எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 31 January 2022

படித்ததில் பிடித்தவை (“இடைவெளி” – ராணி திலக் கவிதை)


*இடைவெளி*

 

ஒரு கண்ணாடி தம்ளர்

அதற்கு

இடையே

ஒரு மணி நேர

தூரத்தில் ஒரு தாள்.

 

தம்ளர்

இங்கே

கவிழ்ந்துகொண்டிருக்கிறது

தாள்

மிக தூரத்தில்

நனைந்துகொண்டிருக்கிறது..!

 

*ராணி திலக்*


Sunday 30 January 2022

*பார்வை பிறழ்வு*

 

கூட்டமில்லாத ரயிலில்

கூடை நிறைய

வாழைப்பழத்துடன்

நான் வாங்கிக் கொள்வேன்

என்ற எதிர்பார்ப்பில்

விற்பவரின் பார்வையும்...

 

அவரது பார்வையை

உணர்ந்து

எனது எண்ணம்

செயலாகும் முன்னரே,

 

என்னை கடந்து

சென்று விடுகிறது

அந்த எதிர்பார்ப்பும்...

அதனை உணர்ந்த

எனது செயல்பாடும்..!

 

*கி.அற்புதராஜு*


Saturday 29 January 2022

படித்ததில் பிடித்தவை (“காத்திருத்தல்” – ராஜா சந்திரசேகர் கவிதை)



*காத்திருத்தல்*

 

ஒரு முறை

உன்னைப் பார்த்துவிட்டுப்

போக வேண்டும் என்று

காத்திருக்கிறேன்

 

நீயோ

நான் போனபின்தான்

வரவேண்டும் என்று

காத்திருக்கிறாய்..!

 

*ராஜா சந்திரசேகர்*





Friday 28 January 2022

படித்ததில் பிடித்தவை (“நீயும்... நானும்...” – நகுலன் கவிதை)

 


*நீயும்... நானும்...*

 

உனக்கு

நீ

இருப்பதால்

நான்

உண்டு;

எனக்கு

நீ

இல்லையென்றால்

நான்

இல்லை..!

 

*நகுலன்*



Thursday 27 January 2022

படித்ததில் பிடித்தவை (“அழைப்பு” – யாத்திரி கவிதை)

 


*அழைப்பு* 

 

அறிந்திராத

புதிய எண்ணின் அழைப்பு

அலைபேசியின் அந்தப்புறம்

மிகப்பழகிய மௌனம்

 

நல்லாருக்கியா? என்கிறேன்

ம்ம்ம் என்று அழைப்பினைத் துண்டிக்கிறாள்.

 

அவளுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது,

எனக்கு கேட்க வேண்டியிருந்தது,

காலத்திற்கு தவிர்க்கவேண்டி..!

 

*யாத்திரி*


Wednesday 26 January 2022

படித்ததில் பிடித்தவை (“ஸ்டுபிட்ஸ்” – இசை கவிதை)

 


*ஸ்டுபிட்ஸ்*

 

அவ்வளவு பிரதானமான சாலையில்

அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான்.

பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் பார்த்தார்.

சுதாரித்துக் கடந்த பிறகு

காலுன்றி நின்று

சாலையைத் திரும்பிப் பார்த்தார்.

 

அதிகாரிகளைப் பார்த்தார்...

அரசைப் பார்த்தார்...

அமைச்சரைப் பார்த்தார்...

முதலமைச்சரை, பிரதமரைப் பார்த்தார்...

ரோடு காண்ட்ராக்டரைப் பார்த்தார்...

 

அந்தப் பள்ளத்துள்

யார் யாரையெல்லாம் பார்க்க முடியுமோ

அத்தனை பேரையும் பார்த்தார்..!

 

*இசை () ஆ.சத்யமூர்த்தி*




Tuesday 25 January 2022

படித்ததில் பிடித்தவை (“பாவனை” – யுகபாரதி கவிதை)

 


*பாவனை*

 

ஒருத்தியைக்

காதலிப்பது போன்ற பாவனையிலிருந்து

ஆண்கள் விலகுவதில்லை.

 

அந்த பாவனையில்

தன்னைக் கரைத்துக்கொள்வது

அவர்களுக்கு உவக்கிறது.

 

தாங்கள் கட்டமைக்கும் பாவனையை

ஒருகட்டத்தில் உண்மை எனவும்

கருதிவிடுகிறார்கள்.

 

பாவனைகளை சம்பாதித்து

முத்தமும், குழந்தைகளும் கூட

பெற்றுவிடுகிறார்கள்.

 

பாவனை கூட்டிலேயே

பொழுதுகளைக் கடத்துகிறார்கள்.

 

வேறு என்ன செய்வார்கள்

வாழ்வை பாவனையாக

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்..!”

 

*யுகபாரதி*



Monday 24 January 2022

படித்ததில் பிடித்தவை (“சாயல்” – கல்யாண்ஜி கவிதை)


*சாயல்*

 

என் சின்ன வயதில்

சட்டையில்லாத அப்பா

எப்படியோ இருப்பார்.

அவருடைய தளர்ந்த இந்த வயதில்

சட்டை போட்டால் அப்பா

எப்படியோ இருக்கிறார்.

அப்படியே இல்லாமல் இருப்பதுதான்

அவருடைய சாயல் போல..!

 

*கல்யாண்ஜி*




Sunday 23 January 2022

படித்ததில் பிடித்தவை (“தெய்வங்கள்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*தெய்வங்கள்*

 

குழந்தைகள்

சிறு தெய்வங்கள்

குழந்தையிடம் சொன்னேன்.

 

சிரித்துச் சொன்னது

தெய்வங்கள்

பெரிய குழந்தைகள் என்று..!

 

*ராஜா சந்திரசேகர்*




Saturday 22 January 2022

படித்ததில் பிடித்தவை (“அழகாய்ப் பெருக” – கல்யாண்ஜி கவிதை)

 


*அழகாய்ப் பெருக*

 

தானாக

அந்தத் தண்ணீர்க் குவளை சரிந்து

தரையில் பெருகியது நீர்.

நானாக மீண்டும் ஒரு

குவளையைச் சரித்தேன்.

சரிந்த பிறகு அழகாய்ப் பெருக

நீராய் இருக்க வேண்டும்

அதுவும் தரையில்..!

 

*கல்யாண்ஜி*




Friday 21 January 2022

படித்ததில் பிடித்தவை (“பூக்களின் குழந்தை” – ராஜா சந்திரசேகர் கவிதை)


 

*பூக்களின் குழந்தை*

 

மரத்தை அசைக்கிறாள் சிறுமி

பூக்கள் உதிர்கின்றன

கைதட்டி சிரிக்கிறாள்

மறுபடி அசைக்கிறாள்

தொலைவிலிருந்து

கூப்பிடுகிறார் தாத்தா

சிறுமியின் கைகள்

சொன்னதைக் கேட்டு

வடிந்து விட்டன்

அநேகமாய்

எல்லா பூக்களும்

அழைத்துப் போகிறார் தாத்தா

திரும்பிப் பார்த்தபடி செல்லும்

சிறுமியின் தலையில்

ஒட்டிக் கொண்டிருக்கின்றன

சில பூக்களும்

மரத்தின் பிரியமும்..!

(நேத்ராவுக்கு)

 

*ராஜா சந்திரசேகர்*