*கைவிடப்பட்ட
குழந்தை*
“கைவிடப்பட்ட குழந்தை
ஒரு
கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது
ஒரு
கதையில் இடம் தேடுகிறது
வாகனங்களை
பொம்மைகளைப்போல ரசிக்கிறது
அதன்
சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது
விரட்டுபவரின்
நிழலை மிதித்துச் செல்கிறது
கைவிடப்பட்ட
குழந்தை
ஒரு
பட்டத்தை நோக்கி ஓடுகிறது
கொஞ்சம்
அழுகையை நிறுத்துகிறது
சுண்டல்
விற்பவனிடம் கை நீட்டுகிறது
அம்மாவின்
இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது
கைவிடப்பட்ட
குழந்தை
மணல்
அள்ளிப் போடுகிறது
தன்
பெயரைத் தேடுகிறது
பொம்மையைப்போல்
கிடக்கிறது
கால்
பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது
கைவிடப்பட்ட
குழந்தை
தன்
மழலை வழியே மேலேறுகிறது
கைகளால்
வானவில்லை அசைக்கிறது
விழும்
நிறங்களை அள்ளுகிறது
கடலில்
தூக்கி எறிகிறது
கைவிடப்பட்ட
குழந்தை
காணமல்
போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது
அதிலிருக்கும்
முகத்தைத் தடவுகிறது
மேல்
ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது
கைவிடப்பட்ட
குழந்தை
தாய்களைப்
பார்க்கிறது
தந்தைகளைப்
பார்க்கிறது
மனிதர்களைப்
பார்க்கிறது
யாரும்
தன்னைப் பார்க்கவில்லை எனினும்
ஆழ்ந்து
உற்று அருகில்போய்
அதிகமாகப்
பார்க்கிறது
கைவிடப்பட்ட
குழந்தை
தான்
கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச்செல்கிறது
இன்னொரு குழந்தையை
தன்
கைபிடித்து அழைத்துச் செல்ல..!”
*ராஜா சந்திரசேகர்*
(ஆனந்த
விகடன் இதழில் (25.05.2011)