எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 31 October 2020

படித்ததில் பிடித்தவை (“வரம் கேட்கிறேன்” – எம்.ஜி. கன்னியப்பன் கவிதை)

 


*வரம் கேட்கிறேன்*

 

வரம் கேட்கிறேன்…

வேறென்ன கேட்பேன்

பராசக்தி..?

 

வில்லங்கம் எதுவுமில்லா

காணிநிலம்.

அதில்

தீப்பிடிக்காத

ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை.

 

அடைப்பில்லா

ட்ரைனேஜ் கனெக்க்ஷன்.

 

வைரஸ் வராத

கம்ப்யூட்டர்.

விளையாடி மகிழ

வெப்சைட்.

 

சரியான முகவரியோடு

எலக்க்ஷன் கார்டு.

 

பக்க விளைவில்லா

பாஸ்ட் புட் அயிட்டங்கள்.

மறக்காமல்

கொஞ்சம் மினரல் வாட்டர்.

வேறென்ன கேட்பேன்

பராசக்தி..?

 

இவை யாவும்

தரும் நாளில்...

அதிர்ச்சியில்

இறக்காமல் இருக்க

கொஞ்சம் ஆயுள்..!

 

*எம்.ஜி. கன்னியப்பன்*

Friday 30 October 2020

படித்ததில் பிடித்தவை (“தமிழ் வாழ்க்கை” – மனுஷ்யபுத்திரன் கவிதை)

 


*தமிழ் வாழ்க்கை*

 

அழைப்பு மணிகள்

வேலை செய்யாவிட்டாலும்

வந்த யாரும் திரும்பிப் போனதில்லை.

 

குளியலறைக்குத் தாழ்ப்பாள் இல்லாத

இந்த ஒன்றரை வருடத்தில்

யாருடைய அந்தரங்கத்திற்கும்

அபாயம் நிகழ்ந்துவிடவில்லை.

 

நாற்காலியின் ஒடிந்த கால்

சிறு சமன் குலைவுக்குமேல்

விருந்தாளிக்கு

எந்த அவமதிப்பையும் ஏற்படுத்தாது.

 

ஒரு வாரமாய்

பிரேக் சரியில்லாத வாகனத்தில்தான்

கடந்து திரும்புகிறேன்

தெய்வம் துணையிருக்கும் இந்த நகரத்தை.

 

அடிவயிற்றின் இடப்பக்க வலி

இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது

குறிப்பிட்ட கோணத்தில்

கொஞ்சம் படுத்துக் கொண்டால்

சமாளித்துக் கொள்ளலாம்.

 

எல்லா இடத்திலும்

சீர்படுத்த வேண்டியவை ஏராளம்

என்றாலும் சிக்கலற்றது

தமிழ் வாழ்க்கை..!

 

*மனுஷ்யபுத்திரன்*

Thursday 29 October 2020

படித்ததில் பிடித்தவை (“நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்!” கண்டராதித்தன் கவிதை)

 


*நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்!*

 

நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்

யாரைப்போல இருப்பேனோ

நேற்று அவளை நான் பார்த்தேன்.

பேருந்தின் கடைசியில் நின்றிருந்த

அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்.

அந்த நாசி,

அந்தக் கண்கள்,

கருங்கூந்தல்,

மாநிறம்,

சற்றே திமிரான பார்வை

வடிவான தோற்றமென

நான் பெண்ணாய் பிறந்தால்

வடிவெடுக்கும் தோற்றம்தான் அது.

 

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்

பார்த்துக்கொண்டோம்.

 

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்

பார்ப்பதைத் தவிர்த்தோம்.

 

இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்

நீங்கள் இளங்கோவா?’ என்றேன்.

 

ஆமாம் என்ற அவள்

நீங்கள்

ஞானப்பூங்கோதைதானே?’ என்றாள்

 

*கண்டராதித்தன்*


Wednesday 28 October 2020

படித்ததில் பிடித்தவை (“நன்றாய் வாழ்ந்திருக்கலாம்..!” – தமிழன்பன் கவிதை)


*நன்றாய் வாழ்ந்திருக்கலாம்..!*

 

இறந்த மனிதன்

சவ ஊர்வலத்தில்

கண் விழித்துப் பார்த்தான்..!

 

இன்னும் கொஞ்சம்

நன்றாய் வாழ்ந்திருக்கலாம்

என்று எண்ணி

கண் மூடினான்..!

 

*தமிழன்பன்* 

Tuesday 27 October 2020

படித்ததில் பிடித்தவை (“அடி மாடுகள்” – சந்திரசேகரன் கவிதை)

 


*அடி மாடுகள்*

 

நாங்கள்

நரப் பூச்சிகளின்

நன்றி மறுப்பால்

அறுப்புக்குப் போகும்

அடிமாடுகள்..!

 

வயதான ஒருவன்

நோய் வந்த நண்பன்

பால் வறண்ட ஒருத்தி

முடமான முரடன்

நகரும் பொட்டலமாய்

சாகுமிடம் நோக்கி..!

 

நான்கு நாட்கள்

நீரில்லாமல்

நின்றபடி பயணம்..!

கால் தோய்ந்து

சாய்ந்து கொள்ள

சக மாட்டு முதுகுகள்..!

 

வயிறு காயும்

முதல் நாள் மட்டுமே

மலஜலம் அவதி..!

 

உழைப்பை உண்ட பின்

உடம்பையும் கூறு கேட்டாய்..!

பால் மட்டும் போதாதென்று

உதிரமும் உறிஞ்சக் கேட்டாய்..!

செத்தும் கொடுக்கிறோம்

சுவைத்துக் கொள்ளுங்கள்..!

 

ஆனால் எங்கள்

மரணப் பயணத்தை

சிறிதேனும்

மரியாதைப் படுத்துங்கள்..!

 

போன ஆண்டு பொங்கலுக்கு

பொட்டிட்டுப் பூ வைத்து

கடவுளாய் படையல் இட்ட

நீயே வெட்டி இருந்தால்

நிம்மதியாய் செத்திருப்பேன்..!

 

*சந்திரசேகரன்*


Monday 26 October 2020

படித்ததில் பிடித்தவை (“காயத்ரி மந்திரம்” – கவிதாபாரதி கவிதை)

 


*காயத்ரி மந்திரம்*

 

காயத்ரி பற்றி கவிதை எழுதலாம்

எனில்

கவிதை வேறு...

காயத்ரி வேறா..?

 

காயத்ரிகள்

அழகாய்த்தான் இருக்கிறார்கள்...

அழகாய் இருப்பவரெல்லாம்

காயத்ரிகளாய் இருந்திருக்கக்கூடாதா..?

 

கால்கொலுசு,

கண்ணாடி வளையல்,

மஞ்சள் தாவணி,

இவை எதுவுமில்லாமல்

அழகாய் இருக்க

காயத்ரிக்கே சாத்யம்.

 

பெரும்பாலும் காயத்ரிகள்

காதலுக்கெட்டாத தூரத்தில்

சிரிக்கிறார்கள்.

 

எல்லாம் தெரிந்த காயத்ரிகளுக்கு

கொஞ்சம்

வெட்கப்படவும் தெரிந்திருக்கலாம்.

 

காயத்ரிக்கும்

காயத்ரிக்கும் நடக்கும் போட்டியில்

காயத்ரிகளே ஜெயிக்கிறார்கள்.

 

காயத்ரியைப் பிடிக்கும் என்பதற்கு

கண்ணம்மாவை

பிடிக்காது என்பதல்ல பொருள்.

 

காய்த்ரிகள் காயத்ரிகள்தான்

கல்யாணத்துக்கு

முன்னும் பின்னும்.

 

காயத்ரிக்குத்தான் தெரியும்

காயத்ரியாய் இருப்பதன்

கஷ்டம்..!”

 

*கவிதாபாரதி*