எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 31 August 2016

படித்ததில் பிடித்தவை (“நாய்” – ஞானக்கூத்தன் கவிதை)


நாய்
“காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்.

ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன.
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன.
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன.
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின.

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்..?

-         ஞானக்கூத்தன்.

Sunday 28 August 2016

படித்ததில் பிடித்தவை (“மியாவ்” – சுந்தர ராமசாமி கவிதை)


மியாவ்
எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது.
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்.
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்.
குழந்தைகள் அழுதன.
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்.
நான் பேசத் தொடங்கினேன்:
“இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...”

-          சுந்தர ராமசாமி.

Monday 22 August 2016

அழகாகி விடுகிறாள்...


“மாநகரப் பேருந்தில்
மாற்றுத்திறனாளிகள்
முதியோர் இருக்கையில்
அமர்ந்திருக்கும்
ஆரோக்கியமான
அந்த இளம் பெண்
அப்படி ஒன்றும்
அழகில்லை...

ஆனால்
அடுத்த நிறுத்தத்தில்
பேருந்தில் ஏறிய
அந்த வயதான
அம்மாவுக்கு
இடம் கொடுத்து
எழுந்து நின்றவள்
அவ்வளவு
அழகாகி விடுகிறாள்..!”
-   கி. அற்புதராஜு.

Thursday 18 August 2016

படித்ததில் பிடித்தவை (ஐந்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு - நா. முத்துக்குமார் கவிதை)


ஐந்தாம் வகுப்பு பிரிவு  
மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்.

படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறங்க?”

முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
டாக்டர்என்றார்கள்
கோரஸாக.

இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.

இன்ஜினியர் ஆகப்போகிறேன்
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.

எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.

பிளைட்  ஓட்டுவேன்
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.

அணுசக்தி
விஞ்ஞானியாவேன்
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,
வாத்தியாராவேன்
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.

நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?”
என்றேன்.

சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை..!
என்றான்.

-          நா. முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகஸ்ட் 2016).
*** *** *** ***

Saturday 13 August 2016

பிஸ்கட்



“எனக்குப் பிடித்த
எள்ளு உருண்டை,
கடலை மிட்டாய்,
பிரிட்டானியா பிஸ்கட்,
பவண்டோ என
ஆசைப்பட்ட
அனைத்தையும்
கடையில் வாங்கி
கைப்பையில்
தினித்துக்கொண்டேன்
நெடுந்தூர ரயில்
பயணத்துக்காக...

எனக்கான பெட்டியில்
தாத்தாவும், பாட்டியும்...
இரண்டு அழகான
குழந்தைகளுடன்
தம்பதிகள்...
முதலில் குழந்தைகளுடன்
பேசத்தொடங்கிய நான்
கொஞ்ச கொஞ்சமாக
எல்லோருடனும் பேச்சு
தொடர்ந்தது...

சற்றே பசியை உணர்ந்த நான்
கைப்பையில் வைத்திருந்த
தீனிக்களை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ள முடியாமல்
நானும் சாப்பிட முடியாமல்
செய்து விட்டார்கள்...

எங்கோ ஏமாற்றித் திருடிய
சில பிஸ்கட் பண்டிட்கள்..!”

-   கி. அற்புதராஜு.

Saturday 6 August 2016

படித்ததில் பிடித்தவை (வழியில் ஒரு சந்திப்பு - மனுஷ்யபுத்திரன் கவிதை)


வழியில் ஒரு சந்திப்பு
“பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்
இரண்டு தோழிகள்
வழியில் எங்கோ
ஒரு கடைவாசலில் வைத்து
தற்செயலாகச் சந்தித்துக்கொண்டார்கள்

எப்படியிருக்கிறாய்
என்று கேட்டுக்கொள்ளக்கூட
அவர்களுக்கு அவகாசம் இல்லை
வெறுமனே அணைத்துக்கொண்டு
தேம்புகிறார்கள்

பதினைந்து ஆண்டுகளில்
இரண்டு பெண்களுக்கும்
என்னவெல்லாம் நடந்திருக்கக்கூடும்?

இரண்டு பெண்களுக்கும்
அது மிக நீண்ட காலம்
அது மிக நீண்ட பருவம்
அது மிக நீண்ட ஒரு கதை
அது மிக நீண்ட ஒரு கண்ணீர்

இரண்டு பெண்களில்
ஒருத்தி பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்பு
எப்படி இருந்தாளோ
அப்படியேதான் இருக்கிறாள்
அது இன்னொருத்தியை
மனமுடையச் செய்கிறது

ஒருத்தியின் கைகளில் இன்னொருத்தி
ஆழமான காயத்தழும்புகளைப் பார்க்கிறாள்
கேட்பதற்கு என்ன இருக்கிறது?
சொல்வதற்கு என்ன இருக்கிறது?

யார் யாரைத் தேற்றுகிறோம்
என்று தெரியாமல்
மூன்று நிமிடங்கள் அழுகிறார்கள்
அது எல்லாவற்றிற்கும்
போதுமானதாக இருந்தது

கண்களைத் துடைத்துக்கொண்டு
‘ஒரு ஜூஸ் குடிக்கலாமா?’
என்கிறாள் ஒருத்தி
அவர்கள் அந்தத் தனிமையின்
முழு வெப்பத்தையும்
இரண்டு கிளாஸ்களில் பருகினார்கள்

ஒருத்திக்கு இன்னொருத்தியிடமிருந்து
பெற்றுக்கொள்ள ஏதோ இருந்தது
ஒருத்திக்கு இன்னொருத்திக்குத் தர
ஏதோ இருந்தது
கொடுப்பதற்கும் பெறுவதற்கும்
உண்மையிலேயே என்ன இருக்கிறதென்று
அவர்களுக்குத் தெரியவில்லை

அவரவர் வழியில் செல்வதற்கு முன்
கண்ணீரில்லாமல் ஒருமுறை
அவர்கள் அணைத்துக்கொள்ளக்கூடும்.”

(கவிதை: மனுஷ்ய புத்திரன், ஓவியம்: செந்தில்)
(நன்றி: ஆனந்தவிகடன், 03.08.2016)