*இனி என்ன மிச்சமிருக்கிறது..?*
நாம்
மெர்க்குரிப் பூக்கள்
வாசித்துக் கொண்டிருந்த
கடலைக்காய் கொல்லைகளில்
கார் கம்பெனி
வந்து விட்டது தேன்மொழி..!
“ஸ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்த
நெல் வயல்களில்
செல்ஃபோன் கம்பெனி
வரப் போகிறது..!
“பொன்னியின் செல்வன்”
படித்த ஏரிக்கரைதான்
அடுக்குமாடிக் குடியிருப்பின்
மதிலாக நிற்கிறது..!
இருவரையும் தோழர் என்றே விளிக்கும்
நூலகர் பரிந்துரைத்த
“வால்காவிலிருந்து கங்கை வரை” யில்
ஆழ்ந்த மந்தைவெளியில்தான்
கோக் பாயப் போகிறது
இனி என்ன மிச்சமிருக்கிறது..?
புத்தகங்களை
எடைக்குப் போட்டு விட்டு
புகை கக்கும் பூமியில்
கூலிக்கு மாரடிப்பதைத் தவிர..!
*ராம் வசந்த்*