“மழை நமக்கு
இறந்தக் காலத்தையும்,
நிலையாமையும்,
கொள்ளைக் கூட்டத்தையும்,
இரக்கக் குணத்தையும்
அடையாளம்
காட்டி சென்றது...
மின்சாரத்தை நிறுத்தி
21-ம் நூற்றாண்டில்
18-ம் நூற்றாண்டின்
இருட்டைக் காட்டி
எண்ணெய் தீபங்களை
எல்லோரையும்
ஏற்ற வைத்தது.
ஐந்து இலக்க சம்பளம்
வாங்கியவரையும்
ஏ.டி.எம். வேலை செய்யாமல்
ஏழையாக்கியது.
சிட்டுக்குருவிகளை விரட்டிய
செல்போன் டவர்களை
செயலிழக்கச் செய்தது.
யாரையும் நகரை விட்டு
நகர முடியாமல்
நகரத்தையே
சுற்றி வளைத்தது.
ஏழை பணக்காரன்
என்ற வித்தியாசம்
பார்க்காமல்
எல்லோர் வீட்டுக்கும்
அழையா விருந்தாளியாக
சென்று கதவை முட்டி மோதி
திறந்து எல்லோரையும்
மொட்டை மாடிக்கு விரட்டியது.
தண்ணீர் கேன் வாங்கி
குடித்தவர்களை எல்லாம்
மழை நீரை பிடித்து
குடிக்க வைத்தது.
பாலுக்கும்,
ஒரு வேளைச் சோற்றுக்கும்
கையேந்த வைத்தது.
பறவைகளையும்
விமானங்களையும்
பறக்க விடவில்லை
இந்த பெருமழை.
கூவம், அடையாறு
நதிகளை சாக்கடையாக்கிய
மக்களிடமும், அதிகாரத்திடமும்
மீண்டும் நதியாக்கி
காட்டியது
இந்த பெருவெள்ளம்.
சர்வசாதாரணமாக
வீட்டுக்குள் நுழைந்த
வெள்ளம்
தனக்குப் பிடித்த
பொருள்களையும்,
உயிர்களையும்
எடுத்துச் சென்றது.
பால், தண்ணீர்,
அத்தியாவசியப் பொருட்கள்,
ஆட்டோ, பஸ் கட்டண
விலைகளை ஏற்றி
லாபம் பார்த்த
கொள்ளையர்களையும்
அடையாளம் காட்டியது
இந்த பெருமழை.
ஆறு, குளம், எரியின்
ஆக்கிரமிப்புகளை
அடையாளம் காட்டி
அதிகாரங்களையும்,
அதிகாரிகளையும்
அதிர வைத்தது.
கடைசியில்
அரசியல்வாதிகளின்
அதிகாரத்தையும்
ஆணவத்தையும்
குழித்தோண்டிப்
புதைத்த
இந்த பெரு மழை
பல நல்ல உள்ளங்களையும்
அடையாளம் காட்டியது..!”
*** *** ***