எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 31 March 2015

படித்ததில் பிடித்தவை (லிங்குசாமி கவிதை)

 பால்யம்
“எனக்கான சட்டையை
எந்த நிறத்தில் தேர்ந்தெடுப்பது?

எனது கார்
எந்த நிறத்தில் இருக்க வேண்டும்?

நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்
நேரம் வரும் போதெல்லாம்
நினைவில் வந்து போகிறது...

கொல்லைப் புறத்தில்
ஈன்ற நாய்க் குட்டிகளில்
எதைத் தேர்ந்தெடுப்பது
என்று குழம்பிய
சிறு வயது ஞாபகம்..!”
                    -  இயக்குனர். லிங்குசாமி.

Saturday 28 March 2015

படித்ததில் பிடித்தவை (கனிமொழி கவிதை)


“கல்யாண நேரத்தில்
வீடு வெள்ளையடிக்கப்பட்ட போது
விட்டத்தில்
அவள் சொருகி வைத்திருந்த
கனவுகளுக்கும்
நிறம் மாற்றப்பட்டது..!”
                                 -   கனிமொழி.
[ஓவியம்: இளையராஜா]


[கனவுகளை கடிதங்களாக மாற்றினால்
ஹைக்கூ வடிவம் பெறுகிறது – சுஜாதா]

Saturday 21 March 2015

படித்ததில் பிடித்தவை (கபிலன் கவிதைகள்)


“யாரை ரொம்பப் பிடிக்கும்?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி..!”
                                                      -   கபிலன்.


எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
எம் பேரு ஞாபகமிருக்கா
என கேட்டு விடுவானோ?

                                                     -   கபிலன்.

Wednesday 18 March 2015

படித்ததில் பிடித்தவை (கல்யாண்ஜி கவிதை)


“நெடும்பொழுது
அனைத்தையும் அணிந்து
நடக்கிறோம்.

சிறுபொழுது
எல்லாவற்றையும் களைந்து
கிடக்கிறோம்.

உயர உயரப் பறக்கிற பறவை
ஒரோர்கனம் பறக்காமல்
மிதக்கிறது.

இப்படித்தான் இருக்கிறது
எல்லாமும்..!”

                                           -  கல்யாண்ஜி.

Sunday 15 March 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“இருவிரல் குவித்துப்
பிடிக்கப்போகும் கணம்
அடுத்தடுத்த பூவுக்குப்
பறந்தமரும்
பட்டாம்பூச்சியைப் போல்
போக்குக் காட்டுகிறது 
குழந்தை
வீட்டுக்கு வரும்
அறிமுகமில்லாதவர்
அழைக்கையில்..!”

                         -   எழிலரசு.

Saturday 7 March 2015

ஹெல்மெட் செயல்கள்...


“பைக் சாவியோ...
கார் சாவியோ...
மற்றவர்களிடம்
கொடுக்கும் போது
அவர்கள் கைகளில்
வாங்கிக்கொள்ளாமல்
சாவியை
எதன் மீதாவது
வைக்கச் சொல்லி
எடுத்துச்செல்லும்போது
ஏதோவொரு
அசம்பாவிதத்தை
நினைவூட்டி
செல்கிறார்கள்..!”

-     K. அற்புதராஜு.

Tuesday 3 March 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


வேரடி நீரோட்டம்
“மாநகரப் பேருந்தில்
விளக்குகள் போடும்போது
கன்னத்தில் ஒற்றிக்கொள்பவரின்
கால்கள்
இன்னமும்
கிராமத்திலேயே இருக்கின்றன..!”
                            -   மணி ஜெயப்பிரகாஷ்வேல்.


பார்வை
“பண்டிகை நாளன்று
அம்மனுக்கு புடவை சாத்தி
தரிசிக்கும் கண்கள்
அதே இரவில் காத்திருக்கின்றன
நடன மங்கையரின்
ஆடை விலகலுக்காய்..!”
                                -   ந. சிவநேசன்.

(நன்றி: ஆனந்தவிகடன்)