*சொந்த வீட்டுக் கதை*
“உங்க அப்பாருக்கிட்ட மூனு வீடு இருந்துது
அதுல
ஒன்னு என் பேர்ல எழுதி வச்சிருந்தாரு
உங்க அத்தைய
கட்டிக்கொடுக்க ஒன்னு
தொழில்ல
நஷ்டம்னு ஒன்னு
பஞ்சம்
பொழைக்க இந்த ஊருக்கே வந்துட
முடிவெடுத்ததால
கடைசியா
என் பேர்ல இருந்த வீடுன்னு
மூனுத்தயும்
வித்துட்டாரு
இப்ப
அந்த இடமெல்லாம்
லட்சக்கணக்குல
போகுதாம்
பாசமா
பழகிய மூனாவது வீட்டு
பத்மினியம்மா
பழகனத
மறந்து
வாடகை வீட்டுக்காரி அவ என்று
தன்
புருஷனிடம் காதில் முணுமுணுத்தபடி
பத்திரிகை
வைக்காமல் அடுத்த வீட்டுக்கு
தாண்டிக்காலிட்ட வாதையில்
தூங்கிக்கொண்டிருக்கும்
நாளாவதாக
பிறந்த ஒரு வயது
குழந்தை
என்னிடம்
விசனப்பட்டுக்கொண்டிருந்த
வழக்கமான
அதே சொந்த
வீட்டுக்கதைதான்
என்றாலும்
இப்போது
கண்ணீர் வராமல்
சொல்லப்பழகியிருந்தாள்
அம்மா
என்
மகளிடம்..!”
*கவிஞர் ச. ராச்*
{வாதை – துன்பம்}