எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 July 2015

படித்ததில் பிடித்தவை (காஞ்சனா ராம் கவிதைகள்)


கோவில் உண்டியல்
“எல்லாக் கோவில்களிலும்,
உண்டியல் இருக்கு...

ஆனா அதுக்கான சாவி,
எந்தக் கடவுளிடமும்
இருப்பதாக தெரியவில்லை..!”



பயணம்...
“காலையில்
அய்யராத்து ஹோமத்தில்
கலந்துட்டு,

மதியம்
பஷீர் பாயின் பிரியாணி
விருந்தை முடிச்சிட்டு,

இரவு பீட்டர் தாத்தா
சாவில்
துக்கம் அனுசரித்தது...

சாமியானா பந்தல்..!”

                                - காஞ்சனா ராம்.

Monday 27 July 2015

பார்த்ததில் பிடித்தது – “அகல்யா” குறும்படம்


குறும்படம்: Akalya (Horror Short Film)






இணையம் துவங்கி வாட்ஸப்பில் கூட இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் குறும்படம் அகல்யா”. சுஜோய் கோஷ் கதை, திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், சில நிமிடங்களில் ஒரு சின்ன த்ரில்லர் படமாக அனைவரையும் கட்டிப்போட்டு விடுகிறது. சுஜோய் கோஷ் தனது கஹானி படத்துக்குப் பின் இயக்கியுள்ள குறும்படம் அகல்யா. 14 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த த்ரில்லர் படத்தில் அகல்யாவாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார்.


ராமாயணத்தின் ஒரு பாத்திரமான அகல்யா தன் கணவன் போல் வந்த இந்திரனால் ஏமாற்றப்பட்டுவிடுவாள். அதற்கு சாபமாக அவளை கல்லாக போக வேண்டும் என சபித்துவிடுவார் அவளது வயதான கணவன் கௌதமா. ஆனால் அது அப்படியே உல்டாவாக தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த அகல்யாபடத்தின் கதை. மாடர்ன் பெண்ணாக அகல்யா இருப்பின் அவள் கண்டிப்பாக தவறு செய்த இந்திரனைத்தான் கல்லாக்கியிருப்பாள் என்பதையே கதைக்களமாக நமக்கு காட்டுகிறது.

குறும்படத்தைக் காண: 




கதை இதுதான், ஒரு போலீஸ் அதிகாரி  ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறார். அங்கே ஆரம்பமாகிறது படம். சிறிது நேரத்தில் ஒரு அழகான பெண் அகல்யா கொஞ்சம் கவர்ச்சியான உடையில் கதவைத் திறக்க போலீஸின் கவனம் சிதறுகிறது. வீட்டுக்குள் வரும் போலீஸ் இந்திரா சென்னின் கண்கள் அங்கிருக்கும் வித்தியாசமான பொம்மைகள் மீது விழுகிறது. காபி, டீ ஏதும் வேண்டுமா? எனக் கேட்க சரி எனக் கூறும் போலீஸிடம் அகல்யா, இந்த பொம்மைகளுக்கு இதுவே வேலை. யாராவது புது ஆள் உள்ளே வந்தால் குறும்பு செய்வது எனக் கூறி எடுத்து வைக்கிறார்.



போலீஸ் அதிகாரி சிலை வடிவமைப்பாளர் கௌதமா சாது குறித்து அகல்யாவிடம் விசாரிக்க இதோ வரச் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார் அகல்யா. அப்போதுதான் போலீஸின் கண்கள் ஒரு பொம்மையின் மீது விழுகிறது. அது தான் தேடி வந்த நபரை ஒத்திருப்பதை கண்டறிகிறார். சிறிது நேரத்தில் கௌதம் சாது அங்கே வர உங்க மகள் இந்த பொம்மை குறித்து கூறினார், என்றவுடன் அகல்யா என் மகள் அல்ல, மனைவி. சரி விடுங்கள், எல்லோரும் அப்படித்தான் நினைப்பார்கள் எனக் கூறிவிட்டு அவர் வந்த காரணம் குறித்து கேட்க, அர்ஜுன் என்ற வாலிபர் காணாமல் போய்விட்டார் கடைசியாக அவர் உங்களைத்தான் சந்தித்துள்ளார் என கேட்க, கௌதமா தான் வைத்திருக்கும் ஒரு மாய கல் குறித்து சொல்கிறார். இந்தக் கல்லை வைத்துக் கொண்டு நாம் யாராக மாறவேண்டும் என நினைக்கிறோமோ அப்படியே மாறிவிடுவோம் என சொல்கிறார் கௌதமா.

இதை நம்பாத போலீஸ் ஆபிசரிடம், வேண்டுமானால் நீங்களே சோதித்து பாருங்கள், கல்லை வைத்துக்கொண்டு என்னை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த மொபைலை என் மனைவியிடம் கொடுங்கள், எனக் கூற போலீஸ் இந்திராவும் அதை செய்கிறார். அகல்யா இந்திராவை அவள் கணவன் கௌதமா எனக் கட்டிபிடிக்க, அங்கிருக்கும் கண்ணாடியில் இந்திரா, கௌதமாவாக தெரிய அதிர்ச்சியில் மொபைலை கொடுத்துவிட்டு நகர்கிறார்.



எனினும் குரங்கு மனம், அகல்யாவின் அழகு என இந்திராவின் அறிவை அகல்யா இருக்கும் அறைக்கு மீண்டும் இழுக்கிறது. மீண்டும் போலீஸ் அதிகாரி இந்திரா சென் விழித்துப் பார்க்கையில், தான் எதனுள்ளேயோ அடைபட்டிருப்பதை உணர்ந்து கத்துகிறார். அப்போதுதான் கேமரா அப்படியே தூரம் சென்று அடுக்கி வைத்திருக்கும் பொம்மைகளில் நிற்கிறது.

அக்லயாவாக ராதிகா ஆப்தே, போலீஸ் அதிகாரி இந்திரா சென்னாக டோடா ரோய், சௌத்ரின் கௌதமா சாதுவாக சௌமித்ரா  சாட்டர்ஜி நடித்துள்ளனர். சின்ன கதாபாத்திரங்கள், ஒரே லோகேஷன் என எளிமையாக சமுதாயத்தை கொஞ்சம் சிந்திக்க வைத்திருக்கும் படம். மாடர்ன் தேசத்தில் அகல்யா பிறந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் என்பதின் கற்பனையே இந்த அகல்யா குறும்படம். ஆண்களின் மீது தவறுகளே இருந்தாலும் பெண்களை அதற்கு தண்டிக்கும் புராணங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஒரு நல்ல சாட்டையடி.

-   ஷாலினி நியூட்டன் (சினிமா விகடன் உலக சினிமா, 25.07.2015)

*** *** *** *** ***

Friday 24 July 2015

பார்த்ததில் பிடித்தது – “He Dies At The End” - Short Film


குறும்படம்: He Dies At The End (Horror Short Film).




2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டமானியன் மெக் கார்தி கதை திரைக்கதையில் உருவான ஜெர்மன் நாட்டு குறும்படம் ஹி டைஸ் அட் தி எண்ட்’ (He Dies At The End). வசனங்களோ, பெரும் பொருட் செலவோ இல்லாமல், மேலும் ஒரே ஆளை வைத்து வெறும் 4 நிமிடங்களில் ஒரு குட்டி திகில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

சிறந்த ஹாரர், சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர் என பல பரிந்துரைகளின் வரிசையில் அர்ஜெண்டினா, அமெரிக்கா, பாஃப்தா, சிஐஎஃப், பிஎக்ஸெம் உள்ளிட்ட பல விருதுகளை வென்று  இந்த படம் இப்போது வரை யூடியூபில் பலரையும் கவர்ந்துள்ளது.

குறும்படத்தைக் காண: 


கதை இதுதான், நேரம் கடந்து இரவில் கணிணியில் வேலை செய்யும் ஒருவர். அவருக்கு, தனக்கு பின்னால் இருக்கும் இருட்டுப் பகுதி அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. எனினும் வேலை மும்முரத்தில் தொடர்ந்து பணி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரது கணிணி அவரிடம் சில கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறது. உங்கள் மரணம் எப்படி என தெரிய வேண்டுமா என ஆரம்பித்து,

நீங்கள் நேர்மையானவரா, தனியாக இருக்கிறீர்களா, என பல கேள்விகள் வரிசையாக ஆம், இல்லை பதில் கூறும்படி போக ஒரு கட்டத்தில் அவரது டேபிளில் இருக்கும் பொருட்கள், பொம்மை, செடி என கேள்விகள் எழ பயம் தொற்றிக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் நீங்கள் நேர்மையானவரா, தனியாக இருக்கிறீர்களா, உங்கள் பின் பகுதியில் இருட்டாக இருக்கிறதா, உங்கள் பின்னால் இருக்கும் நபர் யார் என கேட்க அவ்வளவு தான் பயத்தின் உச்சத்திற்கு செல்கிறார் அந்த மனிதர்.

அப்படியே பின்னால் நகர ஒரு ஜந்து போன்ற உருவம் பக்கத்தில் நிற்க படம் முடிகிறது. நாயகனாக ஃபிண்டன் கோலின் நடித்திருக்கிறார்.

  -   ஷாலினி நியூட்டன் (சினிமா விகடன் உலக சினிமா, 22.07.2015)

*** *** *** *** ***

Monday 20 July 2015

படித்ததில் பிடித்தவை (ராயகோபுரம் - சுஜாதா கட்டுரை)


ராயகோபுரம் - சுஜாதா
ராயகோபுரத்தை ஒட்டியிருந்த சந்துகளில் ஒரு மாதிரி சொதசொதவென்ற கறுப்புப் பன்றிகளும், முனிசிபல் ஆயுதங்களுமாக இருக்கும். ஒரு தடவை டவுன் பஸ்ஸில் கோட்டை மெயின்கார்ட் கேட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஒரு திருடன் அந்தச் சந்தில் ஓடி மறைவதைப் பார்த்தேன். ராயகோபுரத்துக்கு வெளியே, ஆர்ச்சு வளைவாக ஒரு வாசல் இருக்குமே அதனுள் ஒரு காலனி; ஒட்டு வீடுகளாக உண்டு. அந்தக் காலனியையெல்லாம் நாங்கள் ஸ்ரீரங்கமாகவே கருதமாட்டோம். திருடன் அந்தக் காலனியிலிருந்து வெளிப்பட்டு, ராயகோபுரத்தை ஒட்டிய சந்தில் மறைந்தான். அவனைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் உள்ளே போய் நாற்றம் சகிக்கவில்லையென்று திரும்பி வந்து விட்டார்கள். மதிலெல்லாம் ஏற முடியாது; இங்கேதான் திரும்ப வந்தாக வேண்டும் என்று திருடனுக்காகக் காத்திருந்தார்கள். பேருக்குப் பேர், கம்பு, கொடிக்குச்சி, புளிய மிலாறு என்று வைத்திருந்தார்கள். எனக்குத் திருடன் வெளியே வராமல் இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது! சந்தின் அந்தப் பக்கம் மடக்க, ஒரு கோஷ்டி போயிருந்தது.

அந்தத் திருடன் பொறுமையிழந்து அல்லது நாற்றம் சகிக்காமல் வெளியே வந்து வசமாக மாட்டிக் கொண்டான். அவர்கள், அவனைப் பந்தல் காலில் கட்டித் தர்ம அடி அடித்தார்கள். ஒரு குட்டிப் பையன் கூட இடைவெளி வழியாக அவனை எட்டி உதைத்தான். திருடுவியா, திருடுவியா என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவன் பதிலே சொல்லாமல் ஒவ்வொரு அடித்தவரையும் புதியவரைப் போல பார்த்துக்கொண்டே இருந்தான். வாயோரத்தில் ரத்தம் தெரிந்தாலும் அழவே இல்லை.

நான் ஓரத்திலிருந்து அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு அடியும் என்மேல் விழுவது போலத் தோன்றியது. என்ன ஸார் திருடிவிட்டான்? என்றதற்கு, லட்சுமண ராவ் வீட்டில் திருட வந்ததாகவும், எடுத்துக் கட்டி’ யிலிருந்து எட்டிப் பார்த்ததாகவும் ராயர் பெண் வீட்டுக்கு விலக்கானதால் மாடியிலிருந்து கூச்சல் போட, தாவிக் குதித்து ஓடிப் போய்விட்டான் என்றும் சொன்னார்கள். போலீஸ்காரர்கள் வந்து திருடனை அடிக்காதீங்க. ஸ்டேஷன்ல நாங்க பார்த்துக்கிறோம். அடிக்காதீங்க என்று விடுவித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பிறகு, அந்தத் திருடனை என் வாழ்நாளில் மறுபடி பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை.



விதியின் சின்ன விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். நான் போனவாரம் பம்பாய் கம்ப்யூட்டர் மகாநாட்டுக்குச் சென்றிருந்தபோது, க்ராஸ் மைதானத்தில் எக்ஸிபிஷனில் ஹாலுக்கு ஹால் நடந்து, அலுத்துப் போய் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தபோது, ஒரு ஆள் என் அருகில் வந்து, நீங்க தானே என்று தயங்க, ஆமாம் நான் தான்’ என்றேன்.

நீங்க ஸ்ரீரங்கம்னு கேள்விப்பட்டேன். ஃபோட்டோவில் பார்த்திருக்கேன்

சந்தோஷம். நீங்களும் கம்ப்யூட்டரா…?

ஆமாம். நானும் உங்களைப் போலவே ஸ்ரீரங்கம், கம்ப்யூட்டர்

ஸ்ரீ ரங்கத்தில் எங்கே?

அம்மா மண்டபத்தில் இருந்தேன். ஸ்ரீரங்கத்தில் மறக்க முடியாதது ராயகோபுரம். அந்தக் கோபுரத்துக்கு முன்னால் ஒரு முறை என்னைக் கம்பத்தில் கட்டி உதை உதைன்னு உதைச்சிருக்காங்க!

அப்படியா! எந்த வருஷம்?

1949!

வாட் எ சர்ப்ரைஸ்! அந்த சம்பவத்தை நான் பார்த்திருக்கேன். பந்தல் கால்ல கட்டி வெச்சுநீங்கதானா அந்தத் திருடன்! இப்ப என்ன பண்றீங்க ?

கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயன்டிஸ்ட்டா இருக்கேன். நீங்ககூட என்னை அடிச்சீங்களா அன்னைக்கு?

சேச்சே! உங்களைப் போலீஸ்காரர் நல்ல வேளை அழைச்சுட்டுப் போயிட்டார்! ஆச்சரியம் ஆச்சரியம்! ஸ்ரீரங்கத்தில் திருட்டிலிருந்து, கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயன்ஸா?

திருடவும் இல்லை ஒண்ணும் இல்லை ஸார்!”

அப்படியா? பின்னே எதுக்கு உங்களைத் துரத்தி வந்து அடிச்சாங்க?

இதைச் சொன்னால் கதை பண்ணிடுவீங்கஅன்னிக்கு நான் லட்சுமண ராவ் பொண்ணை, மாலினி மாலினின்னு வாட்ட சாட்டமா இருப்பா தெரியுமா ?

தெரியாது என்றேன் அவசரமாக.

அவளைப் பார்க்கத்தான் மாடிக்குப் போயிருந்தேன். மாட்டிக்கிட்டேன்! ஓடி வந்துட்டேன்! அந்தப் பொண்ணும் சமயோசிதமா திருடன் திருடன்னு கத்திருச்சு? நான் திருடன் இல்லை. அந்த மாலினியைப் பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லியிருந்தால் அவளை நிமித்தியிருப்பாரு அவங்கப்பா!

யூ மீன் அந்த அடியெல்லாம் ஒரு பொண்ணைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கறதுக்காக வாங்கிக்கிட்டீங்களா?

ஆமாம். ஐ வாஸ் ஸோ ரொமாண்டிக் அட்தட் டைம்! அந்த மாலினி எங்க இருக்கா இப்பன்னு கூடத் தெரியாது!

- சுஜாதா (“ஓரிரு எண்ணங்கள்” தொகுப்பில் ‘ராயகோபுரம்’ – சில பகுதிகள்            மட்டும்)
*** *** ***