எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 13 November 2023

படித்ததில் பிடித்தவை (“பூவரச மரம்” – கல்யாண்ஜி கவிதை)

 

*பூவரச மரம்*

 

இப்படி இரு சிறார்கள்

என் கீழ் சிரிப்பார் எனில்

நான் பூவரச மரமாகவே

இருந்திருப்பேன்..!

 

இப்படி ஒரு பூவரச மரம்

எங்களுக்கு மேல் 

இலையசைக்குமெனில்

நான் ஓட்டைப் பல் சிறுமியாகவே

இருந்திருப்பேன்..!

 


*
கல்யாண்ஜி*



Saturday 11 November 2023

*அவரோகணம்*


 அலுவலகம் செல்ல

ரயிலில் இடம் பிடித்து

சற்றே ஆசுவாசமாக

உட்காரலாமென்றால்...

 

கிடைக்கும் ஒற்றை சீட்டில்

செருப்பு காலை வைத்து

இளைப்பாறுகிறார்

எதிர் இருக்கைக்காரர்.

 

என்னைப் பார்த்தவுடன்

வேண்டா வெறுப்புடன்

காலை எடுக்கிறார்.

 

உட்கார மறுக்கிறது

மனசு..!


*கி. அற்புதராஜு*

Monday 6 November 2023

*முதல் வாசகர்*

 


ரயில் பயணத்தில்

சட்டென தோன்றிய கவிதையை

கைப்பேசியில் எழுதுகிறேன்...

 

பக்கத்து இருக்கைப் பெரியவர்

எட்டி எட்டிப் பார்த்து

படிக்க முயற்சிக்கிறார்...

 

அவர் பார்வையில் படாமல்

மறைத்துக்கொள்கிறேன்

அக்கவிதையை...

 

ஒரு கவிதையை

எழுதும் போது

அது கவிஞருக்கும்

கவிதைக்குமான

ரகசியம்.

 

கவிதை

பிரசவிக்கும் போதே படிப்பது

கவிஞரையும் கவிதையையும்

நிர்வாணமாக்குகிறது.

 

சற்றேப் பொறுத்தால்

அந்த கவிதையின்

முதல் வாசகராகலாம் அவர்..!



*
கி. அற்புதராஜு*

Wednesday 1 November 2023

*சாரி சார்...*

 


பிற மனிதர்களிடம்

தவறி இழைக்கும்

தொந்தரவுகளுக்கு

இப்போதெல்லாம்

அபூர்வமாகதான்

கேட்க முடிகிறது

'சாரி சார்...'

என்ற வார்த்தையை..!

 

தவறுகளுக்கு

ஆத்மார்த்தமாக

மன்னிப்பு கேட்கையில்

ஏற்றுக் கொள்பவரின்

சிறு மன அசைவு கூட

கேட்பவரின் மனதை

நிறைவிக்கும்.

 

இருவருக்குள்ளும்

மனிதம் துளிர்க்கும்

ஆனந்த செயலது..!



*
கி. அற்புதராஜு*