எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 20 May 2018

கான்க்ரிட் கனவுகள்...


"கண்ணாடிக்கு வெளியே
காற்றில்
அசைந்து ஆடும்
மரங்களும் செடிகளும்
இயற்கையை
தவறவிட்ட என்னை
வருத்தப்பட வைக்கின்றன...

குளீரூட்டப்பட்ட
அலுவலகத்தின்
கண்ணாடி அறையில்
நான்..!"
             
-  கி. அற்புதராஜு.

Wednesday 2 May 2018

பூங்காவில் ஒரு மஞ்சள் பூ மரம்


அதிகாலை பூங்காவில்
நடைப் பாதையெங்கும்
இயல் வாகை மரத்தின்
மஞ்சள் பூக்கள்.

இயல்பாகவே
பூக்களை மிதிக்காமல்
நடக்கும் என்னை,
வழக்கமான நடையை
மாற்றி சற்றே
தாண்டி தாண்டி
நடக்க வைத்து
அழகு பார்க்கிறது
அந்த வாகை மரம்.

அடுத்த சுற்றில்
நடக்கும் என்னை
அதிக பூக்களை
விழ வைத்து
சற்றே காய்ந்த
பழைய பூக்களை
மிதிக்கும் நிலைமைக்கு
என்னை தள்ளி விட்டது
அந்த மரம்.

ஒரு வழியாக
அந்த சுற்றில்
மரத்தை கடந்த பின்
சற்றே அதிகமாக
வீசிய காற்றில்
இன்னும் அதிகமாக
பூக்களை உதிர்த்தது
வாகை மரம்.

அதற்கு மேல்
பூங்காவில் நடக்க
விருப்பமின்றி
வெளியேறிய என்னை
தடுக்க முடியாமல்
எனது ஊடலை
அந்த மரம்
ரசித்திருக்கும் போல...

அடுத்த நாள் காலையில்
நான் நடக்கும் பாதையை
அத்தனை சுத்தமாக்கி...
பூக்களை ஓரத்தில் மட்டும்
விழ வைத்து...
சற்றே தென்றலை
வீச வைத்து...
என்னை சமரசம்
செய்தது அந்த
மஞ்சள் பூ மரம்..!

- கி. அற்புதராஜு.