எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 31 March 2022

படித்ததில் பிடித்தவை (“தவம்” – செ.புனிதஜோதி கவிதை)

 


*தவம்*

 

அனலைத்தாங்கி கொண்டு

தீச்சட்டி எடுக்கும்

மல்லிகாவின் மகளுக்கு

வரன்

பார்க்கும் படலம்

இந்த வருடத்திலாவது

தீரவே்ண்டும்.

 

மாவிளக்கு எடுக்கும்

அன்னத்தின் கணவனுக்கு

உடல்நிலையில் முன்னேற்றம்

ஏற்படவேண்டும்.

 

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே

பொங்கல் வைக்கும்

ரத்தினா மகனுக்கு

இந்த  வருடத்திலாவது

வேலைக்கு மனுபோடும்

வேலை ஓயவேண்டும்.

 

இப்படி ஒவ்வொருவருக்காய்

வேண்டிக்கொள்ளும்

அம்மாவின் உலகம்

நம்மையே சுற்றி வரும்

நிலவின் சாயலானது..!

 

*செ.புனிதஜோதி*


Wednesday 30 March 2022

*குழந்தைகளின் உலகம்*

 


என்னவாகப் போகிறாய்..?

என்ற கேள்விக்கு

ஏரேப்பிளேன் ஓட்டும் பைலட்...

டிரையின் டிரைவர்...

இல்லை... இல்லை...

ஐஸ் விற்கப்போகிறேன்.

என்கிறான்

குட்டிப் பையன் ராகவ்.

 

குழந்தைகள் எப்போதுமே

ஏற்ற தாழ்வு பார்க்காமல்

அவர்களுக்கு மிகவும் பிடித்த

விஷயங்களையே பேசி

வியக்க வைக்கிறார்கள்..!

 

 *கி.அற்புதராஜு*


Tuesday 29 March 2022

படித்ததில் பிடித்தவை (“இரக்கம்” – பிருந்தா சாரதி கவிதை)


*இரக்கம்*

 

இருட்டின் மீதும்

இரக்கம் கொண்டு

சுடரின் கீழேயே

இருளை வசிக்க விடுகிறது

விளக்கு..!

 

*பிருந்தா சாரதி*




Monday 28 March 2022

படித்ததில் பிடித்தவை (“இப்போது நான்” – வண்ணதாசன் கவிதை)

 


*இப்போது நான்*

 

ஆணா பெண்ணா என்ற

அடையாளமற்ற மரப்பாச்சி.

 

சின்ன வயதில்

அக்கா விளையாடுகையில்

தென்னங்கீற்றில்

தலைப்பாகை கட்டிய

ஒரு ஆணாக இருந்தது.

 

தம்பி விளையாடும் போது

மஞ்சள் ரிப்பனைப்

புடைவையாகச் சுற்றிய

ஒரு பெண்ணாக இருந்தது.

 

இப்போது நான்

எடுத்துப் பார்க்கையில்

அம்மையப்பனாய்

ஆதிமூலமாய்..!

 

*வண்ணதாசன்*



Sunday 27 March 2022

படித்ததில் பிடித்தவை (“சோற்றுக்கலையும் வாழ்க்கை” – கல்யாண்ஜி கவிதை)


 *சோற்றுக்கலையும் வாழ்க்கை*

 

தொட்டிச் செடி அவ்வப்போது

துளிர்த்துக்கொண்டிருக்கிறது.

பருவம் பாராமல்

உதிர்ந்துகொண்டே இருக்கிறது

சிவப்புப் பூ.

 

பால்காரக் குவளை சிந்திய

பாலை நக்கிவிட்டு

அற்புதமாகப் பார்க்கிறது

குட்டி போட்டு

மடி தொங்கும் மணி.

 

சுத்திகரிக்க வரும் மூக்கம்மா

கூடைப் பக்கத்தில்

விட்டுப்போன குழந்தை

பேசுகிற பாஷை

எப்போதும் உயரத்திலேயே

இருக்கிறது.

 

சுற்றிலும்

நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

பார்க்கவிடாமல் வாழ்க்கை

நெற்றியில்

சுருங்கிக் கனக்கிறது.

 

சூரியனை

ஆற்றங்கரை மணலை

தொட்டாற்சுருங்கிச் செடியை

பாசஞ்சர் ரயிலின்

அற்புத இரைச்சலை

பட்டாம்பூச்சியை

தொலைத்துவிட்டு

நாற்காலிக் கால்களில்

நசுங்கிக் கிடக்கிறது

சோற்றுக்கலையும் வாழ்க்கை..!

 

*கல்யாண்ஜி*




Saturday 26 March 2022

படித்ததில் பிடித்தவை (“பிதுர்தோஷம் மாற” – தெறி ராஜ்குமார் கவிதை)

 


*பிதுர்தோஷம் மாற*

 

அப்பா படத்தில் மாலையிட்டு

பாயாசம், பப்படம் சோறு எடுத்து

காக்கைக்கு கொண்டு வைக்க

உள் பயத்தோடு

பிகுசெய்து போகும் காக்கை

பின்

காகாசொல்லி

காகம் வந்து சோறு தின்று போனபின்பு

பிள்ளைகள் வந்து உண்ணும்

மறுநாள் வரும் காக்கை

ஒரு பிடி சோற்றுக்காய்

காகாவென கரையும்

அப்பாவைப் போல..!

 

*தெறி ராஜ்குமார்*

Friday 25 March 2022

படித்ததில் பிடித்தவை (“சிலந்தியும் பின்னொரு நாளும்” – ஏ.ஆர்.வரதராஜன் கவிதை)


*சிலந்தியும் பின்னொரு நாளும்*

 

வீட்டிற்கு வண்ணமடிக்கும் போதுதான்

அதுவும் தொலைந்திருக்கக் கூடும்.

 

கருப்பாய் சாம்பல்நிற புள்ளி

முதுகின் மீது

அடையாளமாய் காணப்படும்.

 

தன் வலையை

அம்மாவின் நீண்ட

ஒட்டடைக்குச்சிக்கு

அடிக்கடி இழந்தாலும்

சிறுபொழுதிற்கெல்லாம்

புதுவலையில்

தோன்றியிருக்கும்.

 

அதன் தேடலெனக்கு

இன்னும் தீர்ந்திடவில்லை.

 

பின்பொருநாள்

முகப்பின் தாழ்வாரத்தில்

தெரிந்தது

ஒரு சிலந்தியின் வலை.

 

அவசரமாய் கவனித்தேன்.

அதே கருப்பு சிலந்தி தான்

ஆனால் முதுகில்

சாம்பல்நிற

புள்ளி மட்டுமில்லை..!

 

*ஏ.ஆர்.வரதராஜன்*


Thursday 24 March 2022

படித்ததில் பிடித்தவை (“திருத்தப்பட்ட வருத்தம்” – ஈரோடு தமிழன்பன் கவிதை)

 


*திருத்தப்பட்ட வருத்தம்*

 

இறந்தவன்

இறுதிப் பயணத்தில்

எத்தனை பேர் வருகிறார்கள்

என்று

ஒருமுறை கண்களைத்

திறந்து பார்த்தான்.

 

வாழ்ந்ததற்கு

வருத்தப்பட்டு மறுபடியும்

கண்களை மூடிக்கொண்டான்..!

 

*ஈரோடு தமிழன்பன்*