எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 30 September 2021

படித்ததில் பிடித்தவை (“பெயரிடப்படாத பறவையின் இறகு” – ரஞ்சித் பிரேதன் கவிதை)

 


*பெயரிடப்படாத பறவையின் இறகு*

 

வெளிச்சம் வியாபித்த பெருவெளியில்

பெயரிடப்படாத பறவையின் இறகொன்று

மென்காற்றில் சுழன்றபடி

முற்றிலும் எதிர்பாராத நாளொன்றில்

என் விரல்களை வந்தடைந்தது.

 

அதன் வண்ணம்

அதன் வாசம் மற்றும்

அதன் மென்மை

எனக்கு பரிட்சியமான

ஒரு பறவையின் பெயரினை

நினைவூட்டி செல்கிறது.

 

எனது காதுகளை குடையவும்

எனது அலமாரியை அலங்கரிக்கவும்

எப்போதாவது மை-தொட்டு எழுதவும்

என்னோடே பயணித்துவருகின்றது

அந்த பறவை விட்டு சென்ற இறகு.

 

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு பறவையின்

ஒவ்வொரு இறகென

என்னை வந்தடைந்த வண்ணமாய்

இறகுகளால் நிரம்பி

வழியத்தொடங்கியது வாழ்வு.

 

இப்படியாய் காலம் கடந்து

இறகுகளை ஒன்றுசேர்த்து

ஒரு சிறகாகவும்

சிறகுகளை ஒன்று சேர்த்து

ஒரு பறவையாகவும்

என்னை நான் உருவாக்கிக்கொண்டு

பறக்கத்தொடங்கினேன்.

 

தனது இறகுகள் இழந்த சூட்சமத்தை

அறிந்துவிட்டிருந்த பறவைகள்

பறக்கத்தயங்கி பீதியில்

கூடடைந்து விட்டன..!

 

*ரஞ்சித் பிரேதன்*


Wednesday 29 September 2021

படித்ததில் பிடித்தவை (“பறவையும் குழந்தையும்” – இந்திரன் கவிதை)

 


*பறவையும் குழந்தையும்*

 

காலையில் கதவைத் திறந்தால்

பால்கனியில்

பறவையைக் காணோம்.

 

மௌனசாட்சியாய் தரையில்

இலவம் பஞ்சு போல்

அதன் ஒற்றை இறகு.

 

குனிந்து கையிலெடுக்கப்போன

என்னைப் பார்த்து

அலறியது குழந்தை.

 

சிறகுக்கு

தானியமும் தண்ணீரும்

வைக்கச் சொன்னது

குழந்தை.

 

மறுநாள் காலையில்

கதவைத் திறந்தால்

சிறகு எங்கோ

பறந்து போயிருந்தது..!

 

*இந்திரன்*

{*மிக அருகில் கடல்*

கவிதைத் தொகுப்பிலிருந்து.}

Tuesday 28 September 2021

படித்ததில் பிடித்தவை (“மெதுவாக கடந்திடுங்கள்” – யாழிசை மணிவண்ணன் கவிதை)

 


*மெதுவாக கடந்திடுங்கள்*

 

வேகத்தடைகள்..

சாலை விபத்துகளில்

அகாலமடைந்தவர்களின் புதைமேடுகள்,

மௌன அஞ்சலிக்கான

மரியாதையாக இருக்கட்டும்

மெதுவாக கடந்திடுங்கள்..!

 

*யாழிசை மணிவண்ணன்*


Wednesday 22 September 2021

படித்ததில் பிடித்தவை (“கலையாதக் கோலம்” – செ.புனிதஜோதி கவிதை)


*கலையாதக் கோலம்*

 

வரிசையாய்

அடுக்கப்பட்ட

செருப்புகள்.

கோலமாவில்

வரைந்த

கலையாதக் கோலம்.

சாத்தப்பட்டிருந்த

வீட்டின் கதவு...

 

முதல்தளத்தை

கடந்தவுடன்...

கலைந்த

செருப்புகள்.

சாக்பீஸ்சால்

வரைந்த

கோலம்.

சாத்தப்பட்ட

வீட்டின் கதவு...

 

இரண்டாம்

தளத்தை அடைந்தவுடன்

அதுவும் அப்படியே.

விழிகள் மட்டும்

பேசிகொண்டே

வந்தன…

கோலத்தோடும்,

செருப்போடும்,

பூட்டப்பட்டக்

கதவோடும்.

 

ஏதோ வெறுமை

அப்பிய நிலையில்

மனம் பரிதவித்தே

நகர்ந்தது.

 

எனக்கான குடியிருப்புப்

பகுதிக்குள்…

மனிதமொழியற்று

துக்கத்தைப் பூசியிருந்தன

எதிரெதிர் சுவர்கள்..!

 

*செ.புனிதஜோதி*


Tuesday 21 September 2021

படித்ததில் பிடித்தவை (“எங்கள் வீடு” – கணேஷ் கவிதை)


*எங்கள் வீடு*

 

முன்பு எங்கள் வீட்டில்

நிறைய பேர் இருந்தார்கள்

தாத்தா, பாட்டி,

அப்பா, அம்மா,

சித்தி, சித்தப்பா,

பெரியம்மா, பெரியப்பா,

அண்ணன், அக்கா…

 

இப்போதும் எங்கள் வீட்டில்

நிறைய பேர் இருக்கிறார்கள்

கோபிநாத், ராதிகா,

ரம்யா கிருஷ்ணன்,

சிவகார்த்திகேயன்,

கலா மாஸ்டர்,

திருமுருகன்,

இன்னும்… இன்னும்..!

 

*கணேஷ்*


Monday 20 September 2021

படித்ததில் பிடித்தவை (“குண்டு” – கவிதை)

 


*குண்டு*

 

குழந்தைகளின் தலையில்

குண்டு வீசிச் செல்லும்

போர் விமானங்கள்

பறந்து கொண்டிருக்கும்வரை

உலகம்

நாகரிகம் அடைந்ததாக

நம்புகிறவர்கள்

காட்டுமிராண்டிகள்..!

Sunday 19 September 2021

படித்ததில் பிடித்தவை (“தொடங்கவில்லை” – ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதை)

 


*தொடங்கவில்லை*

 

துயிலெழுந்து விட்டார்

நீதிபதி.

வாக்கிங் புறப்பட்டு விட்டார்

வக்கீல்.

குளியல் முடித்துவிட்டார்

காவலர்.

சீருடை பூண்டுவிட்டார்

தண்டனைச் சிப்பந்தி.

 

நானோ

இன்னும் என் குற்றங்கள்

செய்யத் தொடங்கவில்லை..!

 

*ஜெ.பிரான்சிஸ் கிருபா*




Thursday 16 September 2021

படித்ததில் பிடித்தவை (“பரிசு” – சத்யானந்தன் கவிதை)

 


*பரிசு*

 

பரிசுப் பொருள்

என் கௌரவத்தை

உறுதி செய்வது

பளபளப்புக் காகிதத்தால்

மட்டுமல்ல.

 

அதன் உள்ளீடு

ரகசியமாயிருப்பதால்.

 

உள்ளீடற்ற ஒரு

உறவுப் பரிமாற்றத்தை

அது

நாசூக்காக்குகிறது.

 

அதன் உள்ளீடு

மீண்டும் கை மாறலாம்.

மினுக்கும் காகிதம் கை கொடுக்க

வீசவும் படலாம்.

 

பரிசின் எல்லாப்

பக்கங்களும்

எதிர்பார்ப்புகளால்

வலுவானவை.

 

கனமான ஒரு

செய்தியைப்

பரிசுகள் சேர்ப்பிக்கின்றன.

 

ரகசியமாய்க்

கைமாறும் பரிசுகளில் மட்டுமே

சமூகம் கைதவறி விட்டவை

உள்ளீடாய்..!

 

*சத்யானந்தன்*