எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 26 January 2018

ஒரு குழந்தையின் வருகை...


“திறந்திருக்கும் கேட் வழியாக
வேகமாக தெருவுக்கு வரும் பந்து...

தெரு வழியாக செல்லும்
எனது இரு சக்கர வாகனத்தின்
வேகத்தை உடனே குறைக்க
வைக்கிறது...

பந்துக்கு பின்னாலே
ஒரு குழந்தை வேகமாக
ஓடி வருமென்று..!”

   -    கி. அற்புதராஜு.

Saturday 20 January 2018

மாநகரத்தில் அணிலும், எறும்பும் மற்றும் நானும்...


"அணில்கள் 
கேபிள் வயரின்
மேல்தான் பயணிக்கின்றன...

மரங்களில்
பயணிக்க முடிவதில்லை
மாநகரத்தில்...

எறும்புகள்
கோல மாவுகளை
எடுத்து செல்வதில்லை...

எலக்ட்ரிக் பேட்டால் அடித்த
கொசுக்களை
இழுத்துச் செல்கின்றன
மாநகரத்தில்...

கிராமத்தில்
தேர் ஓடும்
பெரிய வீதிகளில்
எதிர் வீடு வரை நீண்டிருக்கும்
மார்கழி மாத கோலங்களை
மிதிக்காமல் தாண்டி தாண்டி
நடந்து சென்ற நானும்...

டாஸ்மாக்கில்
தண்ணி அடித்தவன் போல
வளைந்து நெளிந்து கடக்கிறேன்
இரு சக்கர வாகனத்தில்
மாநகரத்தின் சந்துகளில்
போடப்பட்ட
சிறிய கோலங்களை..!"

- கி. அற்புதராஜு.

Sunday 14 January 2018

எனது ஆடைகள் துரத்தப்படுகின்றன...


"புதிய வீட்டில்
எனக்கான உடைகளுக்கு
படுக்கை அறையிலிருந்த
பீரோவில் சிறிய இடம்
ஒதுக்கினாள் மனைவி.

பெரிய இடங்களை
பிடித்துக் கொண்டன
மனைவியின்
புடவைகள்.

ஐந்து வருடங்களில்
எனது ஆடைகள்
துரத்தப்பட்டன
பீரோவிலிருந்து
சுவரிலிருந்த அலமாரியின்
சற்றே பெரிய
பகுதிக்குள்.

இரண்டு வருடங்களுக்குள்
அலமாரிக்கும்
படையெடுத்தது
புடவைகள்.
அலமாரியின்
பெரிய பகுதியிலிருந்து
சிறய இடத்துக்கு
மீண்டும் துரத்தப்பட்டன
எனது ஆடைகள்.

மாடியில் புதிதாக
ஒரு அறை கட்டப்பட்டவுடன்
எனது ஆடைகள்
மாடியேறின.

இந்த வருடப் பொங்கலுக்கு
வீட்டை சுத்தம்
செய்த பின்
மாடியேறிவிட்டன
மனைவியின் புடவைகளும்.

எனது ஆடைகளுக்காக
மனைவி தேர்வு செய்த
புதிய இடத்தைப்
பார்க்கவும்
எனது ஆடைகளுக்கு
ஆறுதல் சொல்லவும்
மாடி ஏறிக்கொண்டிருக்கிறேன்
நான்..!"

- கி. அற்புதராஜு.

Wednesday 10 January 2018

உயிர் - அச்சமும்... துட்சமும்...


காட்சி - 1 : அச்சம்
"அவசரமாக
ரயில் பாதையை
கடக்க முயன்றவரை
எக்ஸ்பிரஸ் ரயில்
வருவதாக
எதிரே வந்தவர்
தடுத்து நிறுத்தும் போது
வேகமாக வந்த ரயில்
பெரும் ஓசையுடன்
கடந்து சென்றது.

அவசரபட்டு விட்டோமோ என
கடக்க முயன்றவர்
அதிர்ச்சியில் உறைந்தார்.

தடுத்தவருக்கு நன்றி
சொல்லியிருக்கலாமோ என
திரும்பி பார்த்தப் போது
அவர் வெகுதூரம்
சென்றிருந்தார்."

காட்சி – 2 : துட்சம்
"டெல்லி பயணத்துக்கு
சென்ட்ரலில் எக்ஸ்பிரஸ்
ரயில் பிடிப்பதற்காக,
லோக்கல் ரயில் பிடிக்க
அவசரமாக தண்டவாளத்தை
கடக்க முயலும் போது
கூட்ஸ் ரயில் வருவதை
பார்த்தவுடன்
சற்றே தயங்கி
நின்று விடுகிறார் அவர்.

கூட்ஸ் ரயில் கடந்து
செல்வதற்குள்
லோக்கல் ரயில்
சென்று விடுகிறது.
அடுத்த ரயில் பிடித்து
பரபரப்பான
மனநிலையில்
செல்லும் போது
கூட்ஸ் ரயிலுக்காக
தயங்கி நின்றது
தவறாகி விட்டதே என
வருந்தினார் அவர்.

அவசர அவசரமாக
சென்ட்ரலில் நுழைந்து
நடைமேடை அறிந்து
சென்றடைகையில்
தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸின்
கடைசிப் பெட்டி
கிராஸ் மார்க்கை
காட்டிச் சென்று கொண்டிருந்தது..."

- கி. அற்புதராஜு.

Thursday 4 January 2018

முதல் பூ


புத்தாண்டுக்கு
குடும்பத்தோடு
பெருமாள் கோவில்
சென்றிருத்தேன்.

வெளிப்பிரகாரத்தில்
தொடங்கிய
சற்றே நீளமான வரிசை
நாங்கள் நின்றதும்
நீளமான வரிசையானது.

வழி நெடுக
ஓரத்தில்
பூச்செடிகள்
நடப்பட்டிருந்தன.

அதில்
செம்பருத்தி பூச்செடி
மிகவும் அழகான
முதல் பூவை
பூத்திருந்தது
பச்சை நிற வலைக்குள்.

வரிசையில் நின்ற
சிறுமிகள் சிலர்
அப்பூவை பறிக்க
முயற்சித்தப் போது
பெரியவர்களை
அதட்ட வைத்தும்...

பூச்செடிக்கு அருகே
குழந்தைகளை
நிற்க விடாமல்
வரிசையை
வேகமாக நகர செய்தும்...

அழகான அந்தப் பூவின்
ஆயுளை நாள் முழுதும்
நீட்டிக்க செய்கிறார்
நிறைய பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட

சுந்தரராஜப் பெருமாள்..!

      -      கி. அற்புதராஜு.