*மெளனம்*
“மொழிகள்
ஆயிரம்
இருப்பினும்
மௌனம்
மட்டுமே
அழகாய்
பேசுகிறது
யாரையும் புண்படுத்தாமல்..!”
*தயக்கம்*
“தயக்கமேதுமில்லை
பொழியும்
மழையில்...
நனைவதற்குத்தான்
அத்தனை
தயக்கங்களும்..!”
“வீட்டில்
பருப்பு தீர்த்துப்போக...
சாம்பார் பின் வாங்க,
வத்தல் குழம்பை
தீர்மானிக்கிறாள்
அம்மா..!”
*முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்*
*வழி சொல்லும் கண்கள்*
“கருக்கிருட்டில்
புது ஊரில்
வழி சொல்லும்
உள்ளூர்க்
கண்களில்தான்
எவ்வளவு பத்திர
உணர்வு..!”
*கலாப்ரியா*
“இதுவரை
காய்க்காத
அளவு
மாங்காய்கள்
காய்த்திருந்தன
மாமரங்கள்
இரண்டிலும்.
தொடர்ந்து
காய்த்துக்
கொண்டேயிருந்தது
அந்த
ஒற்றை தென்னையும்.
குலை
தள்ளிய
மொந்தன்
வாழை
போன
வாரம்தான்
அக்கம்பக்கத்து
வீடுகளுக்கு
பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஒரு
வாரமாக
பூத்துக்
கொண்டேயிருந்தது
மாடித்
தோட்ட
மல்லிகை
பூ செடியும்.
எல்லாமே
அப்பா
வைத்த
மரமும் செடியும்.
எல்லாவற்றுக்கும்
தெரிந்திருக்கும்
போல...
எனக்குதான்
தெரியவில்லை
அப்பா இறக்கப் போவது..!”
*கி. அற்புதராஜு*
*வாசம்*
“கண்கள் ஒளிர
இசையழகு
கெடாமல் பாடுவாள் தங்கை
அவளிடம்
பாடல் வாசம்.
விட்டுக்கொடுக்காதவர்
அப்பா
அவரிடம்
கண்டிப்பு வாசம்.
மழலை
மாறவில்லை குட்டித்தம்பியிடம்
அவனிடம்
பிஞ்சு சொற்களின் வாசம்.
குனிந்த
தலை நிமிராமல்
நோண்டிக்கொண்டே
இருக்கும் அண்ணனிடம்
செல்போன்
வாசம்.
டீவித்தொடர்களிலிருந்து
வெளிவராத
பாட்டிக்கு
கதைகளின்
வாசம்.
வாலாட்டிக்கொண்டே
சுற்றி
வருவான் அன்பு
அவனை
நாயென்று சொல்லக்கூடாது
அவனுக்கு
நன்றிதான் வாசம்.
காலநேரத்திற்கு
ஏற்றார்போல்
மாறும்
வாசம் வீட்டிற்குண்டு.
அம்மாவிற்கு
அதைத்தானே
கேட்கிறீர்கள்..?
எப்போதும்
மாறாத
சமையலறை
வாசம்..!”
*ராஜா சந்திரசேகர்*
*கூந்தலின் சாயல்*
“மழை விட்டபின்னும்
இலையில்
வடியும் நீர்
தலைவிரித்து
நுனி
முடியில் கொண்டையிட்டு
நீர்வழியும்
அவளின் கூந்தலின்
சாயல்..!”
*செ.புனிதஜோதி*
“அந்த மல்லிகை பூ
செடிக்குப்
பக்கத்தில் நின்று
போன
வாரம்தான்
பேசிக்
கொண்டிருந்தோம்...
‘மாடித் தோட்டத்தை
சுத்தம்
செய்ய வேண்டும்
தேவையில்லாத
செடிகளை
எடுத்து
விடலாம் என்று..!’
இந்த
வாரம்
மாடிக்கு
சென்றால்
அந்த
மல்லிகை பூ செடி
தளிர்
இலைகளுடன்
நிறைய
மொட்டுகள் வைத்து
பூக்களையும்
பூத்திருந்தது
அவ்வளவு
அழகாக..!”
*கி.அற்புதராஜு*
*அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது*
“பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு
விற்பார்கள்.
எந்த
நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர
இடம் கிடைக்கும்.
மிதிவண்டி
வைத்திருந்தோம்.
நான்
பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.
எம்.ஜி.ஆர்.
உயிரோடு இருந்தார்.
கலைஞரின்
அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.
எல்லா
வீடுகளிலும்
முதல்
மரியாதை பாடல் ஒலித்தது.
வானொலி
நாடகங்களை
ரசித்துக்
கேட்டோம்.
சாவி, இதயம் பேசுகிறது
பத்திரிகைகள்
வந்தன.
எல்லாருமே
அரசுப்
பள்ளிகளில் படித்தோம்.
சாலையில்
எப்போதாவது
ஒரு வண்டி போகும்.
மழை
நின்று
நிதானமாகப் பொழியும்.
சாராயக்
கடைகள் இருந்தன
இன்றைய
கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.
தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று
விளங்கினார்கள்.
வேலைக்குப்
போகாதவன்
எந்தக்
குடும்பத்திற்கும் பாரமாயில்லை.
எளிதில்
மணப்பெண் கிடைத்தாள்.
வெஸ்ட்
இண்டீசை வெல்லவே முடியாது.
சந்தைக்குப்
போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட
இரண்டு ரூபாய்தான்.
யுவதிகள்
பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர்
மூடுதுணிபோல்
யாரும்
நைட்டி அணியவில்லை.
ராமராஜனைக் கூட விரும்பி ரசித்தோம்.
சுவாசிக்கக்
காற்று இருந்தது
குடி
தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.
தெருவில்
சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள்
அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு
வண்டி ஓட்டுவோம்..!
மயில்
இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து
ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.
மூன்றாம்
வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம்
வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.
கடந்து
தொலைந்துப் போனவை-
நாட்கள்
மட்டுமல்ல… நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்..!
ஆம்…
அந்தக்
காலம் நன்றாக இருந்தது..!”
*மகுடேசுவரன்*