எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 22 July 2017

எனது கட்டுரை: "சுத்தம் என்பது நமக்கு…"


சுத்தம் என்பது நமக்கு…
-         கி. அற்புதராஜு.

மாற்றத்தை எப்போதுமே நாம் ஏற்றுக் கொள்வதில்லை. எந்த ஒரு புதிய பழக்கத்தையும் 3 வாரங்கள் அதாவது 21 நாட்கள் தொடர்ந்தால் மட்டுமே நம் மனமும் உடலும் ஒரு சேர அதை ஏற்றுக் கொள்கிறது.

தினமும் காலை எழுந்தவுடன் பற்களை துலக்குவது தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். தூங்குவதற்கு முன்னும் பற்களை துலக்குதல் மிகவும் நல்ல பழக்கம். பற்சொத்தை மற்றும் பிற நோய்கள்  பற்களுக்கும் ஈறுகளுக்கும் வராமல் தடுக்கின்றன.

வைரமுத்து தனது 'கேள்வி ஞானம்' கவிதையில் இப்படி சொல்லியிருப்பார்:

"வாய் நீராடும்
வாய்ப்புள்ள
போதெல்லாம்
சுட்டு விரல் கொண்டு
தொட்டழுத்து ஈறுகளை

பரவும் ரத்தம் பலம்

ஈறு கெட்டால்
சொல் எஞ்சும்

ஈறு கெட்டால்
பல் எஞ்சுமா ?"

இக் கவிதை பற்களை தன்னுள் வைத்திருக்கும் ஈறுகளையும் பாதுகாக்க அறிவுறுத்துகிறது.

காலை மாலை இரு வேளையும் பல் துலக்குவது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று படிப்பதோடு சரி. நடைமுறைப்படுத்த முடிவதில்லை. இரவு சாப்பிட்டு, டி.வி. பார்த்து தூக்கம் வரும் போது நேராக படுக்கைக்கு செல்ல தோன்றுமே தவிர பல் துலக்க தோன்றாது.

உறவு பெண் பல் டாக்டராக உள்ளார். அவரிடம் நீங்கள் தினமும் இரவிலும் பல் துலக்குவீர்களா?  என்ற போது நல்ல பழக்கம்தான்... ஆனால்  எப்போதுதாவதுதான் என்று சிரித்தார். அவராலும் பழக முடியவில்லை போலும்.

இந்த பழக்கம் அலுவலக நண்பர்களிடமும் இல்லையென்பது இதைப் பற்றி பேசும் போது தெரியவந்தது.

'காலை எழுந்தவுடன் வாயில் ஊரிய எச்சில், கோழையில் கொஞ்சம் அரிசியை சேர்த்து கோழிக்கோ, காகத்துக்கோ வைத்தால் அதை சாப்பிட்டவுடன் அவை இறந்துவிடும்' என கிராமத்து பாட்டி 'கதை' சொல்லியதை சொன்னார் அலுவலக நண்பர் ஒருவர்.

அதன் பிறகு அந்த நினைவே இல்லாது நானும் மறந்துப் போனேன்.

என்னால் செய்யவே முடியாது என்ற இந்த பழக்கத்தை... சொன்னால் நம்ப மாட்டீர்கள்...
ஒரு பத்திரிக்கையில் படித்த இரண்டு வரி செய்தியால் இப்போது காலை இரவு என இருவேளையும் பல் துலக்கத் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகியும் தொடர்கிறது...

என்னை மாற்றிய அந்த வாசகம்:

"நீங்கள் காலையில் பல் துலக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கண்டிப்பாக இரவில் பல் துலக்கவும்..!"

உங்களையும் மாற்றுமா?

*** *** ***

Tuesday 11 July 2017

படித்ததில் பிடித்தவை (“மனிதன் நல்லவனா? ” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)


மனிதன் நல்லவனா?

எனது கிராமத்தில் மாடு மேய்க்கும் ஒரு வயதானவர் சிறுவர்களுக்கு நிறையக் கதைகள் சொல்வார். ஒரு முறை அவரிடம் அற்புதமான கதை ஒன்றைக் கேட்டேன். இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

முன்னொரு காலத்தில் காட்டுக்குள் ஒரு மனிதன் புலியிடம் மாட்டிக்கொண்டான். புலி அவனை கொல்ல முயன்றபோது, அந்த மனிதன் ‘‘நான் நல்லவன், என்னை கொன்றுவிடாதே!’’ எனக் கெஞ்சினான்.

அதைக் கேட்ட புலி ‘‘அப்படியா! நீ நல்லவன் என்று யாராவது சொன்னால், உன்னை விட்டு விடுகிறேன்’’ என்றது.

அவன் ஒரு கிளிடம் போய் ‘‘கிளியேகிளியே! நான் நல்லவன் என்பதை சொல்!’’ என்றான்.

அதற்குக் கிளி ‘‘மனுசங்க ரொம்ப மோசமானவங்க. சுதந்திரமாத் திரியுற என்னைப் பிடிச்சு என் றெக்கையை வெட்டிக் கூண்டுல அடைக்கிறது நீங்கதானே. பின்னே எப்படி நீ நல்லவனா இருப்பே?’’ என்று கேட்டது.

உடனே புலி அந்த மனிதனைப் பார்த்து ‘‘நான் உன்னைக் கொல்லப் போகிறேன்!என சத்தமிட்டது.

அவன், ‘எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு’’ எனக் கேட்டு அனுமதிப் பெற்றான். காற்றிடம் சென்று ‘‘காற்றே... காற்றே! நான் நல்லவன் என நீயாவது சொல்லக் கூடாதா?’’ எனக் கேட்டான்.

அதற்குக் காற்று ‘‘மனுசங்க உயிர் வாழுறதுக்கு நான்தான் காரணம். என்னையே நாசமாக்கிட்டீங்க. அதோட, ஒரு மரமில்லாம வெட்டிட்டே வர்றீங்க. பிறகு, எப்படி நீ நல்லவனா இருக்க முடியும்?’’ என்றது.

உடனே அவன் நிலத்திடம் சென்று ‘‘பூமித் தாயே! நான் நல்லவன் என்று நீயாவது சொல்லேன்…’’ என்றான்.

அதற்கு நிலம் ‘‘நான் எவ்வளவுதான் விளைச்சல் கொடுத்தாலும், என்னோட அருமை மனுஷங்களுக்குப் புரியறதே இல்ல. நிலத்தை நாசமாக்கிட்டே வர்றாங்க. நீயும் அந்தக் கூட்டத்துல ஓர் ஆள்தானே, பிறகு நீ எப்படி நல்லவனாக இருப்பே?’’ எனக் கேட்டது.

உடனே புலி அவனைக் கொல்லப் போவதாக உறுமியது.

கடைசிமுறையாக அவன் ஆற்றிடம் சென்று, ‘‘நான் நல்லவன் என நீயாவது சொல்லக் கூடாதா?’’ எனக் கெஞ்சி கேட்டுக்கொண்டான்.

அதற்கு ஆறு ‘‘காலம் காலமாக மனுசங்க குடிப்பதற்கும், குளிப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் உதவி செய்திருக்கிறேன். ஆனால், நீங்கள் என்னைப் பாழடித்துவிட்டீர்கள். தண்ணீரோட மதிப்பை உணரவே இல்லை நீங்கள். நீ மட்டும் எப்படி நல்லவனாக இருப்பாய்?’’ எனக் கேட்டது.

இதற்கு மேலும் பொறுமை இல்லாத புலி அவன் மீது கொல்லப் பாய்ந்தபோது, மரக் கிளையில் இருந்த ஒரு காகம் புலியைப் பார்த்துச் சொன்னது: ‘‘பாவம், நல்ல மனுஷன்!’’

உடனே புலி, ‘‘இவன் நல்லவன் என்று உனக்குத் தெரியுமா?’’ என காகத்தைப் பார்த்து கேட்டது.

‘‘என்னைப் போன்ற காகங்களுக்கு மனுஷங்கதான் சாப்பாடு போடுறாங்க. எத்தனையோ வீட்டுல அவங்கல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடியே எங்களுக்கு சோறு படைக்கிறாங்க. மனுஷங்க எல்லாரும் நல்லவங்க. ஆகவே, இவனும் நல்லவன்தான்!’’ என்றது காகம்.

உடனே புலி அவனை உயிரோடு விட்டுவிட்டது. அந்த நன்றிக் கடனுக்காகவே இன்றைக்கும் காகங்களுக்கு சோறு போடும் பழக்கம் இருந்து வருகிறது எனக் கதையை முடித்தார் கிழவர்.

எளிமையான கதை. ஆனால், நம் மண்ணையும், தண்ணீரையும், காற்றையும் நாசமாக்கி வருவதைக் கண்டிப்பதற்காக சொல்லப்பட்ட கதை. கிராமத்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இக்கதையில் உயிருக்கு மன்றாடும் மனிதன் இயற்கையிடம், ‘நான் நல்லவனா?’ எனக் கேட்கும்போது இயற்கை இல்லை!என்றே பதில் தருகிறது. அது நிதர்சனமான உண்மை.

அதே நேரம் காகம் மனிதனை உயர்வாக சொல்கிறது. இன்றைக்கும் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்து வருகிறது. உயிரை காப்பாற்றிய நன்றிக்காகத்தான் மனிதன் காகங்களுக்கு உணவிடுகிறான் என்பது புதிய பார்வை!

அடைத்து சாத்தப்பட்ட ஜன்னல்கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வளரும் பிள்ளைகள், பறவைகள் எதையும் காண்பதே இல்லை. வானமே அவர்களுக்குத் தெரியாது. திறந்தவெளியில் படுத்தபடி ஆகாசத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை எண்ணி விளையாடும் விளையாட்டுத் தெரியாது. உதிர்ந்து கிடக்கும் நாவல்பழத்தின் ருசி தெரியாது. புளியம் பிஞ்சின் சுவை தெரியாது. பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழங்களைப் போல பிள்ளைகள் பத்திரமாக வளருகிறார்கள். அது, ஆரோக்கியமானது இல்லை.

பள்ளிப் பாடங்களுடன் அவர்களுக்கு இயற்கையும் நேரடியாக அறிமுகம் ஆக வேண்டும். பூக்களின் பெயர் தெரியாமல், விதைகளைக் காணாமல், அருவியையும் நீரோடையையும் மலைகளையும் அறியாமல் பிள்ளைகள் வளருவது சரியானது இல்லை.

கரிசலில் பிறந்த குழந்தைகளுக்கு மண்ணை கரைத்து நாக்கில் வைத்துவிடுவார்கள், முதலில் மண் ருசி அறிமுகமாகட்டும் என்று. மண், கையால் தொடக்கூடாத ஒரு பொருள் எனத் தொலைக்காட்சியில் இன்று கற்றுக் கொடுக்கிறார்கள். நாம் தண்ணீரை, நிலத்தை, காற்றை நேசிப்பதற்கு பழக வேண்டும். அதற்கு இதுபோன்ற கதைகள் உதவக்கூடும்.
 
தமிழ் இலக்கியத்தின் பீஷ்மர் என அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கிராமப்புறங்களில் சொல்லப்பட்டு வந்த கதைகளைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார். முல்லை முத்தையா, அ.லெ.நடராஜன், நெ.சி.தெய்வசிகாமணி போன்றவர்களும் வாய்மொழிக் கதைகளைச் சேகரித்து தொகுத்திருக்கிறார்கள்.

தற்போது கழனியூரன், பாரததேவி, எஸ்.எஸ்.போத்தையா. எஸ்.ஏ.பெருமாள், கம்பீரன் என பலரும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி பதிப்பித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இதாலோ கால்வினோ, ஹெர்மன்ஹெஸ்ஸே மற்றும் கவிஞர்களான யேட்ஸ், தாகூர் போன்றவர்களும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார்கள். தங்களின் கதை மரபைக் காப்பாற்ற வேண்டியது இலக்கியவாதிகளின் கடமை தானே!

மக்கள் மத்தியில் வழங்கிவரும் வாய்மொழிக் கதைகளைத் தேடி சேகரிப்பது அரும்பணி. கதைகள் மக்களின் ஆதிநினைவுகளின் வடிவம். கேட்டவுடன் யாரும் கதை சொல்லிவிட மாட்டார்கள். அதற்கு கிராமத்து மக்களிடம் நட்பாக பழக வேண்டும். கூச்சம் போன பிறகுதான் கதை சொல்ல ஆரம்பிப்பார்கள்.

ஆண்களை விடவும் பெண்களே அதிகம் கதை சொல்லக்கூடியவர்கள். அதிசயமான இந்தக் கதைகளை அவர்கள் யாரிடம் கேட்டார்கள்? எப்படி நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கும்.

பல்கலைக்கழகங்களில் உள்ள நாட்டுப்புறத் துறை மாணவர்களும் தமிழ் இலக்கியம் படிக்கிற ஆய்வு மாணவர்களும்கூட நாட்டுப்புறக் கதைகள், பாடல்களைத் தேடிச் சென்று, சேகரம் செய்து காப்பாற்றி வருகிறார்கள். நம் கையில் கிடைத்திருக்கும் கதைகள் குறைவு. காற்றில் அழிந்துபோனதுதான் அதிகம்.

கிராமப்புறக் கதைகளைப் போல நகரம்சார் கதைகளையும் தேடித் தேடி சேகரிக்க வேண்டும் என கி.ரா. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள மீனவ சமுதாயத் திடம் நிறைய வாய்மொழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வுசெய்து சேகரிக்க வேண்டும்.

பள்ளி ஆண்டு விழாவுக்கு என்றே எழுதப்பட்டதோ எனக் கருதப்படும் சின்ட்ரெல்லா கதை தொடங்கி ஸ்நோ வொயிட், ப்யூட்டி அண்ட் ஃபீஸ்ட், ஹான்சல் அண்ட் கிரேட்டல், ராபுன்ஸேல் போன்ற பல முக்கியமான தேவதை கதைகளைத் தேடி சேகரித்துக் கொடுத்தவர்கள் கிரிம் சகோதரர்கள். ஒருவர் ஜேக்கப் கார்ல் கிரிம். மற்றவர் வில்ஹெம் கார்ல் கிரிம்.

கிரிம் சகோதரர்கள் ஜெர்மானிய நாட்டுப்புறக் கதைகளையும் தொன்மங்களையும் தொகுத்து கிரிம்மின் தேவதைக் கதைகள்என்ற பெயரில் வெளியிட்டார்கள். அவை பெரும் புகழ் பெற்றன. இக்கதைகள் சிறார்களுக்கான கார்ட்டூன் படங்களாகவும் நாடகமாகவும் படக் கதைகளாகவும் வெளியாகி, இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

உங்கள் பகுதிகளில் சொல்லப்பட்டு வரும் கதைகளைத் தேடி, சேகரித்து காப்பாற்றுங்கள். அது விதைநெல்லை காப்பதைப் போன்று மிகவும் அவசியமானது.

- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 05.07.2016)

*** *** ***

Friday 7 July 2017

படித்ததில் பிடித்தவை (“உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள்!” - சுஜாதா கட்டுரை)


உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள்!

மாலை, தினம் போல் மெரீனாவில் நடந்துவிட்டு, சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, முகத்தில் கடற்காற்று விளையாட, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் இன்கம்டாக்ஸையும் யோசித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் வீற்றிருந்தவர் என்னை அறியாமல் என் செல்போனைக் கவர்ந்துகொண்டு, 'சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்' என்று சொல்ல ஆகும் நேரத்தில் காணாமல் போனார்!

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், அடுத்து ஆகவேண்டியதைத்தான் யோசிப்பேன். முதலில் செல் கம்பெனிக்குத் தகவல் சொல்லி, சிம் கார்டை எந்த விதக் குற்ற நோக்கத்துக்கும் பயன்படாமல் செயலறச் செய்ய வேண்டும். அதன்பின், மறு செல் பற்றி யோசிக்க வேண்டும்.

இடையே, செல்லில்லாத வாழ்க்கையை யோசித்தேன். முகம் தெரியாத பெண்கள், எனக்கு வங்கிக் கடன்கள் கொடுப்பதாக வற்புறுத்தமாட்டார்கள். சங்கராச்சாரியார் கைதிலிருந்து global warming வரை எனக்கு எஸ்.எம்.எஸ். வராது!

ரிங்டோனை 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு'வுக்கு மாற்ற முடியாது. 'பிரகாஷ்? க்யா யார்... அபிதக் மால் நை பேஜா?' என்கிற நடு ராத்திரி தப்பு நம்பர் அதட்டல்கள் நின்றுபோகும். யோசித்துப் பார்த்ததில், 'செல்லற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அன்வர் அக்காவியின் (Anwar Accawi) 'டெலிபோன்' என்னும் கட்டுரை (Best American Essays, 1998) நினைவுக்கு வந்தது. லெபனானில் மக்தலோனா என்ற அவரது கிராமத்தில் முதன் முதலாக டெலிபோன் வந்தது பற்றிய அருமையான கட்டுரை அது.

கிராமத்தின் கலாசாரமே, அடையாளமே ஒரு டெலிபோன் வருகையால் மாறிப் போகிறது. நகரம் போன் மூலம் வேலைக்கு அழைக்கிறது. குடும்பங்கள் ம் பெயர்கின்றன. கிராமம் தன் அடையாளங்கள் சிலவற்றைத் திரும்பப் பெற முடியாமல் இழக்கிறது. To get something, you have to give something. எதையாவது பெற, எதையாவது இழக்க வேண்டும்! செல்போனுக்கு நாம் இழந்தது, நம் அந்தரங்கத்தை! என் மனைவி, ‘'அப்பவே சொன்னேனே... உங்க ஞாபக மறதிக்கு செல்போன் உதவாது. கழுத்துல கயிறு கட்டிண்டு தொங்க விட்டுக்குங்கோ இனிமேல்!’' என்றாள். 'அந்தத் தாலி வேண்டுமா?' என யோசிக்கிறேன்.
 
'பக்கப் பாதைகள்' (Sideways) என்னும் திரைப்படம், இந்த வருடம் தங்க பூகோள அவார்டு வாங்கியிருக்கிறது. ஆஸ்கருக்கும் சிறந்த படமாகப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நண்பர்கள். ஒருவன் எழுத்தாளன். மற்றவன் டி.வி. நடிகன். பின்னவனுடைய திருமணத்துக்குக் காரில் செல்கிறார்கள். கலிபோர்னியாவின் திராட்சைத் தோட்டங்களைச் சார்ந்த ஒயின் தயாரிக்கும் சிறுசிறு நகரங்களின் ஊடே பயணம்.

தன் நாவல் பிரசுரமாகுமா என்ற எழுத்தாளனின் கவலை. ஒயின் தயாரிப்பதைப் பற்றிய அவனது நுட்பமான அறிவு. முதல் திருமணம் முறிந்து போனவன். நடிகன், அடுத்த வார திருமணத்துக்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு பெண்களையாவது 'கரெக்ட்' பண்ணிவிட்டு, நல்ல பையனாக வேண்டும் என்னும் அவசரத்தில் உள்ளவன்.

இவர்களின் ஒரு வாரப் பயணத்தில், அமெரிக்க மண வாழ்க்கையில் உள்ள நிலையாமையையும், உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்டு சந்தோஷம் தேடும் வினோதத்தையும் அலெக்ஸாண்டர் பெய்ன்திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

'ஏவியேட்டர்' உடன் போட்டி போட முடியாதெனினும், ஒரு விருதாவது கிடைக்கும்!

 யாரும் நம் தின வாழ்க்கையில் உள்ள 'டாப் 10' பொய்களைச் சேகரித்ததாகத் தெரியவில்லை. இதோ அந்தப் பட்டியல்! எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை விகடன் வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.

1. அனுப்பிச்சாச்சே... இன்னும் வந்து சேரலையா?
2. இந்தப் புடவைல நீ பருமனாவே தெரியலை!
3. இப்படித் தலை வாரினா, உங்களுக்கு நல்லா இருக்கு!
4. நாப்பது வயசுனு சொல்லவே முடியாது!
5. ஒரு தடவை கேட்டுட்டா, அப்படியே பாடிடுவா!
6. ஒரே ஒரு மார்க்ல போச்சு!
7. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
8. உங்க நம்பர் என்கேஜ்டாவே இருந்தது!
9. நான் பொய் சொல்லவே மாட்டேன்.
10. ஏழ்மை நிச்சயம் ஒழிஞ்சுடும்!

இந்த 'டாப் 10' பொய்களில் விட்டுப்போன கீழ்வரும் வார்த்தைகளைச் சேர்த்தால், 'டாப் 10' நிஜங்கள்...

1. எத்தனைனு ஞாபகமில்லை.
2. விலையையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
3. வழுக்கையை மறைக்கிறதால...
4. நாப்பத்தஞ்சு சொல்லலாம்.
5. அபஸ்வரமா!
6. நாலாவது தடவையும்.
7. எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தேன்!
8. உங்க நம்பர் என்ன?
9. மௌன விரதத்தின்போது!
10. எப்பனு சொல்ல மாட்டேன்.

[‘கற்றதும் பெற்றதும்’ – சுஜாதா]

நன்றி: ஆனந்த விகடன்.

*** *** *** ***

Sunday 2 July 2017

படித்ததில் பிடித்தவை (“டிஸ்கவரி” - சுஜாதா கட்டுரை)


டிஸ்கவரி பற்றி சுஜாதா

பதினான்கு நாட்கள் விண்வெளியில் சுற்றிவிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கேயே நீண்டநாள் வாழும் இருவரை விசாரித்துவிட்டு, அத்யாவசியப் பொருள்களைக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் ரிப்பேர் பார்த்துவிட்டு செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் விண்ஓடம் ஷட்டில் டிஸ்கவரிஃப்ளோரிடாவில் வானிலை சரியில்லாததால் கலிபோர்னியாவில் அதிகாலை வந்து இறங்கியபோது, அரியானாவிலிருந்து அமெரிக்கா வரை லட்சக்கணக்கானவர்கள் பெருமூச்சுவிட்டார்கள். டிஸ்கவரி விண்ணில் சீறியபோதுஹூஸ்டனில் உள்ள விண்வெளி அதிகாரிகள் சாதாரணமாக விண்கப்பல் வந்து இறங்கியவுடன் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்வார்கள். இந்தமுறை சுருக்கமாக, “டிஸ்கவரி வந்து சேர்ந்துவிட்டதுஎன்றார்கள். காரணம், நினைவுத் திரைகள் பின்னோக்கிச் செல்லுகின்றன…
 டிஸ்கவரி டீம்2003-ம் ஆண்டு பிப்ரவரியில் கொலம்பியாவிண்ஓடம் திரும்பி வரும்போது பூமியின் காற்று மண்டலத்தில் அசுரகதியில் நுழைந்ததும் வெடித்து சிதறி, இந்தியாவின் கல்பனா சாவ்லா உட்பட ஏழு விண்வெளி வீரர்கள் இறந்து போனார்கள். இதனால் நாசாவின் நிகழ்ச்சிநிரல் தாமதமாகி பல்வேறு எச்சரிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கொலம்பியா விண்ஓடத்தை வீழ்த்தியதுமுக்கால் கேஜி நுரைத் தண்டு அதன் எரிபொருள் டாங்கிலிருந்து பிய்ந்து, இறக்கையில் ஒரு சின்ன ஓட்டை போட்டதே. இது மறுபடி நிகழாமல் இருக்கஇரண்டரை ஆண்டுகளில் நூறு கோடி டாலர் செலவழித்து சரிபார்த்து அனுப்பியும் கொலம்பியா விண்கலம் போலவே டிஸ்கவரியிலும் கொஞ்சம் நுரைமெத்தை பிய்த்துக்கொண்டு கலங்க வைத்தது. கொலம்பியா போல இதுவும் வெடித்துவிடும் அரிய சாத்தியம் இருந்ததால் எல்லார் வயிற்றிலும் நெருப்பு. கொலம்பியா டீம்
இந்த விண்ஓடங்களை எதற்கு அனுப்புகிறார்கள்? விண்வெளியில் மற்ற கிரகங்களை நோக்கி பயணம் செய்யக்கூடிய விண்கலங்களையும் சேட்டிலைட்களையும் கொண்டுசென்று விடுவிக்கிறார்கள்.

பூமிக்கு மேலே 369 கிலோமீட்டர் உயரத்தில் 92 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்நிலையத்துக்கு விஜயம் செய்து, அங்கு அளவுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைச் சேர்ப்பித்து, தேவையற்ற குப்பையை சேகரித்துக்கொண்டு திரும்புகிறார்கள்.

விண்வெளியில் நடப்பது, ரிப்பேர் செய்வது, விண் விவசாயம், நெடுநாள் விண்வெளிப் பயணத்தின் பாதிப்புகள் போன்ற விஷயங்களில் ஆராய்ச்சி செய்ய பரிசோதனைகள் செய்கிறார்கள். விண்ணில் மிதந்துதரையில் தவழ்ந்துஅப்பாடா 

கொலம்பியா வெடித்தபோது நாசாநிறுவனம் கலங்கித்தான் போய்விட்டது. கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து உருவாக்கிய டிஸ்கவரியிலும் குறைகள் தென்பட்டதால், அடுத்து அவர்கள் அனுப்பவிருக்கும் அட்லாண்டிஸ்ஷட்டில் புரோக்ராம் தாமதமாகிறது. இந்தமுறை தப்பித்தோம் பிழைத்தோம்தான். சிதைந்த பாகம்இப்படி அனுப்பப்படும் விண்ஓடங்கள் விலைமதிப்பில்லாதவை என்ற போதும்…. செலவுக் கணக்கு என்று பார்த்தால் 200 கோடி டாலர்களைத் தொடுகிறது. அமெரிக்கா ஏற்கெனவே அனுப்பியிருக்கும் எண்டெவர்விண்ஓடத்தைக் கட்டுவதற்கு 210 கோடி டாலர்கள் செலவாயின.

இத்தனை செலவழிக்க வேண்டுமா என்று அமெரிக்காவை கேட்டால், அவர்களுக்கு கோபம் வரும். இதனால் மனித சாதிக்கு எத்தனையோ நன்மைகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்று சொல்லி, நிகழ்காலத்தில் ஆப்பிரிக்காவில் சோனிக் குழந்தைகள் செத்துப்போவதை நிராகரிக்கிறார்கள்.

ரஷ்யா, அளவாகத்தான் செலவிடுகிறது. அவர்களின் மிர்என்னும் விண்நிலையமும் சோயுஸ்என்னும் விண்கப்பலும் அத்தனை செலவில்லை. 

எதிர்காலத்தில் இவ்வகையிலான விண்நிலையங்களை பெரிதாக்கி சூரியக் குடும்பத்தின் மற்ற கிரகங்களை நோக்கி நீள்பயணம் செய்யவும், ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது போன்ற விண் நகரங்கள் அமைக்கவும் இந்த டிஸ்கவரியின் பயணம் ஒருவிதத்தில் உதவியிருக்கிறது. இடையிடையே தடங்கலுக்கு வருந்தினாலும், ”நாசாமெள்ள மெள்ள தவறுகளைக் குறைத்து வருகிறது.

என்றாவது ஒருநாள் உங்கள் கொள்ளுப்பேத்தி, ”தாத்தா! செவ்வாய்கிரகத்திலிருந்து உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரணும்?“ என்று கேட்டால், ”ஒண்ணும் வேண்டாம்மாபத்திரமா திரும்பி வாம்மா. அங்கேயே யாரையாவது கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகாம இருந்தா சந்தோஷம்" என்பீர்கள்!

[நன்றி: ஜூனியர் விகடன்]