மனசுக்கும் கலர் இருக்கும்மா..! - மிஸ் யூ சுஜாதா
- பரிசல் கிருஷ்ணா
தீவிர வாசகர்கள் தவிர்த்து, மற்ற எல்லோரையும் விட அதிகமாய்
சுஜாதாவை மிஸ் செய்வது இவர்கள் மூவராகத்தான் இருக்கக்கூடும். கமல், மணிரத்னம் & ஷங்கர்! சுஜாதாவுடன் அத்தனை ‘கெமிஸ்ட்ரி’ இருந்தது இவர்களுக்குள்.
“சார்..
படம் பார்க்கற ரசிகன் மனசுல ஆணி அடிச்ச மாதிரி புரியணும்” என்று வசனம் கேட்டால் அவன் மனதில்
மட்டுமல்ல அவனது ஏழு தலைமுறைக்கும் புரியற மாதிரி எழுதித்தருவார் இந்த எழுத்து
ராட்சஷன். ஷங்கர் சொல்லுவார். ‘என் முழுப்படத்தின் கதையை சுஜாதா ஒரே வரியில்
சொல்லிவிடுவார்’. அந்நியனின், ‘தப்பென்ன
பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜ்னு.. விளைவோட சைஸைப் பாருங்க’ என்று அவர் எழுதியது ஓர் உதாரணம்.
மேலே ‘எழுதியவர்
– சுஜாதா’ என்று சொல்லும் டைட்டில் எந்தப்
படத்தினுடையது என்று கணிக்க முடியுமா உங்களால்? பலருக்குத் தெரிந்திருக்கலாம். நினைத்தாலே இனிக்கும். கமல் ரஜினி
நடிப்பில், பாலசந்தர் இயக்கி, 1979ல் வெளிவந்த படம். அப்போது
சுஜாதாவுக்கு வயது 44.
அதற்கு முன்பே காயத்ரி, ப்ரியா என்று இவரது கதைகள் படமாக
ஆக்கப்பட்டாலும் அவை இரண்டுமே ரஜினி படங்கள். இவரைப் படித்துப் படித்து, சந்திக்கும் ஆவலில் இருந்தவர் கமல்.
முதன்முதலாக கமலும் சுஜாதாவும் சந்தித்துக் கொண்டபோது கமலுக்கு வயது 23. சுஜாதாவுக்கு 41. ஒரு சிந்தனை சுவாரஸ்யத்திற்காகச்
சொல்கிறேன்.. இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டபோது ஷங்கரின் வயது 13. அன்றிலிருந்து 20 வருடம் கழித்து மூவரும் ‘இந்தியன்’ என்றொரு மெகா ஹிட் படத்தைக் கொடுக்கப்
போகிறார்கள் என்பதை, காலத்தைத் தவிர வேறு எவரும்
கணித்திருக்க முடியாது.
இந்தியன் படத்தில், நிழல்கள்
ரவியை கமல்... ஸாரி.. இந்தியன் தாத்தா கொல்லும் காட்சி. வெறும் இரண்டே
நிமிடங்களில் உங்களை உறைய வைக்கும் வசனங்கள்.
“நீ ஒருத்தன் வாங்கறதால உனக்கு கீழ
இருக்கறவனெல்லாம் வாங்கறான். இப்படித்தான் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை, நிதி, மின்சாரம், உணவு, சுகாதாரம், கல்வி, காவல், தொழில்-னு எல்லாத் துறைலயும் வாங்கி
வாங்கி நாட்டை வளர விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கீங்க. நல்ல
காத்தில்ல.. நல்ல பொருளில்ல.. நல்ல சாப்பாடில்ல.. ஏகப்பட்ட இயற்கை வளங்கள்
இருந்தும் இந்த நாடு பிச்சைக்கார நாடா இருக்கே... ஏன்..? ஒவ்வொரு இந்தியனும் கடனாளியானதுண்டா
மிச்சம். பக்கத்துல இருக்கற குட்டிக்குட்டி தீவெல்லாம் பெரிய பெரிய தீவா
வளர்ந்திருக்கே.. எப்படி... ஏன்?”
“அங்கெல்லாம்
லஞ்சம் இல்ல”
“இருக்கு...
இருக்கு.. அங்கெல்லாம் கடமைய மீறுறதுக்குதாண்டா லஞ்சம். இங்க கடமைய செய்யறதுக்கே
லஞ்சம்.. தேசிய ஒருமைப்பாடுங்கறது இந்த நாட்ல லஞ்சத்துல மட்டும்தாண்டா இருக்கு” என்று தொடர்ந்து அவர் பேசும்
வசனங்களின் வீரியம் 20 வருடங்கள் கழித்தும் வலிக்கிற நிஜமாய்
இருக்கிறது.
‘முதல்வன்’ படத்தின் ‘ரகுவரன்-அர்ஜுன்’ நேர்காணல் காட்சியை மறக்க முடியுமா? படத்தின் மிக முக்கியமான
திருப்புமுனைக் காட்சி அது. திரையில் இரு ஆண்கள் 15 நிமிடத்திற்கு நீள நீள வசனம் பேசிக் கொண்டிருப்பதை ரசிகன்
சலிக்காமல் பார்க்க வேண்டுமானால், வசனத்தின்
முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும்! ‘எதிர்கட்சிகிட்ட
எவ்ளோ வாங்கின’ என்று கேட்க, ‘நீங்க
எதிர்கட்சியா இருந்தா எவ்ளோ கொடுத்திருப்பீங்க’ என்ற பதில் கேள்வி, தமிழக அரசியல் தலைவர்களின்
எதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்த சுஜாதா குறும்பு.
போகிற போக்கில், நகைச்சுவை வெடியைக் கொளுத்துவதிலும்
இவர்தான் பெஸ்ட். அதாவது நல்ல சீரியஸான காட்சிக்கு இடையே ஒரு குண்டூசியைக் குத்தி, ஒரு நிமிடம் சிரிக்கவும், கொஞ்சம்
சிந்திக்கவும் வைக்கிற காமெடி.
முதல்வனில், சேல்ஸ் டாக்ஸ் கட்டணும் என்று ஒருநாள்
முதல்வனாக அர்ஜுன் கெத்து காட்டிக் கொண்டிருப்பதை ரகுவரன் டிவியில் பார்த்துக்
கொண்டே, தன்னருகே இருக்கும் மந்திரியிடம்
கேட்பார்.
“யோவ்
நிதித்துறை.. ஒருநாளைக்கு சேல்ஸ் டாக்ஸ் வருமானம் எவ்வளவு?”
அந்த மந்திரி, மிகவும் மரியாதையான குரலில் கேட்பார்: ‘கட்சிக்குங்களா..
நாட்டுக்குங்களா?’
அந்நியனில், விக்ரம் சொல்லும் ‘சொக்கன்
சிக்ஸ்டி ஃபைவ்’ சுஜாதாவைத் தவிர யார் மூளையிலும்
உதித்திருக்க வாய்ப்பில்லை. இந்தியனில் கவுண்டமணி சொல்லும் ‘என்னய்யா
மம்மியப் பாத்த எம்.எல்.ஏ மாதிரி பம்முறே’வை எழுதுகிற தில்லையும் சொல்லலாம்.
தனது மீடியா ட்ரீம்ஸ் மூலமாக படமும்
தயாரித்தார். கீழே இருக்கும் டைட்டில் எந்தப் படம் என்று யூகியுங்கள்.
ஞானராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வந்த பாரதிதான், மேலே நீங்கள் பார்த்த டைட்டில்.
படத்தில் க்ரியேட்டிவ் அட்வைஸர் சுஜாதா!
ஷங்கரைப் போலவே, மணிரத்னத்திற்கும் இவர்தான் ஃபேவரிட்.
ரோஜா, திருடா, இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத
எழுத்து என்று இவருக்கு சுஜாதா நெருக்கம். ஷங்கர், மணிரத்னம் இருவர் படங்களிலுமே, ரொமான்டிக்
வசனங்கள் இருக்கும், மெல்லிய நையாண்டித்தனமான காமெடி
தேவைப்படும், படு சீரியஸ் பட்டாசு வசனங்கள்
வேண்டிவரும். எல்லாவற்றிக்குமே கைகொடுக்ககூடியவராக சுஜாதா இருந்தார்.
கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன்
கதாபாத்திரம் எழுத்தாளர். பெயர் இந்திரா. யாரை நினைத்து வைத்திருப்பார் மணிரத்னம்
என்று சொல்லவேண்டுமா? சொந்த க்ரவுண்டில் செஞ்சுரி அடிக்கிற
ஜோரில் சுஜாதா வசனமெழுதியிருப்பார். படத்தில் இவர் வசனமெழுதிய ஒரு காட்சியை ‘நீளம்
கருதி, மனசே இல்லாமல் வெட்டிவிட்டேன்’ என்பார் மணிரத்னம். அதில் வருகிற வசனம்
ஒன்று: ‘மனசுக்கு கலர் இருக்கும்மா.. சிவப்பு, பச்சை, மஞ்சள், காவிக்கலர், கருப்பு, பழுப்புன்னு பலதும்’. எதைச் சொல்கிறார் என்பதை உணர்ந்து
கொள்ளும் வகையிலும், அதே சமயம் நேரடியாக இல்லாமலும்
எழுதுவதுதான் இவர் சிறப்பு.
இவர் எழுதிய ‘அஞ்சு
கோடி பேரு அஞ்சுகோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா?’ என்கிற ஒருவரி உணர்த்துகிற அரசியலைப்
புரிந்து கொண்டாலே, இவரைக் கொண்டாடாமல் விடமாட்டார்கள்.
சிவாஜியில், சுமனை மிரட்டும்போது ‘யார்டா
நீ?’ என்று கேட்க ‘பராசக்தி ஹீரோடா’ என்பார். சிவாஜி என்ற பெயரை தொடர்பு
படுத்தி, இப்படி எழுதும் சிந்தனைதான் சுஜாதா.
இப்படி கமல், ரஜினி, மணிரத்னம், ஷங்கர் என்று சினிமாவின் பட்டத்து
யானைகளின் முதுகில் சமமாக வலம் வந்து கொண்டிருந்தார் சுஜாதா என்றெழுதி இந்தக்
கட்டுரையை முடித்தால், ‘என்
பிறந்தநாளுக்காக சம்பிரதாய ஜல்லியாக எழுதி முடிக்கப்பட்ட ஒரு சாதாரண கட்டுரை’ என்று சுஜாதாவே திட்டுவார்.
ஒன்றே ஒன்று... இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் நிச்சயம் நாங்கள்
எல்லோரும் மிஸ் செய்கிற நபர் நீங்கள்தான் வாத்தியாரே!
*** *** ***