**நான்கு நட்சத்திரங்கள்**
“நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருந்த மகள்
நடுவிலேயே தூங்கிவிட்டாள்.
நான் எவ்வளவு சொல்லியும்
இரவு முழுவதும் காத்திருந்தன
நட்சத்திரங்கள்
அவள் எப்படியும்
எழுந்துவிடுவாள் என..!
.
பூந்தொட்டித் தண்ணீரில்
நிலா தவறி விழுந்துவிட்டதென
காப்பாற்றச் சொல்லி நிற்கிறாள்
மகள்..!
இப்போது அவளுள் தவறி விழுந்த
என்னை
அந்த நிலா தான்
காப்பாற்றியாக வேண்டும்.
அப்பா
அம்மா
அண்ணா
தனக்கு
என,
நட்சத்திரங்களுக்குப்
பெயர் வைத்துக் கொண்டிருந்த
மகளுக்கு
நான்கு நட்சத்திரங்களே
போதுமானதாயிருக்கிறது..!”
*ஆன்டன்
பெனி*
No comments:
Post a Comment