எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 31 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பார்வை’ – பாப்பு கவிதை)



பார்வை
எதிர் இருக்கைப் பயணி
சே குவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்.

ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிடக்
கேட்டுக் கொண்டான்.

பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக் கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்.

அவனது கண்களும்
பாதி திறந்திருந்தன
என்மீதும் அவன்
சூட்கேஸ் மீதும்..!

-   பாப்பு.
(நன்றி: ஆனந்தவிகடன், 08.09.2010)

Saturday 22 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பள்ளி வாசல்’ – கவிஞர் யுகபாரதி கவிதை)


பள்ளி வாசல்

எல்லாப் பள்ளிக் கூடத்து
வாசல்களிலும்
தட்டுக் கூடையில்
நெல்லி விற்குமொரு கிழவி
குந்தியிருக்கிறாள்.

உருக்கும் வெயிலில்
நாவறளக் கத்திக் கொண்டிருக்கிறான்
ஐஸ் வண்டிக்காரன்.

பிரேயருக்கு முன்னதாக
வராதப் பிள்ளைகளை
வெளியே விட்டுக்
கதவைப் பூட்டுகிறான்
காவலாளி.

பிரம்பைக் கையிலெடுத்து
காந்தியின் அஹிம்சையைப்
போதிக்கிறார் வாத்தியார்.

அடுத்த மாதக் கட்டணத்துக்கு
யாரேனும் ஒரு மாணவனின் தாய்
மூக்குத்தி கழற்றுகிறாள்.

  - யுகபாரதி.

Tuesday 18 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பிறவிகள்’ – கவிஞர். தென்கரை சி.சங்கர் கவிதை)


பிறவிகள்
கதவு
ஜன்னல்
கட்டில், நாற்காலி
இன்னும்
பல பிறவிகள்
எடுத்து விடுகிறது
செத்த பின்பும்
மரம்..!
    
- தென்கரை சி.சங்கர்.

Sunday 16 December 2018

படித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற்காடன் கவிதை)


கடைசித்துளி...
பேருந்திலிருந்து
வீசியெறியப்பட்ட
காலி தண்ணீர் பாட்டிலுக்குள்
நுழைந்து வெளியேறும்
காற்றின் பாதங்களை
நனைக்கிறது
விற்கப்பட்ட நதியின்
கடைசித்துளி..!
    
     -  நாணற்காடன்.

Friday 7 December 2018

படித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று’ – கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை)


அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.

அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.

ஆயிரம் கிளிகளின் அந்தப்புரம்.
ஆயிரம் குயில்களின் பொன்னூஞ்சல்.
ஆயிரம் சிட்டுகளின் உப்பரிகை.
ஆயிரம் காகங்களின் நிழற்குடை.
ஆயிரம் மைனாக்களின் நடைமேடை.
ஆயிரம் எறும்புகளின் தனிநாடு.
ஆயிரம் ஈக்களின் உணவுத்தட்டு.
ஆயிரம் பூச்சிகளின் வளமாநிலம்.
ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்று.
ஆயிரம் நீர்க்கால்களின் வேருறவு.
ஆயிரம் ஆண்டுகளின் உயிர்ச்சான்று.
ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலம்.

அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.


- கவிஞர் மகுடேஸ்வரன்.

Tuesday 4 December 2018

படித்ததில் பிடித்தவை (‘குருவிக்கூடு’ – கவிஞர் தேவதேவன் கவிதை)


குருவிக்கூடு

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு.

இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்.

அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி.

  
 - தேவதேவன்.

Saturday 1 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பாட்டியின் புடவை’ – கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதை)


பாட்டியின் புடவை

பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத் துடைக்கிறது

எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது

பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது

டி.வி., டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது

எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது

இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை..!

-   முகுந்த் நாகராஜன்.