எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 31 July 2021

படித்ததில் பிடித்தவை (“சுவையான ஒன்று” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*சுவையான ஒன்று*

 

தேநீர் அருந்திய பெரியவர்

சுவையாக ஒன்றை

சொல்லிவிட்டுப் போனார்

 

முதுமைய நட்பாக்கிட்டா

வயசு எதிரியா தெரியாது..!

 

*ராஜா சந்திரசேகர்*




Friday 30 July 2021

படித்ததில் பிடித்தவை (“பேச்சு” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பேச்சு*

 

ஊருக்கு வந்த மகன்.

 

இரவு தாண்டிப்

போகிறது பேச்சு.

 

தான் தொலைந்த

நகரத்தைப் பற்றிச்

சொல்கிறான் மகன்.

 

அவன் தொலைத்த

கிராமத்தைப் பற்றிச்

சொல்கிறாள் அம்மா..!

 

*ராஜா சந்திரசேகர்*



Thursday 29 July 2021

படித்ததில் பிடித்தவை (“விருந்தினர்” – ராஜா சந்திரசேகர் கவிதை)


 

*விருந்தினர்*

 

திட்டப்போகும்

அம்மாவை சமாளிக்க

பல பதில்களை

யோசித்து

பலமான ஒன்றைத்

தேர்ந்தெடுத்து

வீட்டிற்குள்

அடியெடுத்து

வைக்கிறாள் சிறுமி.

 

இப்படி

நெனைஞ்சி வந்து

நிக்கிறியே

பதறுகிறாள் அம்மா.

 

அது இல்லம்மா

மழைய விருந்தினரா

கூப்பிட்டுக்கிட்டு

வந்திருக்கேன்

சொல்கிறாள் மகள்.

 

மகளின் பதிலில்

பரவசமாகித்

திட்டுவதை

மறக்கிறாள் அம்மா..!

 

*ராஜா சந்திரசேகர்*



Wednesday 28 July 2021

படித்ததில் பிடித்தவை (“முதியோர் காதல்” – பாரதிதாசன் கவிதை)


 *முதியோர் காதல்*

 

“புதுமலர் அல்ல; காய்ந்த

     புற்கட்டே அவள் உடம்பு..!

சதிராடும் நடையாள் அல்லள்

     தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு

     வறள்நிலம்..! குழிகள் கண்கள்..!

எது எனக்கின்பம் நல்கும்..?

     ‘இருக்கின்றாள்என்ப தொன்றே..!

 

*புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்*

{குடும்ப விளக்கு}



ஒருவனும் ஒருத்தியும் அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையைக் காதல் வாழ்க்கை என்கிறோம். இந்தக் காதல் வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதைப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.

 

முதியவளின் உடலில் பளபளப்போ அழகோ இல்லை. என்றாலும் முதியவர், அவள்மேல் கொண்டிருந்த காதல் மாறவில்லை. இதற்கு அடிப்படை அவரது உள்ளத்தில் நிறைந்து விளங்கும் உண்மை அன்பு ஆகும்.

 

முதியவளின் உடம்பு புதுமலர் போல் ஒளியுடன் இல்லை; காய்ந்து போன புல்கட்டைப் போன்று இருக்கிறது. அவள் நடப்பது நடனத்தைப் போல் அழகாக இல்லை; தள்ளாடி விழுவதுபோல் இருக்கிறது. நிலவு போல் அவள் முகத்தில் ஒளி இல்லை; வறண்டு இருக்கிறது. கண்கள் குழிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட முதியவளின் உடலில் எனக்கு இன்பத்தைத் தருவது எது? இன்றும் உயிருடன் இருக்கின்றாள் என்பது மட்டுமே எனக்கு இன்பத்தைத் தருவது ஆகும் என்று முதியவர் கூறுவது போல் பாரதிதாசன் பாடியுள்ள பாடல் உண்மைக் காதல் என்பது உயிர் இருக்கும் வரை தொடரும் வலிமை உடையது என்பதை உணர்த்துகிறது அல்லவா?

**** **** **** ****


Tuesday 27 July 2021

படித்ததில் பிடித்தவை (“பரிசு” – மகுடேசுவரன் கவிதை)

 


*பரிசு*

 

ஒரு பறவை

கிளைமீது அமரும்முன்

சற்றே வலுவாகச்

சிறகடிக்கிறது.

 

அக்கூடுதல் சிறகடிப்பு

தன்னைத்

தாங்கும் மரத்திற்குப்

பறவைப் பரிசாம்

சாமரக் காற்று..!

 

*மகுடேசுவரன்*




Monday 26 July 2021

படித்ததில் பிடித்தவை (“ஒரு சித்திரம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*ஒரு சித்திரம்*

 

அந்த மின்விசிறி

அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

 

அதை ஒரு

தொங்கும் கவிதையைப் போல ரசிப்பாள்.

 

சுழலும் ஓவியம் போல பார்ப்பாள்.

 

அது தரும் காற்று

தன்னோடு பேசுவது போல உணர்வாள்.

 

பெஞ்ச் மேல் ஏறி நின்று

குதிகால் தூக்கி

எட்டிப் பிடிக்கும் குழந்தையைப் போல

அதை அழகாய் துடைப்பாள்.

 

அப்போது ஒரு பாடலை முணுமுணுப்பாள்.

 

குளிர் காலத்தில்

மின் விசிறி ஓய்வெடுக்கும்.

 

ஓடாத அதன் மெளனம்

அவளை நிம்மதி

இழக்கச் செய்யும்.

 

ஒரு முறை பழுதடைய

உடனே போன் செய்து

எலக்ட்ரீஷியனை

வர வைத்து

சரி செய்து

ஓடியவுடன்

முகம் துடைத்து

பெருமூச்சு விட்டாள்.

 

கனவில் வரும் அம்மாவின்

கை விசிறி போல

இதன் மீதும்

அவளுக்குப் பிரியம் அதிகம்.

 

மின்விசிறிப் பற்றி

சின்ன சின்ன கவிதைகளை

எழுதி வைத்திருக்கிறாள்.

 

உன் காற்றைப் போல

நானும் மறைந்து போவேன்

என்ற வரியை

ஆழமாய் முணுமுணுத்தபடியே

ஒரு மழை இரவில்

அந்த மின்விசிறியில்

தொங்கிப் போனாள்..!

 

*ராஜா சந்திரசேகர்*



Sunday 25 July 2021

படித்ததில் பிடித்தவை (“விடைபெறும்போது” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*விடைபெறும்போது*

 

பிறந்த நாளை குறிப்பிட்டு

என் வாழ்த்துக்கள் வரும் என்று

உற்சாகப்படுத்துங்கள்.

 

டீவியின் மேலிருக்கும்

பொம்மையை ரசியுங்கள்.

 

அதன் கண்கள் வழியே

உங்களைப் பாருங்கள்.

 

முதியவர்கள் இருப்பார்கள் எனில்

அவர்கள் வயதுக்குள்

போய் வாருங்கள்.

 

விடைபெறும்போது

நாய்க்குட்டியைத்

தடவிக்கொடுக்க

மறக்காதீர்கள்.

 

அது குரைக்குமெனில்

வீட்டின் பாதுகாப்பு கவசம்

எனப் பாராட்டுங்கள்.

 

நகை இல்லாத

கழுத்தைப் பார்த்து

துயரப்படுவதை தவிருங்கள்.

 

மீன் தொட்டி மீன்களிடம்

கடல் விசாரித்ததாய் சொல்லுங்கள்.

 

வாங்கிச் செல்லும் பொருளில்

உங்கள் பிரியத்தை

குறித்துவையுங்கள்.

 

விடை பெறும்போது

தூசி படிந்த கணங்களை

அசைபோடுங்கள்.

 

ஒன்றிரண்டு சுவாராஸ்யவங்களை

பொதுவான அலைவரிசையில்

பேசுங்கள்.

 

முக்கியமாக

விடைபெறும்போது

நீங்கள் முழுதாய்

விடைபெற்றுவிடாமல்

நினைவுகளின் நீட்சியாய்

லயமாய்

அங்கு சுற்றிவரும்படி

இருக்கப் பாருங்கள்..!

 

*ராஜா சந்திரசேகர்*

(19.06.2011 கல்கி இதழில் வெளியானது)