பொய்
“பழைய சேலை கேட்டு
ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.
வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்.
அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்..!”
- வண்ணதாசன்.