*அழகர்*
டேய்… ரெண்டுபேரும்
கெளம்புங்கடா
சாமிபாக்கப்
போவோம்
வழக்கமா
நாங்க கூப்பிட்டா
வேலைருக்கு
நேரமில்லன்னு
சொல்றவரு அப்பா
அபூர்வமா
கூப்புட்டாரு
அம்மா
இதென்னா
ஊருல
இல்லாத
அதுசயமா
இருக்கு
அழகரே
அழகரப்பாக்கக்
கெளம்பிட்டாருன்னு
கிண்டலடிச்சாங்க
(அப்பாபேரு அழகர்)
நீயும்
வாம்மான்னேன்
இல்லப்பா
முடியல
கொஞ்சம்ன்னா
வயத்துல
தங்கச்சிப்பாப்பா
இருக்குல
கூட்டநெரிசல்ல
இடிச்சிருவாங்க
நீங்க
போயிட்டு
வாங்கன்னாங்க
எனக்கு
ஏழு வயசு
தம்பிக்கு ஆறுவயசு
கூட்டமாருக்கும்
பாத்துபத்தரமா
போய்ட்டு
வாங்கன்னாங்க
குசியாக்
கெளம்புனோம்
வழியெல்லாம்
ஒரே அழகர்
பாட்டுச்சத்தம்
வராரு
வராரு
அழகர் வராருன்னு
காதுகிளிஞ்சது
தண்ணிப்பீச்சுரவகளேல்லாம்
கூட்டம்
கூட்டமா
சலங்கையோசை
ஜலக்
ஜலக்ன்னு கேக்க
தண்ணிப்பீச்சுற பையில
தண்ணிய
ரொப்பி
பீச்சி
அடிச்சிட்டே
கோயிந்தா
கோயிந்தான்னு
கத்திக்கிட்டு
போயிட்டுருந்தாக
ஆங்காங்க
மண்டவங்கள்ல
மோரு
சக்கரப்பொங்கல்ன்னு
குடுத்துட்டு
இருந்தாக
கூட்டம்
நெறம்பி வழியுது
வெளியூர் சாமியாடிகளும்
கோயில்
மாட்டோட
உறுமி
மேளத்தோட
டுர்ர்ர்ர்ரூம்
டுர்ரூஊஉம்ன்னு
வாசிச்சிக்கிட்டு
ஓட்டமும்
நடையுமா
ஒடிக்கிட்டு
இருந்தாக
அழகரு
ஆத்துல இறங்குறப்ப
பாக்கனும்யான்னு
சொல்லிக்கிட்டு
வயசானவக
கூட
முண்டாசுகட்டி
நாமம் போட்டு
மூட்ட முடிச்சோட
போயிக்கிட்டு
இருந்தாக
போலீஸ்காரவுக
கூட்டத்தக் கண்ட்ரோல்
பண்ணமுடியாம
மைக்கில
பத்திரம்
பிள்ளைகளை
பத்திரமாப்
பாத்துக்கோங்க
நகை நட்டெல்லாம்
பத்திரமா
பாத்துக்கோங்க
சாக்கிரத சாக்கிரதன்னு
சொல்லிட்டு இருந்தாக
மேமாபாலம்
தெரிஞ்சது
அதுக்குக்கீழதான்
அழகரு
இறங்குவாரு
தங்கக்குருதையில
பச்சப்பட்டு
உடுத்தின்னு
ரேடியோவுல
ஒருத்தர்
சொல்லிட்டு
இருந்தாரு
வைகையாத்துல
தண்ணி
ஓரளவு
போய்கிட்டு
இருந்துச்சு
அங்க
மொட்டபோட்ட
புள்ளைகளைக்
குழுப்பாட்டிக்கிட்டு
இருந்தாக
திடீருண்ணு
கோவிந்தா
கோவிந்தான்னு
பெரிய
சத்தம் கேட்டது
எல்லாரும்
கண்ணத்துல
போட்டுக்கிட்டாக
சாமி
ஆத்துல
இறங்கிடுச்சு..
கூட்டம்
நெருக்கித்தள்ளுச்சு
அப்பாவோட
சட்டையப்
புடிச்சிக்கிட்டுப்
போயிட்டுருந்தோம்
தம்பி அப்பாவோட
சட்டைய
பிடிச்சிட்டுருந்தான்
அவன
நான்
பிடிச்சிட்டுருந்தேன்
ரொம்பக்கூட்டம்
நெருக்கவும்
அப்பா
தம்பியத் தூக்குங்க
கூட்டம்
அமுக்குதுன்னு
சொல்லிட்டு மேலபாத்தா
தம்பி
வேற யாரோட
சட்டையவோ
பிடிச்சிட்டுருக்கான்
அப்பா
அப்பான்னு
கத்துனோம்
அவரக்கூட்டத்துல
விட்டுப்புட்டோம்
கூட்டம்
தள்ளுது
என்னா
பன்றதுன்னு தெரியல
தம்பி
அழுக
ஆரம்பிச்சிட்டான்
அப்பா
அப்பான்னு
நான் சொன்னேன்
பயப்படாதடா
நானிருக்கேன்
எப்புடியாவது
வீட்டுக்கு
போயிடலாம்னு
கையில
காசுமில்ல..
ரொம்பச்
சிரமப்பட்டு
கூட்டத்த விட்டு
வெளியே
வந்தோம்
அப்பவும்
கூட்டம்தான்
தம்பிப்
பசிக்குதுன்னான்
வாடான்னு கூட்டிட்டு போய்
மோர்
வாங்கிக்குடுத்தேன்
அப்புறம்
ஊருக்குபோற
வழி கேட்டு
நடக்க
ஆரம்பிச்சோம்
காலெல்லாம்
வலிச்சது
இன்னாடா
அழகரு
இப்புடி பண்ணிப்புட்டாரேன்னு
ரெண்டு
அழகர் மேலயும்
கோவமா
வந்துச்சு
ஆனா
என்னா பண்ணுறது
சாயங்காலமா
அங்கங்க
கேட்டுக்கிட்டே
ஊரு
கிட்டபோயிட்டோம்
அப்பத்தான்
எதித்தாப்புல
கருப்பையா
மாமா
சைக்கிள்ள
வாரது தெரிஞ்சது
மாமான்னு
கூப்புட்டோம்
அவருபாத்துட்டாரு
எங்கடா போனீங்க
ஒங்க
அம்மா
அழுத்துக்கிட்டுருக்கு
ஒங்கப்பா
ஒங்களை தேடி
போயிருக்காரு
வாங்கடான்னு
சைக்கிள்ள
ஏத்திக் கூட்டிட்டுப்
போனாரு
வீட்டுக்கு
வீட்டுல
ஒரே கூட்டம்
ஆளாளுக்கு
பேசிக்கிட்டு இருந்தாக
நாங்க போனதும்
அம்மா
வாரி அணைச்சி
மொச்சுமொச்சுன்னு
முத்தமாக் குடுத்தாக
கண்ணெல்லாம்
தண்ணியா
ஊத்துச்சு
எம்பிள்ளைக
வந்த்துட்டாக
வந்துட்டாகன்னு
சந்தோசத்துல அழுதாக
அழகரு
கொண்டாந்து
சேத்துட்டாருன்னு
கும்புட்டாக
தம்பி
புகார் குடுத்தான்
இவன்
என்னைய
நடக்க வைச்சிட்டான்னு
காலெல்லாம் வலிக்குதும்மா
இவன
அடிங்கன்னான்
அம்மா
செல்லமா
கன்னத்துல
தட்டி
அடிச்சாச்சிடான்னாங்க
நீங்க
சரியாவே
அடிக்கலன்னு
கோவிச்சிக்கிட்டான்
தம்பிப்பயபுள்ள...
*அ.முத்துவிஜயன்*