எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 30 April 2020

படித்ததில் பிடித்தவை (“மாற்றங்கள்” – புன்னகை சேது கவிதை)


மாற்றங்கள்

பிரகாரம்
நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை.

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்.

பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்.

எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்..!”

              - புன்னகை சேது.

Wednesday 29 April 2020

படித்ததில் பிடித்தவை (“பொய்க்குதிரை” – பூர்ணா கவிதை)


பொய்க்குதிரை

அய்யனார் குதிரையைப் பார்த்து
பயந்த குழந்தையிடம்
அது ஒன்றும் செய்யாது
பொய்க்குதிரை
தொட்டுப்பார் என்று
பல வகையில் மெய்ப்பித்த தந்தை
அய்யனாரும் ஒன்றும் செய்யாது
என்பதையும் சொல்லியிருக்கலாம்..!

   - பூர்ணா.

Tuesday 28 April 2020

படித்ததில் பிடித்தவை (“மனிதம்” – யுகபாரதி கவிதை)


மனிதம்

இவ்வளவு கறாராக
பேரம் பேசிய
ஒருவனுக்கு
கொசுரு வழங்கக்கூடிய
பூக்காரம்மா
அந்த நேரத்தில்
நுகர வைக்கிறாள்
மனித வாசனையை..!”

   -  யுகபாரதி.

Monday 27 April 2020

படித்ததில் பிடித்தவை (“மாரப்பன் (எ) அய்யனார்” – இரா.பூபாலன் கவிதை)


மாரப்பன் (எ) அய்யனார்

வழக்கத்துக்கு மாறாக
மாரப்பன் மீது
அய்யனார் வந்தது
இதுவே முதல்முறை.

ஒரு போத்தல் சாராயமும்
வறுத்த முழுக் கோழியும்
நாட்டாமைதான்
படைக்க வேண்டுமென
உத்தரவிட்டதால்
நாட்டாமை பொண்டாட்டி
நடுங்கியபடி கொண்டுவந்து
படையலிட்டாள்.

நாக்கைச் சுழற்றியபடி
மிச்சம் வைக்காமல்
உருட்டிய விழிகளுடன்
தின்று முடித்தார்
மாரப்பன் (எ) அய்யனார்.

கைதுடைக்க
நாட்டாமை தோளில்
கிடந்த துண்டை
பவ்யமாக தந்தபோது,
அய்யனார் (எ) மாரப்பனுக்கு
நினைவு வந்தது

ஒரு வாரம் முன்னதாக
நாட்டாமை முன்பாக
தோளில் துண்டோடு
நின்றதற்காக
மாரப்பன் அப்பா வாங்கிய
அறை..!

             -         இரா.பூபாலன்.
               (நன்றி: ஆனந்த விகடன்).

Sunday 26 April 2020

படித்ததில் பிடித்தவை (“நானும்... நீயும்...” – ஜெயபாஸ்கரன் கவிதை)


நானும்... நீயும்...

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்.
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ.

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்.
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ.

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்.
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ.

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழ வைக்கிறார்கள் உன்னை.
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை..!

     *ஜெயபாஸ்கரன்*

Saturday 25 April 2020

படித்ததில் பிடித்தவை (“காரணம்” – கண்ணன் கவிதை)



காரணம்

நறுக்கெனக் கடிக்கிறதென்றும்
கூசும்படி ஏறுகிறதென்றும்
இரக்கமற்று நசுக்கிவிடத் துணியும்
எறும்புகளின் மீதான வன்முறைக்கு
பெரிதாக என்ன காரணம்
இருந்துவிடப்போகிறது...

அவை எளிது என்பதன்றி..!

     *கண்ணன்*

Friday 24 April 2020

படித்ததில் பிடித்தவை (“நன்றி சொல்ல வேண்டும்” – கல்யாண்ஜி கவிதை)


நன்றி சொல்ல வேண்டும்

வாகனத்தைத் தவறான இடத்தில்
நிறுத்தியதற்காக நான்
காவல் நிலையத்தின் வெளிப்புறம்
நிறுத்தப்பட்டிருக்கிறேன்.

இதைவிடக் கூடுதலான குற்றமாக
என் உடல் மொழியின் ஏதோ ஒன்று
இருந்திருக்க வேண்டும்.

வெயிலைப் பூசிக்கிடக்கிற
நகராட்சி மருத்துவமனையிலிருந்து
மகப்பேறு முடிந்த தாய்
ஆட்டோவில் ஏறிக்கொண்டிருந்தாள்
மூத்த பெண் குழந்தையுடன்
கருஞ்சிவப்பில் பிஞ்சுக்கால்கள் தெரிய.

வலது பக்கத்தில் ஏழிலைக்கிழங்குப்
பையோடு முதியவள் கிளிஜோஸ்யம்
கேட்டபடி கண்கள் சுருக்கி.

விசிறின சோழிகளில் ஒரு சோழி
நடுக்கத்திலிருந்து விடுபட்டு
அமைதியடைய வெகு நேரமாயிற்று.

நான் சிகப்புச் செங்கல் கட்டிடத்திற்கு
நன்றி சொல்லவேண்டும்...

என் குற்றங்களுக்கு
சுங்கிடித்துணிக்குள் பிஞ்சுப்பாதங்களையும்
ஏழிலைக்கிழங்கின் முறிந்த குறுக்குவெட்டையும்
ஒரு சோழியின் நடுக்கத்தையும்
தண்டனையாகத் தந்ததற்கு..!

    *கல்யாண்ஜி*

Wednesday 22 April 2020

படித்ததில் பிடித்தவை (“அன்பு” – கல்யாண்ஜி கவிதை)


அன்பு

கைப்பிள்ளையுடன்
பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள்
அந்தப் பெண்...

நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்...

    *கல்யாண்ஜி*

Sunday 19 April 2020

படித்ததில் பிடித்தவை (“இரவு” – அ.வெண்ணிலா கவிதை)


இரவு

ஒவ்வொரு இரவுகள் முடிந்து
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
வாழ்தல் என்கிறார்கள்..!”

    *அ.வெண்ணிலா*

Wednesday 15 April 2020

படித்ததில் பிடித்தவை (“சாபம்” – முத்துராசா குமார் கவிதை)

சாபம்


படகுக் கவிழ பிராத்திக்கிறாயே... என்று
எனக்கு சாபம் விட்டுச்சென்ற நீங்கள்
மீதிக் கதையையும்
கேட்டுப் போயிருக்கலாம்...

நீண்ட காலமாக கரை திரும்பாத
அந்த ஆளற்ற படகில்
நடுத்தர வயது மீனொன்று
துள்ளிக் குதித்து துடிதுடிக்கிறது..!


       -   முத்துராசா குமார்.
      (பிடிமண் கவிதைத் தொகுப்பிலிருந்து...)

Friday 10 April 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தைகளின் கிறுக்கல்” – தமிழ் இயலன் கவிதை)


*குழந்தைகளின் கிறுக்கல்*

சபிக்கப்பட்ட
செங்கற்களால்
நிரம்பியவை
குழந்தைகளின்
கிறுக்கல் இல்லாத
வீட்டுச்சுவர்கள்.

பிஞ்சு விரல்கள்
அஞ்சிக்கிடக்கும்
இல்லங்களில்
பிகாசோ மறுபடியும்
புதைக்கப்படுகிறான்.

மறு வண்ணப்பூச்சுக்கான
செலவுக்கணக்கில்
மறையக் கூடும்
புதிய டாவின்சியின்
அறிவியல் கோடுகள்.

வண்ணத்தூரிகைகள்
வாங்கப்படா வீடுகளில்
தீண்ட மறுக்கிறோம்
மைக்கேல் எஞ்சலோவை.

வாடகை வீடு என
மிரட்டப்பட்ட
கரங்களிடையே
மருண்டு மறைகிறான்
இன்றைய வான்கோ.

சுவர் மறுத்தாலும்
தாள் கொடுத்தாவது
கிறுக்கவிடுங்கள்.
வெளிப்படட்டும் மனம்.
வெற்றியடையட்டும் திறன்.

குறுக்கே நிற்காதீர்கள்
கிறுக்கர்களே..!”
                                                                    

                   - தமிழ் இயலன்.