எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 26 February 2017

படித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் முதல் சிறுகதை – “எழுத்தில் ஹிம்சை”)


சுஜாதாவின் முதல் கதை!
பிப்ரவரி 27 - எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுநாள். திருச்சி பெரியகடைத் தெருவில் இயங்கி வந்த சிவாஜிஇதழில், ‘எழுத்தில் ஹிம்சைஎன்ற தலைப்பில் சுஜாதா எழுதிய முதல் சிறுகதை வெளியானது. எஸ்.ரங்கராஜன் என்கிற தனது இயற்பெயரில்தான் அந்தக் கதையை எழுதியிருந்தார் சுஜாதா. அப்போது அவருக்கு வயது 18. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார்.

கதை வெளிவந்தபோது திருச்சி நகரமே அலம்பிவிட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் சிவாஜிஇதழின் காப்பிகள் கடகடவென விற்றுத் தீர்ந்துவிட்டன. எல்லாவற்றையும் நானே வாங்கிவிட்டதால்!என, தன் முதல் சிறுகதை வெளிவந்ததைப் பற்றி, சுஜாதாவாக மாறிய பிறகு எழுதியிருக்கிறார் எஸ்.ரங்கராஜன்.

முதல் முறை அந்தக் கதை வெளிவந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவே இல்லை. அந்த சிவாஜி பத்திரிகை பிரதியை எனக்கு இப்போது யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியையும் எனது மகளையும் திருமணம் செய்து தருகிறேன்என்று தமாஷாகச் சொன்னார் சுஜாதா. ஆனால், அவர் இருக்கும்வரை அவருக்கு அந்தக் கதை கிடைக்கவில்லை என்பதோடு, அவரிடம் ராஜ்யமும் இல்லை; அவருக்கு மகளும் இல்லை.
- பா.சு. ரமணன்.

எழுத்தில் ஹிம்சை - சுஜாதா

சார்லஸ் லாம்ப் (Charles Lamb) கட்டுரை கவிதைகள் எல்லாம் இரவு வேளைகளில்தான். அதாவது இரவு 10, 11 மணிக்கு மேல்தான் எழுதுவானாம். எழுத்தாளர் வி.நாகராஜன் அவர்களும் அப்படித்தான் ராத்திரி வேளையின் பயங்கர அணைப்பில்தான் அவர்கள் கற்பனைக்கு மூச்சு வரும். சரசரசரவென சாரைப்பாம்பு சீறுவதுபோல அவருடைய பேனா, அந்த வேளையில் சீறும். அந்த இரிடியம்முனையில் எத்தனை துளிக் கண்ணீர், எத்தனை துளி ரத்தம், எத்தனை கனவுகள், எத்தனை காதல்கள், எத்தனை தந்திரங்கள்?
நாகராஜனின் புத்தகங்கள் அநேகம் வந்துவிட்டன. அவை யாவும் கொலைக் கதைகள், கொள்ளைக் கதைகள். கருணாநிதி பாங்க் கொள்ளை கொலை!' - `வைரத்துக்காக நாலு உயிர்', `பயங்கரம்... அதிபயங்கரம்!', ‘விலாப் புறத்தில் கத்தி' இவை அவரின் ஏராளமான நாவல்கள். சிலவற்றில் விநோதமான தலைப்புகள். கண்ணாடி முகமூடி அணிந்த ஒரு பெண். அவள், அடேயப்பா! எத்தனை அட்டகாசங்கள் செய்கிறாள்? கடைசி அத்தியாயத்தில் அவள் தன் முகமூடியைத் திறந்ததும்... ஐயோ! அந்த அத்தியாயம் எத்தனைப் பேர்களை ஆச்சர்யத்தில் மடக்கியிருக்கிறது?...

அப்போதுகூட அவர் ஏழரைக் கொலைகள்' என்ற ஒரு நாவலைத்தான் பாதி எழுதிக் கொண்டிருந்தார். அவரது துப்பறிபவன் (டாயிலுக்கு ஷெர்லக் ஹோம்ஸ்போல இவருக்கு துரைமூர்த்தி) ஆறாவது பிணத்தை ஒரு ஹை பவர் லென்ஸ்வைத்து ஆராய்ந்துகொண்டிருந்தான். பக்கங்கள் பறந்துகொண்டிருந்தன. ஏழாவது கொலைக்கான செட்டிங்குகள் எல்லாம் சேர்த்து ஜோடித்தாகிவிட்டது. மயிர்க்கூச்செறியும்படியாக அந்தக் கொலை துரைமூர்த்தியையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு நடக்கப்போகிறது...

வதனராஜ், ‘ஒப்பன் ஹீம்நாவல் ஒன்று படித்துக்கொண்டிருந்தான். அதிபயங்கரமான நாவல் அது. நெற்றிப்புருவத்துக்குக் கொஞ்சம் மேலே முத்து வரிசையாக வியர்வைத் துளிகள் படிந்து இருந்தன. திடீரென வதனராஜன் தன் மேல் ஏதோ நிழல் படிவதை உணர்ந்தான்.

இப்படி எழுதினதும் நாகன்' (இதுதான் அவர் புனைபெயர்) தண்ணீர் குடிக்கக் கண்ணாடி டம்ளரை எடுக்க...

என்ன ஆச்சர்யம்... கிளாஸ் டம்ளர், (பக்கத்தில் மேஜையில் இருந்தது) மெள்ள மெள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. சுமார் ஐந்து அடி உயரம் வரை பிரயாணம் செய்து நின்றது. அப்புறம் லேசான சிரிப்புக் கேட்டது நாகனுக்குபயம் ஜிலீர் எனப் பரவியது உடம்பு பூராவுமாக!

சார் நாகராஜன்!

நாகராஜனின் விழிகள் பிதுங்கிக்கொண்டன! (கதையில் காமினியினதைப்போல)

சார் நாகராஜன்!” - ஸ்பஷ்டமான மனிதக் குரல்.

யாரு?

சார், நீங்க துளிகூட பயப்பட வேண்டாம். மரவட்டையைப்போல நான் ரொம்ப ஹாம்லெஸ் (Harmless).”

நீ யாரு முதல்லே!

என் பேர் பரந்தாமன். நான் ஒரு கிராஜுவேட்.

நீ எங்கப்பா இருக்கே... தெரியல்லையே?”

இங்கேதான் சார். நான் ஆவி!



ஹாவ்!நாகன் எழுந்தார். அவர் தோளை இரண்டு கரங்கள் மெல்லிதாக அழுத்தம் கொடுத்து, நாற்காலியில் மீண்டும் உட்கார வைத்தன. நாகராஜன் அசந்துவிட்டார்.

சார், என்னைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. நான் ஒன்றும் செய்ய மாட்டேன் சார். வீணாகக் கலவரப்பட்டாத்தான் அப்புறம் கேவலமாப் போய்விடும்.

அப்பா பரந்தாமா, நான் என்னப்பா ஏதாவது டெலிகைனஸிஸ், ப்ளான்ச் செட்ரைடிங், டெலிபதி, இதுகள்ல ஏதாவது படிச்சுப்புட்டு உன்னை வரவழைச்சேனா? இல்லையே! ஏன் என்கிட்ட வந்தே பயப்படுத்துறதுக்கு!

சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். உங்க நாவல்களை நான் எப்பவாவது இந்த முனிசிபாலிட்டி கருணாமூர்த்திகள் வெச்சு நடத்துற பார்க்குகளிலே மஞ்சள் வெளிச்சத்திலே படிக்கிறது உண்டு சார். எங்களோட லோகத்திலேயும் உங்களுக்கு நல்ல மார்க்கெட் உண்டு சார். பஞ்சாமி, உங்க நாவல்னா உசிரைவிடுவான். ராஜிக்குப் பொழுதுபோக்கே அதான் சார்.

பஞ்சாமி, ராஜி இவர்கள் ஆவி உலகவாசிகள் என்று ரொம்ப சஞ்சலத்துடன் புரிந்துகொண்டார் நாகன். அப்பா, நான் மனுஷன்தாம்பா. தயவுசெய்து நல்லவேளையா போய்விடு. எனக்கு என்னமோ எலும்பெல்லாம் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கிறாப்போல இருக்கே.

மெல்லிசான சிரிப்புச் சத்தம் கேட்டது.

சார், நீங்க பெரிய ஹ்யூமரிஸ்ட் (Humourist) சார். உங்க மாஸ்டர் பீஸ் விலாப்புறத்தில் கத்தியிலேதுரைமூர்த்தி அந்த...

என்கிட்ட என்ன காரியமா வந்தே? அதையாவது சொல்லேன்! எனக்கோ பதின்மூன்றாம் தேதிக்குள் இந்த நாவலை முடித்துவிட வேணும். பப்ளிஷர் இல்லாட்டா நாயா விழுவான்!

சார், நான் வந்தது ஒரே ஒரு ஹெல்ப்புக்காக சார்!

“...”

நல்ல பிசாசுஎன்று ஒரு கதை படிச்சிருக்கீங்களா சார்!

ஆமா!

அதைப்போல உங்களுக்கு ஸ்கொயர் வோர்ட்ஸ்க்கு ஆன்சர் கொண்டுவந்து கொடுத்து அப்படியே உங்களை பணத்தாலேயே அபிஷேகம் பண்ணுவேன் சார்! ஒண்ணு மட்டும் நீங்க செய்தீங்கன்னா...’'

என்னப்பா செய்யணும்?” ‘நாகனின்குரல் கலிஃபோர்னியாவிலிருந்து கேட்பதுபோல் இருந்தது.

சிம்பிள் சார். ஒரே ஒரு கொலை செய்யணும்!

என்ன!'’ தமிழ்நாட்டு எட்கர்வாலேஸுக்கு சிறுகுடலில் பாம்பு நெளிந்தது. இருதயத்தை நாய் கவ்வியது. (எல்லாம் அவர் வர்ணனைதான்.)

அந்த ஆவி மிச்சம் தண்ணீரில் பாதியை உறிஞ்சிக் குடித்து டம்ளரைக் கீழே வைத்துவிட்டது.

அப்பா, என்கிட்ட ரிவால்வர்கூட இல்லை உன்னைச் சுடுறதுக்கு!'’

சுட்டாக்கூட என்னைத் தாண்டிண்டுதான் குண்டு போகும் சார்!'’

நீ போ. எனக்கு தலை கிறுகிறுன்னு வரது.'’

சார், இதுவரைக்கும் நீங்க நாவல்களிலே என்ன அழகாக் கொலைகளை வர்ணித்திருக்கீங்க!'’

ஐயோ... ஐயோ!’'

நான் என்ன ஆயிரம் பேரைக் கொலை பண்ணச் சொன்னேனா? சும்மா ஒரே கொலை! சிம்பிள்... ஒரு கிச்சன் கத்தி, டொமேடோ நறுக்கிற கத்தி! இதை சிம்பிளா பக்கவாட்டிலே செருகிவிடவேண்டியது. பெண் பிள்ளைகள் விலாப்பாகமெல்லாம் சும்மா புது ரொட்டியாட்டம்தான் இருக்கும்.

மேலே நாகனின் தொண்டையில் ஒரு மேட்டூர் அணை எழும்பிவிட்டது. மண்டையில் பிரபஞ்சக் கிரகங்கள் அனைத்தும் சுற்றிவந்தன.

சார்... சார்... சார், மயக்கமா என்ன? பரபரப்புடன் ஒரு கண்ணுக்குத் தெரியாத கை அவரைத் தாங்கிப்பிடித்தது.

வேண்டாம் என்னைத் தொடாதே! என் எலும்பு பூரா கண்ணாடிபோல உடைந்துவிடும்சினிமா வசன பாணியில் உளறிக்கொட்டினார்.
சார், நான் என்ன சார் செய்தேன் உங்களுக்கு மயக்கம் வரதுக்கு?''

அப்பா (பெருமூச்சு) இந்தக் கதைகளை எல்லாம் நம்பாதே. கைபோகிற போக்கில் எழுதினது எல்லாம்...

ஒண்ணுமில்லை சார், ஒரு பெண்பிள்ளை... தெற்கு ராமநாதபுரத்தில் 18-ம் நம்பர் வீடு! பேசாம கத்தியை ஆப்பிள் பழத்திலே அழுத்தறாப்பலே அழுத்திவிட்டு வந்திடுங்க.''

அப்பா, நான் சொல்றதைக் கேட்காம நீபாட்டுக்கு உன் கதையையே சொல்லிண்டு போராயே, என்னாலே இப்ப...

பெயர்கூட நளினி. ஸார் நான் செத்துப்போய் இந்த ரூபத்துக்கு வந்ததே அவளாலேதான் சார்!

எனக்கு என்னமோ எல்லாம் பதர்றது.

நீ சத்தமில்லாம வந்த வழியே போய்டு.

சார், அவ்வளவு லேசுல விட மாட்டேன் சார். நான் சொல்றதையாவது கேளுங்களேன்.

நான் இந்தப் பெண்ணையே சுத்தி (ஆவியா இருக்கிறபோது இல்லை) இருந்தேன். ஒருநாள் டிஸ்டிரிக் போர்டு, ஆபீஸ் ரோடிலே தனியாய்ப் போயிண்டிருக்கிறபோது எதிர்ப்பட்டு ஏன் என்னையே சுத்திண்டு? கண்டபடி கலாட்டா பண்ணிண்டு இருக்கேனு கேட்டாள் சார். நான் சிகரெட் புகையை அவள் மூஞ்சியிலேயே ஊதினேன். அவள் ரொம்ப கோபம் வந்து, கையில் இருந்த பேனாக்கத்தியை விரித்து விலாவிலே குத்திவிட்டாள். அங்கேயே செத்து விழுந்துட்டேன். ஒரு டிரெய்னேஜ் மூடியைத் திறந்து என் பிணத்தை உள்ளே போட்டு மூடிவிட்டாள் சார்! அந்த இடம் அமானுஷ்யமான இடம் சார். அதனாலே என் பிணம் டீகம்போஸ் ஆகி வெளுத்து அடையாளமே தெரியாம மாறினப்புறம்தான் சார் இழுத்துப் போட்டாங்க. அதுவும் ஏதோ நார்றதேன்னு! பூ பூன்னு சங்கை ஊதிக் கடைசியிலே அநாதைப் பிணங்களைப் புதைக்கிற இடத்திலே புதைச்சுட்டாங்க. அங்கேதான் தற்போதைக்கு ஜாகை!

ஆவியா மாறின பிற்பாடு, அவளை விடாம அவள் வீட்டைச் சுத்தினேன்! ஆனா, அதுக்கும் அஞ்சாம யாரோ ஒரு மலையாளத்துக்காரனைக் கூப்பிட்டு மந்திரிச்சுட்டா! இப்ப அங்கே போனா சுளீர் சுளீர்னு ஷாக்அடிக்கிறது! ஹும் நீங்கதான் சார் என் மனசுப் பழியைத் தீர்க்கணும்.

அப்பா கிராஜுவேட். கதையே மக்னீஷியம் சல்பேட்டை முழுங்கிறாப்பலே பண்ணிடுத்தே, இனிமே எனக்கு ஏதப்பா சக்தி? என்னை விட்டுடுப்பா! உனக்குப் புண்ணியம் உண்டு.

நீ நூறு வருஷம்...

சார்... கதையிலே என்ன அநாயாசமாகக் கொலை பண்றீங்க? துளிக்கூட தேகத்திலே காயம் இல்லாத உள்ளுக்கும் மருந்து கொடுக்காம நடந்த கொலையை எல்லாம்... வர்ணிக்கிறீங்க! சும்மா இவளை அப்படி கழுத்தை மடக்கி வாய்க்காய்லே தள்ளிப்பிடுங்க. உங்களுக்கும் இவளுக்கும் ஸ்நானப்ராப்திகூடக் கிடையாது. எப்படியோ உங்க நாவல் சாமர்த்தியத்திலே 786-ல ஒரு பங்கு காட்டினாலே போதும் சார்.''

நாகனுக்கு மேலே அந்த ஆவி பேசினது கனவில்போல் கேட்டது. அப்புறம் நினைவுதப்பித் தலைதொங்கவிட்டுப்போய் வாயில் நுரைபடிந்துவிட்டது.

அந்த ஆவி டம்ளரில் மிச்சம் இருந்த கொஞ்சத் தண்ணீரை அவர் முகத்தில் மோதியடித்துவிட்டு அதைக் கீழே போட்டுவிட்டு ரொம்பப் பெரிய ஹாஸ்யத்தை ரசிப்பதுபோல சிரியோ சிரி என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டுவிட்டது. அதன் சிரிப்பொலி காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்தது.

நாகன் இப்போது அந்தக் கொலைக் கதைகளை விட்டுவிட்டார்... புருஷன்-பெண்ஜாதி, மனக்கசப்பு மாமியார் சண்டை, இத்யாதி விஷயங்களையே சுற்றி வந்தன அவர் கதைகள்... ஓர் எறும்புகூட செத்துப்போனது என்று சொல்லவில்லை.
(நன்றி:  ஆனந்தவிகடன்)
*** *** *** ***

Saturday 11 February 2017

படித்ததில் பிடித்தவை (கோபமுடையவர்கள் - யுகபாரதி கவிதை)


கோபமுடையவர்கள்...

"போக்குவரத்து நெரிசலுக்கிடையே 
நீந்தும் வாகனத்தில் 
நானும் ஒருவனாக  அமர்ந்திருந்தேன்.

ஒருவரை ஒருவர் 
அதீத வெறுப்போடும் 
அந்நியத்தோடும் பார்த்துக்கொண்டனர்.

சனப்பெருக்கத்துக்கு 
யார் யாரெல்லாம் காரணமென்று 
வசைப்பாடத் தொடங்கினர்.

அரசு ஏன் இதற்கெல்லாம் 
வழிவகை செய்வதில்லை என்றும் 
யாவும் ஊழல் மலிந்ததன் 
உபாதை என்றும்  பொருமினர்.

வஞ்சிக்கும் அதிகாரிகளை 
வாரித் தூற்றி வயிறெரிய 
சபித்தனர்.

பெரும் இரைச்சலுக்குப்பின் 
மெல்ல நகரத் தொடங்கின வாகனங்களும் 
மக்களிடமிருந்த கோபங்களும்..!"  


- யுகபாரதி.