எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 25 November 2017

படித்ததில் பிடித்தவை (“பரிசு” - தேவதச்சன் கவிதை)


பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை.
பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான்.
பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்.
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்..!”
 - தேவதச்சன்.

(ஒரு பரிசுக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் வாங்குபவன் கொடுப்பவன் இருபக்கமும். ஒரு சொட்டில் ஆயிரம் சொட்டுக்கள் என்பது கவித்துவம் ததும்பும் பதிவு)

Sunday 12 November 2017

படித்ததில் பிடித்தவை (“உறவுகள்...” - கலாப்ரியா கவிதை)


உறவுகள்...
அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்.
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸுக்காய்
அம்மாவும்
அப்பாவும்..!

   -    கலாப்ரியா.