மயிலிறகைக்
காணவில்லை..!
அடம் பொறுக்க முடியாமல்
எங்கிருந்தோ எப்படியோ
அப்பா வாங்கி தந்துவிட்டார்
அழகான இரண்டு மயிலிறகு!
அறிவியல் புத்தகத்தில் வைத்து
அரிசி நாள் தவறாமல் போட்டு
ஒரு நாளைக்கு எட்டுத் தடவை பார்த்தும்
என்னுடையது குட்டி போடவில்லை!
என்னுடையது போடவில்லை
என்று கூட அழுகை வரவில்லை
அரிசியே போடாத எழுமலையுடையது
போட்டுவிட்டது என்ற போதுதான்
பொங்கிப் பொங்கி வந்தது.
அப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும்
அழுகை!
பலப்பத்தைப் பிடுங்கிக் கொள்ளும்
பக்கத்து இருக்கை பரசுவை
எதிர்க்க முடியாத போது...
எச்சில் துப்பி குழிமூடிச் சுட்ட
மண் இட்லிகளை மகேசு
மிதித்துப் போன போது...
அரசிலையைச் சுருட்டிச் செய்த
சீக்கியில் சத்தம் வராத போது...
இன்னும்...
தூரத்தில் கோடங்கிச் சத்தத்திற்கும்,
யாரும் பார்க்காத போது
அண்ணன் கிள்ளுவதற்க்கும்...
ஒப்பாரி இல்லாமல்
ஒரு நாள் கூட வீடு திரும்பியதில்லை...
எப்போது நிகழ்ந்ததென்றே
தெரியவில்லை..!
முக்குத் திரும்புகையில்
கல் தடுக்கி விழுந்து
முட்டியை உடைத்துக் கொண்ட போதும்
ஒப்பாரி வைக்காமல்
சுற்றுமுற்றும் பார்த்துத் துடைத்துக்
கொண்ட தினத்திலிருந்து
என் மயிலிறகைக் காணவில்லை..!
-
தாமரை (கணையாழி,
ஆகஸ்ட்-1998).