எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 31 December 2013

பெயர் சூட்டல்

                                                                                   
“தனது பேரக்குழந்தைக்கு
பெயர் சூட்டும் உரிமை
மறுக்கப்படும் கட்சித்தலைவர்,

தொண்டர்களின் குழந்தைகளுக்கு
பெயர் சூட்டுகிறார்..!”

   -    K. அற்புதராஜு

Monday 30 December 2013

மனித உறவு

                                                                                 
“கொலைக்காரர்களுடன்தான்
உறவாடுகின்றன....

ஆடுகள்,
கோழிகள்,
மாடுகள்,
மீன்கள்,
செடிகள்,
மரங்கள்..!”

          -    K. அற்புதராஜு

Sunday 29 December 2013

அதிகாரி

                                                                     
“ஆறு நாட்கள்...
அரசு அலுவலகத்தில்
முதல் நிலை அதிகாரி.

ஞாயிறுக்கிழமை...
வீட்டு அதிகாரிக்கு
கடை நிலை ஊழியர்!”


      -    K. அற்புதராஜு

Saturday 28 December 2013

நினைவோ ஒரு பறவை...

                                                                       
“காலையில்
யோகாசனம்
செய்யும்போதெல்லாம்...

பள்ளியில் படித்த
பத்மாவும்,
கல்லூரியில் படித்த
சாந்தியும்
நினைவுக்கு
வந்து செல்கிறார்கள்...”

-    K. அற்புதராஜு


(பத்மாசனம், ஓம் சாந்தி ஒம்)

Friday 27 December 2013

குங்குமப்பொட்டு

                                                                               
“குளியல் அறையிலும்,
படுக்கை அறையிலும்
கண்ணாடியிலும்,
கதவிலும்
ஒட்டப்பட்டிருக்கும்
மனைவியின்
ஸ்டிக்கர் பொட்டுகளை
பார்க்கும்போதெல்லாம்...

அம்மா வைக்கும்
குங்குமப்பொட்டு
நினைவில் வந்து செல்லும்..!”


-    K. அற்புதராஜு

Thursday 26 December 2013

பாலம்

                                                               
“மேம்பாலம் கட்ட
இடிக்கப்பட்ட
கல்யாண மண்டபத்தை
பார்த்து கண்கலங்கும்
புதுமணத்தம்பதிகள்!”


-    K. அற்புதராஜு

Wednesday 25 December 2013

பெயரால் மாறும் வாழ்த்துக்கள்...

                                                                                               
 
“கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
இந்துவான எனக்கும்,
தீபாவளி வாழ்த்துக்கள்...
கிறிஸ்துவரான சங்கருக்கும்
அலுவலகத்தில் பணியில் சேர்ந்த
புதியவர்கள் சொல்லும்போது
ஏற்றுக்கொள்வது...
மகிழ்ச்சியான நிகழ்வுதான்!”

               -- K. அற்புதராஜு

Tuesday 24 December 2013

மாமுல்

                                                                                 
“பெட்டிக்கடை,
மளிகைக்கடை,
ஸ்டேஷனரி,
பேக்கரி...
எங்கு போலீஸ்காரர்
பொருள் வாங்கினாலும்
இனாமாக வாங்குவதாகவே
தோன்றுகிறது நமக்கு!”

       -    K. அற்புதராஜு

Monday 23 December 2013

சிக்னல்

                                                                                           
“மின்சார ரயில் பயணத்துக்காக
பிளாட்பார பெஞ்சில்
காத்திருக்கும் குடும்பத்தில்
தாய், தந்தை, இரு மகள்கள்.

சிறியவள் ஓடிவந்து
சிக்னலைப்பார்த்து
ஹை... பச்சை லைட்
எரியுது’ என்றாள்.

அதை கவனித்த அவளது அக்கா
சிக்னலைப்பார்த்து
ஏய்! இது பச்சை இல்லை
நீலம்’ என்றாள்.

சிறியவள், ‘அம்மா... இங்க
பாரும்மா, இவ பச்சை லைட்டை
நீலம் என்கிறாள்’ என்றாள்.

சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த
தாய், தந்தை...
இந்த ‘நிறக்குருடு’
பிரச்சனையை
கவனிக்கவேயில்லை!”

               -- K. அற்புதராஜு

Sunday 22 December 2013

தேடல்

                                                                             
“சென்னை மாநகரம்
அந்தி வானம்
வானளாவிய கட்டிடங்கள்

மேலே வானத்தில்
கூட்டம் கூட்டமாக
பறவைகள்...

மரங்களை தேடி?”


-                                                            --  K. அற்புதராஜு

Saturday 21 December 2013

மனசு









“என்னதான் அழகான
ஆடை உடுத்தியிருந்தாலும்,
சமயத்தில்...
கிழிந்த உள்ளாடைகளை
தவிர்க்க முடியாதது போல...
நம் மனசும்!”

                   
 -    K. அற்புதராஜு

Friday 20 December 2013

முகமூடி

                                                                           
“முக்காடிட்டு
முழுவதுமாக
துணியால் மூடி
கருப்பு கண்ணாடியுடன்
இருசக்கர வாகனத்தின்
பின்னால் உட்கார்ந்து
செல்லும்
இளம்பெண்களை
யார் என்று
யாருக்கும் தெரிவதில்லை!

ஆனால்...
வாகனத்தை ஓட்டி
செல்பவர்...
சகோதரனாக இருந்தாலும்,
கணவனாக இருந்தாலும்,
காதலனாகவே
தோன்றும் எல்லோருக்கும்..!”

             -   K. அற்புதராஜு

Thursday 19 December 2013

வரிசை

                                                             
“மனிதர்கள்...

பேருந்திலோ,
ரயிலிலோ,
இடம் பிடிக்க
முண்டியடித்து
ஏறுவதையும்,

ஜன்னல் ஓர 
இருக்கை வழியே
கர்சீப் போட்டு
இடம் பிடிப்பதையும்,

பார்க்கும்போதெல்லாம்...

எதற்கும் வரிசையாக
செல்லும் எறும்புகளை நினைத்து
கூனிக்குறுகிதான் போகிறோம்!”

                -- K. அற்புதராஜு

Wednesday 18 December 2013

முதுமை



“நாம்
குழந்தையாக
இருந்தபோது
தாய், தந்தை
உதவியதுப்போல...


அவர்களுக்கு
வயதானப்பிறகு...
நாம்
உதவுவது
இல்லை!”

     -- K. அற்புதராஜு

Tuesday 17 December 2013

தொடர்பு எல்லை..!

                                                                                   
“கைப்பேசியில்
பேசிக்கொண்டோ...
பாடல் கேட்டுக்கொண்டோ...

சாலையை கடப்பவர்கள்,
வண்டி ஓட்டுபவர்கள்,
ரயில் தண்டவாளத்தை
கடப்பவர்கள்,
எல்லோருமே...

தொடர்பு எல்லைக்குள்தான்
இருக்கிறார்கள்...
எமனுடன்!”


-   K. அற்புதராஜு