“இப்படி
இரு சிறார்கள்
என் கீழ் சிரிப்பார் எனில்
நான் பூவரச மரமாகவே
இருந்திருப்பேன்..!
இப்படி ஒரு பூவரச மரம்
எங்களுக்கு மேல்
இலையசைக்குமெனில்
நான் ஓட்டைப் பல் சிறுமியாகவே
இருந்திருப்பேன்..!”
“இப்படி
இரு சிறார்கள்
என் கீழ் சிரிப்பார் எனில்
நான் பூவரச மரமாகவே
இருந்திருப்பேன்..!
இப்படி ஒரு பூவரச மரம்
எங்களுக்கு மேல்
இலையசைக்குமெனில்
நான் ஓட்டைப் பல் சிறுமியாகவே
இருந்திருப்பேன்..!”
ரயிலில்
இடம் பிடித்து
சற்றே
ஆசுவாசமாக
உட்காரலாமென்றால்...
கிடைக்கும்
ஒற்றை சீட்டில்
செருப்பு
காலை வைத்து
இளைப்பாறுகிறார்
எதிர்
இருக்கைக்காரர்.
என்னைப்
பார்த்தவுடன்
வேண்டா
வெறுப்புடன்
காலை
எடுக்கிறார்.
உட்கார
மறுக்கிறது
மனசு..!”
*கி. அற்புதராஜு*
“ரயில் பயணத்தில்
சட்டென
தோன்றிய கவிதையை
கைப்பேசியில்
எழுதுகிறேன்...
பக்கத்து
இருக்கைப் பெரியவர்
எட்டி
எட்டிப் பார்த்து
படிக்க
முயற்சிக்கிறார்...
அவர்
பார்வையில் படாமல்
மறைத்துக்கொள்கிறேன்
அக்கவிதையை...
ஒரு
கவிதையை
எழுதும்
போது
அது
கவிஞருக்கும்
கவிதைக்குமான
ரகசியம்.
கவிதை
பிரசவிக்கும்
போதே படிப்பது
கவிஞரையும்
கவிதையையும்
நிர்வாணமாக்குகிறது.
சற்றேப்
பொறுத்தால்
அந்த
கவிதையின்
முதல்
வாசகராகலாம் அவர்..!”
“பிற மனிதர்களிடம்
தவறி
இழைக்கும்
தொந்தரவுகளுக்கு
இப்போதெல்லாம்
அபூர்வமாகதான்
கேட்க
முடிகிறது
'சாரி சார்...'
என்ற
வார்த்தையை..!
தவறுகளுக்கு
ஆத்மார்த்தமாக
மன்னிப்பு
கேட்கையில்
ஏற்றுக்
கொள்பவரின்
சிறு
மன அசைவு கூட
கேட்பவரின்
மனதை
நிறைவிக்கும்.
இருவருக்குள்ளும்
மனிதம்
துளிர்க்கும்
ஆனந்த
செயலது..!”
*அவள் நைட்டி அணிந்ததில்லை...*
“ஷேம் ஷேம் பப்பி ஷேம்” என்று
சின்ன
வயதில் ஓடியவள்....
எட்டு
வயதில்
முழங்காலுக்கு
மேலான காயத்தை
அப்பாவுக்கு
காட்ட மறுத்தவள்...
உடை
மாற்றும் அறைக்குள்
அம்மாவைக்
கூட அனுமதியாதவள்...
எக்ஸ்ரே
அறையிலிருந்து ஓடிவந்தவள்...
அருவிகளில்
ஒருபொழுதும் குளிக்காதவள்...
வெளிச்சத்தில்
கணவனுடன் கூட சம்மதியாதவள்...
மரித்தலுக்கு
பின்
அம்மணமாய்க்
கிடக்கிறாள் மார்ச்சுவரியில்..!
ஈக்களும், கண்களும் “அங்கேயே” மொய்க்க
இப்படியாகுமெனில்
அன்புலட்சுமி
தற்கொலையே
செய்திருக்க
மாட்டாள்..!
*சாம்ராஜ்*
“பறிக்க முடியாத
பட்டாம்பூச்சியை
மறக்க…
பறக்கமுடியாத
பூக்களை
வெடுக்கெனக்
கிள்ளி
வீசின
விரல்கள்..!”
*கல்யாண்ஜி*
மடக்கிய
குடையுடன்
ரயிலின்
வருகைக்காக
நடைப்பாதை
கூரையின் கீழே
காத்திருக்கிறேன்
நான்.
எதிர்
திசையில்
ரயிலிலிருந்து
இறங்கி
மழையில்
நனைந்தபடி
கையில்
பெரிய பையுடன்
சிறு
சிறு அடிகளாக
நடக்கும்
முதியவர்.
மழையிலேயே
அவ்வப்போது
நின்று
ஆசுவாசப்படுத்திக்
கொண்டு
மெதுவாக
நடக்கிறார்.
எனது
குடையை விரித்து
அந்த
முதியவரிடம்
பையை
வாங்கிக் கொண்டு
நடைப்பாதை
முடியும் வரை
அவரின்
கைப்பிடித்து
அழைத்து
செல்கிறது மனசு.
மனசு
திரும்பும் வரை
எனக்கான
ரயில்
சிக்னலில்
காத்திருக்கிறது..!”
*கி. அற்புதராஜு*
இருக்கை
கிடைக்காமல்
நிற்கிறார்
முதியவர்.
முன்னும், பின்னும்
பரபரப்பாக தேடுகிறார்
இருக்கை
கிடைக்குமாவென...
அவரது
பார்வையைத் தொட்டு
எழுந்து
இடம் கொடுக்கிறேன்.
உட்கார்ந்தவர் நன்றியோடு பார்க்கிறார்.
அவரருகில்
நின்றுக்கொள்கிறேன்.
என்
மனம் மகிழ்கிறது.
நான்
இறங்கப் போகிறேன்
என
நினனத்திருப்பார் போல...
நான்
நிற்பதைப் பார்த்ததும்
எனக்கு
இடம் தேடி
மீண்டும்
பரபரப்பானார்.
சில
நிறுத்தங்களுக்குப் பிறகு
எதிர் இருக்கை காலியாகிறது.
மற்றவர்கள்
உட்காரும் முன்
அந்த
இடத்தைப் பிடித்து
என்னை
உட்கார சொல்கிறார்.
சிறிய புன்முறுவலோடு பார்க்கிறார்.
நானும்
புன்னகைக்கிறேன்.
இப்போது
அவரது மனமும் மகிழ்ந்திருக்கும்..!”
*என் கண்களில்...*
“கைதட்டிக் கூப்பிட்டவர்
அப்பா
போலிருந்தார்.
அருகில்போய்
கேட்டேன்.
‘ஒன்னுமில்ல தம்பி…
என்
பையன் சாயல்ல இருந்தீங்க…
அதான்
ஒருவாட்டி
பாத்துக்கலாம்னு
கூப்பிட்டேன்.’
கண்களைத்
துடைத்துக்கொண்டார்.
‘ஏன் அழறீங்க..?’ என்றேன்.
‘அவன் போயி சேர்ந்துட்டான்’ என்றார்.
வேறெதும்
சொல்லிக்கொள்ளாமல்
திரும்பி
நடந்தேன்.
என்
கண்களில்
நீர்
இருந்தது..!”