*சிறுமி அதல்யாவின் விடுமுறை*
“விடுமுறையை
தனக்கு
பிடித்த களிமண்ணாக்கி
இரண்டு
குதிரை பொம்மை செய்கிறாள்.
ஒன்றில்
அவளும்
இன்னொன்றில்
தோழியுமாக
ஊரெல்லாம்
சுற்றி
வருகிறார்கள்.
குதிரையை
பிறகு பறவைகளாக்கி
ஆளுக்கொன்றில்
அமர்ந்து
தூரத்து
மலையைப் பார்க்க
மகிழ்ச்சியாக
புறப்படுகிறார்கள்.
விடுமுறையை
மதியத்திற்கு மேல்
சற்றுநேரம்
வேலை
செய்யுமாறு
பணிக்கிறாள்.
அதுவும்
கட்டளைக்கு
கட்டுப்பட்டு
சேவை செய்கிறது.
ஆற்றுக்கு
விடுமுறையை அழைத்துச் செல்கிறாள்.
சிலசொற்கள்
உச்சரித்து
மீன்களாக
மாற்றி
தண்ணீரில்
விடுகிறாள்.
நீந்திக்
கழிக்கும் அழகில்
இந்த
நாளை இனியதாக்குகிறாள்.
சற்றுநேரம்
கதை சொல்லுமாறு கெஞ்சுகிறாள்.
தான்
யாரையெல்லாம் மகிழ்வித்தோமென்று
ப்ரியமாக
கதை சொல்லத்
தொடங்குகிறது
விடுமுறை.
இரவாகி
விட்டது
போய்வரட்டுமா? என்று
கெஞ்சத்
தொடங்குகிறது விடுமுறை.
போகத்தான்
வேண்டுமாவென
கண்ணில்
நீர்ததும்ப
நோக்குகிறாள்.
இரண்டு
அழுகைகளையும்
கண்ணுற்றும்
மனமிரங்காத
இரவு
இரக்கமற்று
விடியத்
தொடங்குகிறது.”
*அம்சப்ரியா*