எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 30 November 2020

படித்ததில் பிடித்தவை (“அதிகாரம்” – மகுடேசுவரன் கவிதை)


*அதிகாரம்*

 

அதிகார வெறியில்

நிலை தடுமாறும் முன்,

ஒரு பாழடைந்த கோட்டையைப்

பார்த்துவிட்டு வாருங்கள்..!

 

*மகுடேசுவரன்*


Sunday 29 November 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தையும் தெய்வமும்” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*குழந்தையும் தெய்வமும்* 

 

குழந்தைகள் இருக்கும்போது

கடவுள் இல்லையென்று சொல்வதற்கு

கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது..!

 

குழந்தையின் சூ மந்திரகாளிக்கு

மயங்கி விழுந்து

மீண்டும் ஒரு மந்திரத்தில்

உயிர்த்தெழுவான்

நாத்திகத் தந்தையும்..!

 

எல்லாக் கடவுள்களுக்கும்

இஷ்ட தெய்வம்

ஒன்றுதான் -

குழந்தை..!

 

கடவுள்களின் வாகனங்களில்

குழந்தைகள் துணை

என்றுதான் எழுதியிருக்குமாம்.

நீங்கள் கடவுளைக் காணநேர்ந்தால்

கவனித்துப் பாருங்கள்..!

 

கடவுள்களின் இப்போதைய

திருவிளையாடல்களில் ஒன்று

குழந்தைகளின் பென்சில் ரப்பரை

பிடுங்கி வைத்துக்கொள்வதுதான்..!

 

அழுதுகொண்டு வரும்

கடவுள்களை நீங்கள்

அடிப்பதைப் பார்த்துத்தான்

நமக்கேன் வம்பு என்று

கடவுள் வரவே மாட்டேனென்கிறார்..!

 

குழந்தையைக் காணாமல்

நீங்கள் பதைபதைத்துத் தேடும்போது

தூக்கிவைத்திருந்த குழந்தையை

இறக்கி விட்டு விட்டு

சட்டென அங்கே ஒரு

சிட்டுக்குருவியாகவோ பூனைக்குட்டியாகவோ

கடவுள் உருமாறிக்கொள்கிறார்..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*


Saturday 28 November 2020

படித்ததில் பிடித்தவை (“வீடு” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*வீடு*            

 

வாடகைக்கு என்றும்

விற்பனைக்கு என்றும்

அறிவிப்புகள் தொங்குகின்றன.

 

ஒரு வீடு

தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்வதற்கு..!

 

*சேயோன் யாழ்வேந்தன்*


Friday 27 November 2020

படித்ததில் பிடித்தவை (“அற்புதம்” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*அற்புதம்* 

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*


Thursday 26 November 2020

படித்ததில் பிடித்தவை (“நீ எப்படி..?” – ரா. பார்த்திபன் கவிதை)

 


*நீ எப்படி..?*

 

விலக

விலக

புள்ளிதானே…

 

நீ

எப்படி

விசுவரூபம்..?

 

*ரா. பார்த்திபன்*

(கிறுக்கல்கள்)


Wednesday 25 November 2020

படித்ததில் பிடித்தவை (“நான்கு நட்சத்திரங்கள்” – ஆன்டன் பெனி கவிதை)

 


**நான்கு நட்சத்திரங்கள்**  

 

 நட்சத்திரங்களை

எண்ணிக்கொண்டிருந்த மகள்

நடுவிலேயே தூங்கிவிட்டாள்.

நான் எவ்வளவு சொல்லியும்

இரவு முழுவதும் காத்திருந்தன

நட்சத்திரங்கள்

அவள் எப்படியும் எழுந்துவிடுவாள் என..!

.

பூந்தொட்டித் தண்ணீரில்

நிலா தவறி விழுந்துவிட்டதென

காப்பாற்றச் சொல்லி நிற்கிறாள் மகள்..!

 

இப்போது அவளுள் தவறி விழுந்த என்னை

அந்த நிலா தான் காப்பாற்றியாக வேண்டும்.

 

அப்பா

அம்மா

அண்ணா

தனக்கு

என,

நட்சத்திரங்களுக்குப்

பெயர் வைத்துக் கொண்டிருந்த மகளுக்கு

நான்கு நட்சத்திரங்களே போதுமானதாயிருக்கிறது..!

 

  *ஆன்டன் பெனி*


Tuesday 24 November 2020

படித்ததில் பிடித்தவை (“கிழியாத அன்பு” – தமிழன்பன் கவிதை)

 

*கிழியாத அன்பு*

 

தொப்பையாய்

நனைந்துவிட்ட மகள்

அப்பா

தலையை நல்லாத் துவட்டுங்க

என்றாள்

கிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்..!

 

*தமிழன்பன்*

{நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்}


Monday 23 November 2020

படித்ததில் பிடித்தவை (“மனிதநேயம்” – மன்னார் அமுதன் கவிதை)

 

*மனிதநேயம்*

 

தூரப் பயணத்தில்

திடுக்கிட்டு உணர்கிறேன்

விபத்தை..!

 

மாடும், மனிதனும்

மாம்பழங்களுமாய்

கிடக்கிறது நெடுஞ்சாலை..!

 

உச்சுக் கொட்டியவர்கள்

ஓடிப் போய்

அள்ளிக் கொண்டனர்

மாம்பழங்களை..!

 

*மன்னார் அமுதன்*


Sunday 22 November 2020

படித்ததில் பிடித்தவை (“வராத உறக்கம்” – வண்ணதாசன் கவிதை)

 









*வராத உறக்கம்*

 

வராத

உறக்கத்தை போல்

ஒரு அவஸ்தையில்லை..!

 

வந்துவிட்ட

விழிப்பை போன்ற

ஒரு உற்சாகமில்லை..!

 

*வண்ணதாசன்*


Saturday 21 November 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தை கட்டிய வீடு” – கவிதை)

 



*குழந்தை கட்டிய வீடு*  

 

வீட்டை

வரைந்துவிட்டு

சோம்பல் முறிக்கிறது

குழந்தை,

அப்பாடா

வீடு கட்டியாச்சு என்று..!


Friday 20 November 2020

படித்ததில் பிடித்தவை (“வெட்கம்” – இளந்தென்றல் கவிதை)

 



*வெட்கம்*

 

சோறை போட்டவுடன்

கொஞ்சம்

வெறும் சோத்தை தின்று

தன் வெட்கத்தை

வெளிப்படுத்துகிறது

இந்த பசி..!

 

*இளந்தென்றல்*