எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 31 May 2014

சாக்லேட் சில்லரைகள்...


“ஒரு ரூபாய் சில்லரை
பாக்கிக்காக...
காசு கொடுத்து
வாங்கிய பொருளுடன்
சாக்லேட்டையும் சேர்ந்தே
கொடுத்து அதிலும்
லாபம் பார்க்கும்
கடைக்காரரிடம்
நம்மால் கொடுக்க
முடிவதில்லை
ஒரு ரூபாய்க்கு பதிலாக
சாக்லேட்டை..!”
          -  K. அற்புதராஜு.

      

Friday 30 May 2014

படித்ததில் பிடித்தவை (அந்தந்த வயதில் - வைரமுத்து கவிதை)


கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்தக் கவிதை, "இந்த பூக்கள் விற்பனைக்கல்ல" என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
அந்தந்த வயதில்
இருபதுகளில்
எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
வாத்சாயனம் கூடக்
காமமல்ல, கல்விதான்..
படி!
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டால்,
எந்திர அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்இன்னும்
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்
*****************************
முப்பதுகளில்
சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.
********************
நாற்பதுகளில்
இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி..
எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
அதில்
இருவரையும் புதை!
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இன்னொரு காதல் வரும்!
புன்னகைவரை போ..
புடவை தொடாதே.
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..
**************************
ஐம்பதுகளில்
வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்!
கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
*********************
அறுபதுகளில்
இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..
***********************************
எழுபதுக்கு மேல்
இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ
ஜன கண மண

         -  கவிஞர். வைரமுத்து.

Thursday 29 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

                                                                                     
“ஒண்ணு ரெண்டு மூணுயென
எண்ணியும்...
ராமா ராமாவென
உச்சரித்தும்...
கண்ணை மூடி
பல்லைக் கடித்து
அடக்கியும்
அடங்காமல்
மீண்டும் பார்த்துவிட்டேன்...

பேருந்தில் கை தூக்கி
நின்றவளின்
அக்குள் கிழிசலை..!”

                   -   மதியழகன் சுப்பையா.
         (மல்லிகைக் காடு)

Wednesday 28 May 2014

குருவி சத்தம்










“நகர வீதிகளில்...
குருவிகளின் சத்தம் கேட்டுத்
திரும்பினால்...
அலைப்பேசியில் ஒலிக்கிறது
இளையராஜாவின் இசையில்
சின்னத்தம்பி படத்தில் வரும்
‘போவோமா...ஊர்கோலம்...’
பாடலின் துவக்கத்தில் வரும்
குருவிகளின் சத்தம்..!

சில நகர வீடுகளிலும்...
குருவிகளின் சத்தம் கேட்கும்
அழைப்பான்களின் புண்ணியத்தால்..!

கிராமங்களைப் போல 
மரங்களையோ...குருவிகளையோ...
பார்க்கவே முடிவதில்லை
நகரங்களில்..!”

                   -   K. அற்புதராஜு.