*சோதனைக்குழந்தை*
“தள்ளிப்போன மாதவிடாய்
கருவென்றே
பகிரவேண்டும்.
மனுகொடுத்த
இறைவன்
கண்திறந்துப்
பார்க்க
கண்ணையும்
தருவதாய்
வேண்டுதல்
வைக்கிறாள்.
உயிர்துளியும்
கருமுட்டையும்
தழுவலின்றி
தாமதமாகும்
குழந்தைப்பேற்றில்.
சமூக
குடைச்சலில்
இரு
ஜீவனின் உள்ளூர ஓலமும்
சத்தமின்றி
பூக்கும் கண்ணீரும்
எவரும்
புரிந்துக்கொள்ளாதப் பக்கங்களாய்.
வாரிசு... வாரிசு...
சத்தம்
அவளுக்குள்
இறங்கும்
கத்திக்குத்து.
சோதனைக்குழாய்
குழந்தை
பெற
பரிசோதனை எலியாய்
வலியோடும்
படுத்துக்கிடக்கிறாள்
மழலையின்
சங்கீதராகத்திற்காக.
வராத
மோகனத்தின்
வற்புறுத்தலில்
உயிர்துளி
சேகரித்துத்
தருகிறான் மருத்துவமனையில்.
கருப்பைக்குழாயில்
உயிரோடு
சூடுவைக்கும் உயிரற்றகருவிகளின் குடைச்சலால் புண்ணாகிக்கிடக்கிறாள்.
கால்களைத்
தூக்கி கட்டியதில்
மூச்சடைத்து
முன்னூறுப்பிள்ளைகளைப்
பெற்ற
பிரசவ
வலியை உணர்கிறாள்.
விழிகரையில்
எழுதுகிறது கண்ணீர்.
நம்பிக்கையின்
நடைப்பயிற்சியில்
தொடருது
இவ்வண்ணம்..!”
*செ.புனிதஜோதி*