எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 25 February 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“கூண்டுக் கிளிகள்
உங்களிடம்
என்ன பேசிவிடப்போகிறது?
திறந்து விடுங்கள்
என்பதைத் தவிர்த்து..!”

                             -   ரவி உதயன்.

Sunday 22 February 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“அம்மாவின்
வயதொத்தவர்களை
அம்மா என்றழைப்பதைப்
போல
எளிதானதில்லை
அப்பாவின்
வயதொத்தவர்களை
அப்படி அழைத்தல்..!”

                      -  அ. விஜயசாரதி.

Wednesday 18 February 2015

படித்ததில் பிடித்தவை (வைரமுத்து கவிதை)


சிந்திய சிகப்பு துளிகள் ஈழமாய் முளைக்கும் 
“சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே!
நிலம் மீட்டுத் தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை போகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கி வைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று
தேடி அடையாளம் தெரியாத
ஒரு பிணத்துக்கு அழுது தொலைக்கும்
பிள்ளைகளின் அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும் ராஜபக்சே மீதல்ல..

ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல..

எம்மைக் குறையாண்மை
செய்துவைத்த இறையாண்மை மீதுதான்!

குரங்குகள் கூடிக் கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக் கட்ட முடியாதா?

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல!
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை!
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை!

அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால் கண்ணுக்குத் தெரியாத வேர்கள்
அங்கே சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்



பீரங்கி ஓசையில்
தொலைந்து போன
தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!”

                 -  கவியரசு. வைரமுத்து.

Sunday 15 February 2015

காதால் கேட்பதும் பொய்...


“சென்னை
அண்ணாசாலையில்
சிம்சனுக்கும்
LIC நிறுத்தத்துக்கும்
இடையில்
சிக்னலுக்காக நின்ற
மாநகரப்பேருந்தில்
நின்றுக்கொண்டே
அலைப்பேசியில்
பேசுபவர்...
‘நான் LIC தாண்டி
ஆனந்த் ஸ்டாப்ல
இப்ப இறங்கப்போறேன்...
இன்னும் கொஞ்ச
நேரத்தில ஆபீஸ்
வந்துவிடுவேன்..!’
என்றதும்
உட்கார்ந்து பேப்பர்
படித்துக்கொண்டிருந்தவர்
பதறிப்போய் வெளியில்
பார்த்து இன்னும்
LIC வரவில்லை என்று
தெரிந்தப்பின்
சிரித்துக்கொண்டே
அலைபேசியில்
உண்மை பேசியவரை
கவனித்தார்..!

முன் பக்கமாக
பெரியவர் ஒருவர்
‘ஐயோ..! LIC
தாண்டிவிட்டதே..!’
என பரபரப்பாக
பேருந்திலிருந்து
இறங்கியதை
இருவருமே
கவனிக்கவில்லை..!”

- K. அற்புதராஜு.

Thursday 12 February 2015

குளவிக்கூடு


வீட்டை சுத்தம்
செய்யும்போது
ஜன்னல் இடுக்கில்
குளவி கட்டியிருந்த
மண்க்கூட்டை
சுரண்டி எடுத்துவிட்டேன்...

கூட்டை தேடுமோ
குளவி என்று
இரவெல்லாம்
தூக்கம் வரவில்லை..!”

      - K. அற்புதராஜு.

Monday 9 February 2015

வெளிச்சம்


“எப்போதும்
இருட்டாக
இருக்கும்
சிவன் கோவில்
இன்று வெளிச்சமாக
இருந்தாலும்...

உபய எழுத்துக்களின்
புகழ் வெளிச்சத்தில்
சற்றே ஒளி இழந்துதான்
விடுகின்றன
டியூப் லைட்கள்..!”
      -  K. அற்புதராஜு.

Thursday 5 February 2015

ஆசீர்வாதம்


வீட்டுக்கு வரும்
உறவினர்களும், நண்பர்களும்...

சதாபிஷேகம் முடிந்த வயதான
தாய், தந்தையிடம்
காலில் விழுந்து ஆசீர்வாதம்
வாங்கும் போதெல்லாம்...

வீட்டிலேயே இருக்கும்
நாங்கள் அதைப்போல
ஆசீர்வாதம் வாங்குவதில்லையே
என வருத்தப்பட வைக்கிறது..!”

                  -  K. அற்புதராஜு.

Monday 2 February 2015

கான்கிரீட் செடிகள்


“நகரத்தில்
செடி வளர்ந்து
மரமாக மண்
கிடைக்கவில்லை...

நகர மண்ணில்
புதிது புதிதாக
முளைக்கும்
கான்கிரீட் வீடுகளில்
முளைக்கக்
கற்றுக்கொண்டன
விதைகள்..!”
         -  K. அற்புதராஜு.