எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 31 March 2021

படித்ததில் பிடித்தவை (“பணி ஓய்வு” – ஏர்வாடியார் கவிதை)

 


*பணி ஓய்வு*

 

நான் இந்த

நாற்காலியை விட்டுத்தான்

எழுந்திருக்கிறேன்

இன்னொரு

சாய்வுநாற்காலியை

தேடி அல்ல..!

 

*ஏர்வாடியார்*




Tuesday 30 March 2021

படித்ததில் பிடித்தவை (“நகரச் சாவு” – பிருந்தா சாரதி கவிதை)

 


*நகரச் சாவு*

 

அடுக்குமாடி குடியிருப்பின்

வாகன நிறுத்துமிடத்தில்

கண்ணாடி அமரர் பெட்டிக்குள்

இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது

அதன் ஏதோ ஒருதளத்தில் வசித்த

மூத்தக் குடிமகனின் உயிர் பிரிந்த உடல்.

 

மதிய வெயிலின் உக்கிரத்தில்

மரணவாசனை வீசும் ரோஜா மாலைகளின்

விபரீத மணத்தை சுவாசித்துக் கொண்டு

நிழல் விலகிய சாமியானா பந்தல் தாண்டி

கசகசக்கும் வியர்வை துடைத்தபடி

அயர்ச்சியோடு நிற்கிறார்கள்

துக்கம் கேட்கவந்த

ஒருசில நகரவாசிகள்.

 

அந்நேரம் அவர்கள் உணர்வது

மரணத்தின் மாயப்புதிரையா..?

நண்பகல் வெறுமையையா..?

அன்று நின்ற தம் அலுவல்கள் குறித்த

ரகசியக் கவலையையா..?

 

இந்தக் கேள்விகள் ஏதுமற்று

போக்குவரத்து நிறைந்த

அந்த சாலையில்

கிடைத்த இடமொன்றில்

பச்சை மூங்கிலை வெட்டி

பாடை கட்டும் பெரியவர்

முணுமுணுக்கிறார்

 

சாவக் கூட

இந்த ஊர்ல

இடம் இல்லாமப் போச்சு..!

 

*பிருந்தா சாரதி*




Monday 29 March 2021

படித்ததில் பிடித்தவை (“ஆயிரம் இலைகளே...” - மனுஷ்யபுத்திரன் கவிதை)

 


*ஆயிரம் இலைகளே...*

 

தானும் ஒரு உதிரும் இலைதான் என

அறிந்துகொள்ளும் நாள்வரை

இலை நினைத்துக்கொண்டிருந்தது

தான்தான் மரமென…

 

அப்படியெனில்

மரம் என்பது என்ன?

அது ஆயிரம் ஆயிரம்

உதிரும் இலைகளின்

துயரக் கூட்டம்..!

 

*மனுஷ்யபுத்திரன்*




Sunday 28 March 2021

படித்ததில் பிடித்தவை (“இன்னும் கொஞ்சம்” – செல்வராஜ் ஜெகதீசன் கவிதை)

 


*இன்னும் கொஞ்சம்*

              

எழுத்தில் இருப்பதை

எடுத்துக் கொடுக்கும்

பணிதான்

என்றாலும்

 

இன்னும் கொஞ்சம்

சிரித்தபடி

இருக்கலாம்

இந்த

மருந்துக்கடை

விற்பன்னர்கள்..!”

 

*செல்வராஜ் ஜெகதீசன்*



Saturday 27 March 2021

படித்ததில் பிடித்தவை (“மல்லீப்பூ மொளம் பத்து ரூவா” – சுகுமாரன் கவிதை)

 


*மல்லீப்பூ மொளம் பத்து ரூவா*

 

சிறுகையால் சரமளந்து

கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த

பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:

இந்த முழத்துக்கா பத்து ரூபாய்..?’

 

சரத்தை வாங்கி

நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி

முறித்து வாங்கினார்,

 

நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்

இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்

மல்லிகைகள்

வாடியிருந்தன சோகம் தாளாமல்..!

 

*சுகுமாரன்*




Friday 26 March 2021

படித்ததில் பிடித்தவை (“ஓய்வு” – மகுடேசுவரன் கவிதை)

 


*ஓய்வு*

 

ஓய்வு என்பது

மரத்தடியில் அசைபோடும்

மாட்டுக்கு வாய்ப்பது போல்

வாய்க்க வேண்டும்.

 

உட்கார்ந்த பின்னும்

உண்ணிகளை

கடித்துண்ண

வெடுக்கென்று

தலைதிருப்பும்

நாய்க்கு வாய்ப்பதைப் போல்

அல்லவா வாய்க்கிறது நமக்கு..!

 

*மகுடேசுவரன்*




Thursday 25 March 2021

படித்ததில் பிடித்தவை (“அருந்தப்படாத தேநீர்” – நர்சிம் கவிதை)

 


*அருந்தப்படாத தேநீர்*

 

அருந்தப்படாத தேநீரின்

சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்

உறைந்து போயிருக்கலாம்

ஏதேனுமொரு

சோகமோ

கோபமோ..?

 

*நர்சிம்*

 





Wednesday 24 March 2021

படித்ததில் பிடித்தவை (“அன்பின் பாதைக்கு திரும்புதல்” – ப்ரியா பாஸ்கரன் கவிதை)

 


*அன்பின் பாதைக்கு திரும்புதல்*

 

பாதையின்

குறுக்கே கிடக்கிற

முறிந்த கிளையை

பார்வையற்ற ஒருத்தி

கையில் தட்டுப்பட்டதும்

சாலையோரத்தில்

நகர்த்துகிறாள்

சாலையெங்கும்

பூக்கள் மலர்கின்றன..!

 

*ப்ரியா பாஸ்கரன்*






Tuesday 23 March 2021

படித்ததில் பிடித்தவை (“மரண வீடு” – நிழலி கவிதை)

 


*மரண வீடு*

 

எல்லா செத்த வீடுகளிலும்

என் மனம்

என் சாவுக்காக அழுகின்றது.

 

தான் செத்த பின்

தனக்காக அழ முடியாத

துயரம் அதுக்கு.

 

பாவம்

வளர்த்தப்பட்ட உடலில்

தன் உடலை ஒட்டி

அழும் மனிதர்களில்

தன் மனிதர்களை ஒட்டி

வேவு பார்க்கின்றது

கள்ள மனசு.

 

ஒவ்வொரு சாவு வீடும்

தனக்கான

ஒரு ஒத்திகை பார்க்கும்

இடம் என்று

சொல்லுது

மனம்.

 

எல்லாச் சாவுகளின்

செய்திகளின் போதும்

எல்லா மரணம் பற்றிய

தகவல்களின் போதும்

விக்கித்து

தன் சாவை

நினைத்து ஒரு கணம்

தடுமாறுகின்றது.

 

எல்லா வீதி விபத்துகளும்

என்னை அச்சுறுத்துவன போன்றுதான்

எல்லாச் சாவுகளும்

என்னை அச்சுறுத்துகின்றன.

 

செத்தவருக்காக அழும் கண்ணீர்

துளிகளில் பல

எனக்காக அழுவன

என கண்கள் சொல்வதில்லை.

 

மரணம் பற்றிய

செய்திக் குறிப்புகளில்

என் சாவு

பற்றிய தேடல்களை

செய்கின்றது

மனம்..!

 

*நிழலி*