*அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை*
“வீட்டுக் கூரையினின்று
காகம் கரைந்தால்
விருந்தினர் வருகையென்று
அம்மா சொல்வதை
நான் நம்புவதேயில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை
நீ வருவாய் என்ற
நம்பிக்கை இருக்கிறது.
காகத்தின் மேல் ஏன்
மூட நம்பிக்கை வைக்க
வேண்டும்?
பொழுது சாயச் சாய
நம்பிக்கையும்...
வேறு வழியறியாமல்
வாசலில் காகத்துக்கு
சோறு வைத்தேன்.
சோற்றைத் தின்ற காகம்
கூரையில் அமர்ந்தது
அமைதியாக.
நீ வரும் நேரம்
கடந்ததும்
காகம் பறந்தது.
எனது நம்பிக்கையைப்
பொய்யாக்கி
நீ என்னை ஏமாற்றிவிட்டதாக
நினைக்கவில்லை.
எனது அவநம்பிக்கையைப்
பொய்யாக்காமல்
இந்தக் காகம்தான் என்னை
ஏமாற்றிவிட்டது..!”
No comments:
Post a Comment