“அவரால் நேராக
நடக்கமுடியவில்லை.
வளைந்து, திரும்பி, இடிக்காமல்
நடக்கவேண்டியுள்ளது.
குறுக்கே செல்பவர்களுக்காக
வேகத்தைக் குறைக்கவேண்டியுள்ளது.
எதிரே வரும் இளைஞர்கள்
அவரைப் பார்க்காமல்
கையிலிருக்கும் கைப்பேசியை
பார்த்து நடக்கிறார்கள்.
அவர்கள் மேல்
மோதாமல் நடக்கிறார் அவர்.
முன்னால் எச்சில் துப்பிக்கொண்டு
அதன் மீதே நடக்கிறார்கள்.
எச்சில் அவர் மீதுப்படாமல் அவர்தான்
பார்த்து நடக்கவேண்டியுள்ளது.
நடைப்பாதையில்
கடைப்போட்டுள்ளார்கள்.
பொருட்களை மிதிக்காமல்
நடக்கிறார் அவர்.
நன்றாக காற்று வீசினாலும்
அனுபவிக்க விடவில்லை
நடைப்பாதை ஓரத்தின்
இயற்கை உபாதை கழிவுகள்.
மூக்கைப் பிடித்துக்கொள்கிறார்.
மகனை நினைத்து அவரது
கண்கள் கலங்கிப் போகிறது.
கிராமத்திலிருந்து
முதன் முதலாக
நகரத்திலிருக்கும்
மகன் வீட்டுக்கு வருகின்ற
அந்தப் பெரியவரை
தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறது
தலைநகரத்தின் மிகப்பெரிய
ரயில்வே நிலையம்..!”
- கி. அற்புதராஜு.