கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் நீதான் என்னும் காரணத்தால்'' என்று அமையும் 'தோழர் மோசீகீரனார்' எனும் கவிதையில் உள்ள நகைச்சுவை அளப்பரியது.

நீண்டதூரம் நடந்துவந்த களைப்பினால் முரசு கட்டிலில் மீதேறி துயில் கொண்டுவிட்ட புலவர் மோசிகீரனார். இவர் புலவராயிற்றே அடடா என அவருக்கு அருகே நின்று தூக்கம் கலைந்துவிடாமல் கவரி வீசிய மன்னரின் பெருந்தன்மையைப் பற்றி ஏதாவது சொல்லப்போகிறாரோ என்று தேடினால் அதற்கு மேல் அவர் எழுதவில்லை. ஞானக்கூத்தன் பாடவந்தது, மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியோ, புலவர் மோசிகீரனாரைப் பற்றியோ அல்ல என்பது நம் அரசு அலுவலக லட்சணங்களை நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.


70-களின் அரசியல் மேடைகளை கிண்டலடித்து இவர் எழுதிய பல கவிதைகள் பிரசித்தம். அவை பலமான எதிர்ப்புகளை இவருக்குப் பெற்றுத் தந்தன. அதேநேரத்தில் எதையும் எவருக்காகவும் தனது விமர்சனப் போக்கை மாற்றிக்கொள்ளாதவர் என்ற தெளிவையும் உலகுக்கு உணர்த்தின. கல்லூரி தமிழ் இலக்கிய வகுப்புகளில் பேராசிரியர்களின் கோபத்திற்கு அதிகம் ஆளானவர்களில் இக்கவிஞருக்கு முக்கிய பங்குண்டு.

அதற்கு காரணம் அவரது இந்தக் கவிதை. ''எனக்கும் தமிழ்தான் மூச்சு... ஆனால் அதை பிறர்மேல் விடமாட்டேன்'' என்ற இக்கவிதை வரிகள் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வரிப்புலியே, இளந்தமிழா எழுந்திருநீ, என்றெல்லாம் கேட்டுப் பழகிய தமிழ் வாசகனுக்கு ஞானக்கூத்தனின் கவிதைகள் அதிர்ச்சியைத் தந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால் எழுபதுகளில் களைகட்டிய அரசியல் இயக்கங்களின் வெற்றுக்கோஷங்களையும் அதைவைத்துமட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருப்பதையுமே அவரது ''எனக்கும் தமிழ்தான் மூச்சு'' கவிதை பகடி செய்தது என்பதை புரிந்துகொண்டால் குழப்பம் தெளியும்...

மேலோட்டமான உணர்ச்சிப்பெருக்கில் தன்னை கவிஞர்களாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மத்தியில் ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சியோடு தனது படைப்புகளை வடிவரீதியாகவும் முன்னிறுத்தியவர். தமிழ்தமிழ் என்று சொல்லிவந்த அரசியல்வாதிகளின் போக்குகளை கடுமையாக விமர்சனம் செய்பவர் என்றாலும் இடஒதுக்கீடு, ஈழத்தமிழர் ஆதரவு போன்றவற்றில் முக்கிய பற்று கொண்டவர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. இவரது முக்கியமான கவிதைத் தொகுப்புகள் அன்று வேறு கிழமை, கடற்கரையில் சில மரங்கள், பென்சில் படங்கள் போன்றவை.

இளங்கவிஞர்களை வாஞ்சையோடு அழைத்துப் பேசி அவர்களைப் பாராட்டி வழிநடத்தத் தவறியதில்லை. விமர்சனம் என்று வரும்போது எவ்வகை அதிகார பீடத்தையும் துணிச்சலாக எதிர்க்கவும் தயங்கியதில்லை. அதிகார மட்டத்திலிருந்து கிடைக்கும் விருதுகளுக்கு எதிரான இலக்கிய வாழ்க்கைப் பயணம் என்ற அவரது குணம் அனைத்தும் அவரது கவிதையைப் போன்றதே.

(நன்றி: தி இந்து, 28.07.2016)
*** *** ***

Saturday 23 July 2016

படித்ததில் பிடித்தவை (“விளிம்பு காக்கும் தண்ணீர்” – ஞானக்கூத்தன் கவிதை)


விளிம்பு காக்கும் தண்ணீர்
கொட்டிவிட்ட தண்ணீர்
தரையில் ஓடியது. ஓடி
சற்று தூரத்தில் நின்றுவிட்டது
வழி தெரியாதது போல.
தொங்கும் மின்விசிறியின் காற்று
தண்ணீரை அசைக்கிறது
மேலே தொடர்ந்து செல்ல
தண்ணீருக்கு விருப்பமில்லை
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
காற்றினால் கலையும்
தன் விளிம்புகளை
இறுகப் பிடித்துக்கொண்டு
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.”
-          ஞானக்கூத்தன்.

[காணும் அனுபவம் கவிதா அனுபவமாக மாறி எப்படி ஒரு கவிதையைத் தருகிறது என்பதை அறிந்துகொள்ள இந்தக் கவிதை மிகச் சரியான எடுத்துக்காட்டு. சற்று தூரத்தில் நின்றுவிட்டது / வழி தெரியாதது போல.இந்த வரிதான் நீரின் ஓட்டத்தைக் கவிதைக்கான நிகழ்வாக்குகிறது. ஓடாது அங்கேயே நிற்கிற நீரை வழி தெரியாது நிற்பதாகப் பார்க்கிறார் ஞானக்கூத்தன். கவிஞனின் இந்தப் பார்வைதான் கவிதை மீது நாம் கொள்கிற காதல். எந்தக் கவிதையும் யாருக்குமான கவிதையாக மாறுவது இந்த இடத்தில்தான்.

நீரின் ஓட்டத்தை மனித வாழ்வின் பயணமாக அல்லது மனதின் எண்ணமாக மாற்றுகிறது கவிதை. இன்னொரு வாசக அனுபவம் இதை வேறாகவும் வாசிக்கலாம். இதே கவிதை எனக்கு நாளை இன்னொரு உணர்வைத் தரலாம். அதற்கான சாத்தியம் கவிதையில் அதிகம். கொட்டிய வினையால் நிகழ்ந்த நீரின் ஓட்டத்தை மனித வாழ்வோடு இணைக்கிறது கவிதை.

வழி தெரியாதது போல என்கிற வரி வாழ்வின் பயண நடுவில் நிகழ்கிற ஸ்தம்பிப்பு. அல்லது ஒரு தயக்கம். அதனால்தான் வழி தெரியாதது போல என்கிறார். வாசிப்பில் நீரோடு நம் மனமும் பயணிக்கிறது. நீரின் இடத்தில் வாசிக்கும் மனம் உட்கார்ந்து கொள்கிறது. இப்போது நீர் வேறு மனம் வேறல்ல. அதனால் கவிதை எல்லாருக்குமானதாகிறது. கடந்து வந்த வாழ்வை அசைபோடுகிறது மனம். புறம் அந்த இடத்தைக் கலைக்க விரும்பலாம். மனம் அதே இடத்தில் இருக்க விரும்பலாம். தன் விளிம்புகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு என்ற வரியிலிருந்து வாசகன் எளிதாக மீள முடியாது.
- க.வை.பழனிச்சாமி]

{நன்றி: தி ந்து தமிழ்}

Sunday 17 July 2016

படித்ததில் பிடித்தவை (“கடைசிப்பெட்டி” – ஞானக்கூத்தன் கவிதை)


கடைசிப்பெட்டி
“வண்டி புறப்பட நேரம் இருக்கிறது.
இரயில் நிலையத்துக் கடிகாரத்தின் பெரியமுள்
திடுக்கிட்டு திடுக்கிட்டு நகர்கிறது.
பிறந்தகம் போகும் புதுமணப் பெண்ணுக்கு
ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான் மாப்பிள்ளை.
தொட்டுக் கொள்கிற துவையல் பற்றாமல்
எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்.
பெட்டிகள் வராத தண்டவாளத்தின் மேல்
நிலைய விளக்குகள் பிரகாசிக்கின்றன.
திடுக்கிட்டு திடுக்கிட்டு நகர்ந்த முள்
இரயிலின் புறப்பாட்டு நேரத்தைத் தொட்டது.
சென்ட்ரல் ஸ்டேஷன் இரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது.
இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம் போல்
சோகம் தருவது உலகில் வேறேது..?”
-          ஞானக்கூத்தன்.

[இந்தக் கவிதையில் உரையாடலைத் தூண்டும் இடம் திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்கிறது என்ற வரி. திடுக்கிடல் காண்பவரின் மனம் சார்ந்தது. ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான் என்பது உறவின் நெருக்கத்தைக் காட்டுகிறது. எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்’ என்ற வரியில் அவசரமும் போதாமையும் தெரிகிறது. சற்று நேரத்தில் ரயில் போய்விடும் என்பதில் ஒரு வலியை உணர்கிறோம். ரயில் நிலையத்தில் சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது இந்த இடத்தை வாசிக்கும்போது உறவின் ஆழம், பிரிவின் வலி இரண்டையும் உணர்கிறோம். கவிதைக்குள் பேசாத இடங்கள் கவிதையின் சக்தியாக மாறுகிறது. இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம் போல் / சோகம் தருவது உலகில் வேறேது..?’ பின்புறம் என்று சொல்கிறபோது பார்க்க முடியாத ஒன்றும் கூடவே பிறக்கிறது. இருந்தும் உணர்வுகள் தீண்ட முடியாத ரயில் வண்டி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடித்த பின் நீளும் உரையாடல் அந்தரங்கமாக மாறுவது ஞானக்கூத்தனின் கலா அதிர்வு. வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றம் இந்தக் கவிதை.
- க.வை.பழனிச்சாமி]

{நன்றி: தி ந்து தமிழ்}

Saturday 9 July 2016

படித்ததில் பிடித்தவை (“காதல்” - கவிதை)


காதல்...
“பழைய காதலோ
புதிய காதலோ
ஒரு காதல்
உன்னிடத்தில்
எப்போதுமிருக்க வேண்டும்.
அதுதான்
உனது ஆப்பிளை
உனக்கு பறித்துக் கொடுக்கும்.”
-          மாரி செல்வராஜ்.

[எழுத்தாளர் மாரி செல்வராஜ் தனது திருமண வரவேற்பு அழைப்பிதழைச் சிறு புத்தகம் போல் அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார். அவரது உண்மைக் கதை ஒன்றைத் தனது வருங்கால மனைவிக்குச் சொல்லும் விதத்தில் இந்த அழைப்பிதழை வடிவமைத்திருக்கிறார். தனது முன்னாள் காதலியையும் சாதி பிரித்த அவர்கள் காதலையும் பற்றிய கதை இது. தற்கொலை விளிம்புவரை சென்ற காதல் அது. கதையின் முடிவில் இரண்டு கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்காங்கே அழகான கோட்டோவியங்களும் உண்டு. இந்த அழைப்பிதழ் நூலிலிருந்து ஒரு கவிதைதான் மேலே...]

{நன்றி: தி இந்து தமிழ்}

Saturday 2 July 2016

இறைவி


“அமாவாசை அன்று
திருஷ்டி சுற்றி உடைக்க
நூறு ரூபாய்க்கு
பூசணிக்காய் வாங்கினாள்
குடும்பத்தலைவி.

மாமனார், மாமியார்
வீட்டிலேயே இருப்பார்கள்.
கல்லூரி முடித்து
முதலில் வருவாள்
மகள்.
கணவன் வேலை முடிந்து
எட்டு மணிக்குதான்
வீட்டுக்கு வருவார்.
சாப்ட்வேர் வேலை
மகனுக்கு.
இரவு ஒன்பதோ பத்தோ
ஆகிவிடும் வீடு திரும்ப.

வீட்டிலுள்ள எல்லோரையும்
ஒன்று சேர்த்து உடைப்பதுதான்
பெரிய வேலை.

இரவில்
பூசணியை உடைக்க
ஆள் தேடுவதும்
சற்றே சிரமம்தான்.

எப்படியோ உடைப்பதற்கு
ஒத்துக்கொண்டார்
பக்கத்துக்கு வீட்டில்
வேலைசெய்யும்
பார்வதி அம்மா.

மகன் வந்தப்பிறகு
எல்லோரையும்
ஒன்றாக நிற்க வைத்து
திருஷ்டி சுற்றி
அந்த பூசணிக்காய்
உடைக்கப்பட்டது
தெருவில்.


தனக்கு கொடுத்த
ஐம்பது ரூபாயில்
காய்கறி கடையில்
பூசணிக்கீற்று ஒன்று
வாங்கி சென்றார்
பார்வதி அம்மா
தன் வீட்டில்
சாம்பார் வைக்க..!”

-   கி. அற்புதராஜு.