எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 28 March 2020

படித்ததில் பிடித்தவை (“இடம் பெயர்தல்” – பாபுசசிதரன் கவிதை)


*இடம் பெயர்தல்*

காலாற வரப்பில் நடந்து
சில பல பனைகளை கடந்து
வேலங்குச்சி உடைச்சி
பல் துலக்கி...
ஏரி மதிலில் கால் கழுவி...
அப்படியே கொஞ்சம்
இறங்கி தலைமுழுகி...
கட்டியிருக்கும் வேட்டியையும்
சட்டை போட்டுக்கொள்ளா
துண்டையும் அலசி...
கட்டிக் கொண்டு வீடுவரும்
காய்ந்து போன நினைவுகளூடே...
மகனோடு சென்னையில்
பிடுங்கி நடப்பட்ட முதியவரும்...
அடைபட்டுக்கிடந்த நிலநீரும்...
அடுக்குமாடி நீச்சல் குளத்தில்...
ஒருவருக்கொருவர்
தத்தம் பிம்பங்களை
பார்த்துக் கொண்டார்கள்...
அதில் ஒரு கிராமம்
பட்டுபோய் கிடந்தது..!

-                              
     -   கா. பாபுசசிதரன்,  22.03.2020,
    (அடுக்குமாடி கவிதைகள்).

Sunday 8 March 2020

படித்ததில் பிடித்தவை (“நதி” – கே.ஆர்.அப்பாவு கவிதை)


*நதி*

நதிகளுக்கெல்லாம்
பெண்களின் பெயர்களை
வைத்துவிட்டு
நதிகளை இணைக்க
வேண்டும்...
நதிகளை இணைக்க
வேண்டும்...
என்றால் எப்படி..?

   -   கே.ஆர்.அப்பாவு.
  (மறுபக்கம் கவிதைதொகுப்பிலிருந்து)