எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 26 January 2016

சட்டென மாறுது வானிலை


“அலுவலகம் முடிந்து
காலம் தவறிய திரும்புதல்

முகநூல், டுவிட்டரில்
இரவு நெடு நேர உலா

கைப்பேசியில்
நண்பர்களோடு அரட்டை

வார நாட்களில்
தாமதமான வருகையால்
தள்ளிப் போகும்
மாலை நேர ஷாப்பிங்

செவ்வாய், வெள்ளிக்கிழமை
கோவிலுக்கு செல்லாமல்
தவறிப் போகும்
சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமையில்
செய்யாமல் விட்ட
வீட்டு வேலை...

என அம்மா பார்வையில்
அப்பா செய்யும் ஒவ்வொரு
தவறுக்குப் பிறகும்
வரும் சண்டையை
சமாதானத்துக்கு மாற்றுகிறாள்
ஒரு சிறிய சிரிப்பில்
குட்டிப் பாப்பா..!”

-   K. அற்புதராஜு.

Thursday 14 January 2016

படித்ததில் பிடித்தவை (தக்காளி சட்னியும் கல்யாணமும் – எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)


தக்காளி சட்னியும் கல்யாணமும்...
இந்திராகாந்தி கொல்லப்பட்ட நாளில், திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கடைகள் மூடப்பட்டு பதற்றமான சூழல் உருவானது. சென்னையில் இருந்து குடும்பத்துடன் தென்காசிக்கு பயணம் செய்துக்கொண்டிருந்த எனது நண்பர் சேதுராமனின் கார், மதுரையை அடுத்த திருநகரைத் தாண்டியதும் நிறுத்தப்பட்டது. சாலையில் தொடர்ந்து பயணிக்க முடியாத நெருக்கடி.

எங்கே போவது, என்ன செய்வது எனப் புரியாமல் தடுமாறிப்போனார். அருகில் தங்குவதற்கு லாட்ஜ் எதுவும் இல்லை. மனைவி, மகள், பேரன், பேத்திகளை வைத்துக்கொண்டு இந்த இரவை எப்படிக் கடப்பது எனப் புரியாமல் காரை மெதுவாக ஒட்டிக்கொண்டு வந்து ஒரு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு ‘இரவு மட்டும் தங்க இடம் கிடைக்குமா?’ எனக் கேட்டார்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் தங்கிக்கொள்ள அனுமதி தந்தார்கள். வீடு தேடி வந்துவிட்டவர்களின் பசியை ஆற்றுவதற்காக தோசையும், மிளகாய்ப்பொடியும், தக்காளிச் சட்னியும் செய்துக்கொடுத்தார்கள்.

அடுத்த வீடு எனப் பார்க்காமல் ஐந்து தோசைகள் சாப்பிட்டார் சேதுராமன். அதோடு ‘சட்னி செய்தவர் யார்?’ எனக் கேட்டார்.

கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் மலர்விழி என அறிந்துக்கொண்டு அவளைப் பாராட்டினார். மறுநாள் நிலைமை சீரானதும் அந்தக் குடும்பத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு தென்காசிக்குப் புறப்பட்டார்.

இது நடந்த அடுத்த ஆண்டு, அமெரிக்காவில் உள்ள சேதுராமனின் மகனுக்குப் பெண் பார்க்கும் போது திடீரென மலர்விழியின் நினைவுவந்தது. நேரடியாக திருநகருக்குச் சென்றார். தன் மகனுக்கு மலர்விழியைப் பெண் கேட்டார். இரண்டு குடும்பங்களும் பேசி முடிவுசெய்து திருமணமும் நடந்துவிட்டது.

‘எப்படி அந்த பெண்ணைத் தேர்வு செய்தீர்கள்?’ எனப் பலரும் சேதுராமனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்... ‘எங்களை யாரோ எவரோனு நினைக்காமல் எங்கள் பசி அறிந்து, அந்தப் பொண்ணு தோசையும், சட்னியும் செய்து குடுத்திச்சு. அப்படிப்பட்ட மனசும் கைப்பக்குவமும் கொண்ட பொண்ணுதான் வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டேன். என் மகனுக்கும் பெண்ணைப் பிடிச்சிருந்தது. அவங்க வீட்ல பேசி சம்மதிச்சாங்க. உண்மையைச் சொல்லணும்னா... அந்தத் தக்காளிச் சட்னிதான் இந்தக் கல்யாணத்துக்குக் காரணம்.’

இந்தியச் சமூகத்தில்தான் இதுவெல்லாம் சாத்தியம்.  

-    எஸ். ராமகிருஷ்ணன் 
(“இந்திய வானம்” கட்டுரையிலிருந்து... – நன்றி: ஆனந்தவிகடன்)

*** *** *** ***

Friday 8 January 2016

சந்தோஷப் பக்கங்கள்...



“ரயில் பிரயாணத்தில்
பக்கத்துக்கு இருக்கையில்
அமர்ந்து இருப்பவர்
நான் படித்து முடித்த
புத்தகத்தின் பக்கத்தை
அவரும் படிக்கிறார் என்று
தெரிந்ததும்
தெளிவாகக் காட்டி
முடிக்கும் வரை
காத்திருந்து
அடுத்த பக்கத்தை
திருப்பும் எனக்கு
மனசுக்குள் மத்தாப்பு..!”

-   K. அற்புதராஜு.

Monday 4 January 2016

படித்ததில் பிடித்தவை (மழையொரு கடவுள் - தீபிகா தீபா கவிதை)


மழையொரு கடவுள்
அனேகருக்கு
மழையொரு மகிழ்ச்சி.

ஏழைகளுக்கு
மழையொரு கரைச்சல்.

குழந்தைகளுக்கு
மழையொரு பாடல்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு
மழையொரு விடுமுறை நாள்.

இளைஞர்களுக்கு
மழையொரு திருவிழா.

காதலர்களுக்கு
மழையொரு அட்சதை.

சங்கீதப் பிரியனுக்கு
மழையொரு இசை.

தினக் கூலிகளுக்கு
மழையொரு சுமை.

சூரியனுக்கு
மழையொரு ஓய்வு.

நோயாளிக்கு
மழையொரு பாரம்.

அகதிக்கு
மழையொரு ஞாபகம்.

தனித்திருப்பவனுக்கு
மழையொரு தாய்.

தவளைகளுக்கு
மழையொரு மேடை.

மண்ணுக்கு
மழையொரு வாசம்.

மரங்களுக்கு
மழையொரு பன்னீர்.

கவிஞர்களுக்கு
மழையொரு கவிதை.

கமக்காரனுக்கோ
மழையொரு கடவுள்.

- தீபிகா தீபா.

[கமக்காரன் உழவன், விவசாயி]