எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 29 November 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தையும் தெய்வமும்” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*குழந்தையும் தெய்வமும்* 

 

குழந்தைகள் இருக்கும்போது

கடவுள் இல்லையென்று சொல்வதற்கு

கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது..!

 

குழந்தையின் சூ மந்திரகாளிக்கு

மயங்கி விழுந்து

மீண்டும் ஒரு மந்திரத்தில்

உயிர்த்தெழுவான்

நாத்திகத் தந்தையும்..!

 

எல்லாக் கடவுள்களுக்கும்

இஷ்ட தெய்வம்

ஒன்றுதான் -

குழந்தை..!

 

கடவுள்களின் வாகனங்களில்

குழந்தைகள் துணை

என்றுதான் எழுதியிருக்குமாம்.

நீங்கள் கடவுளைக் காணநேர்ந்தால்

கவனித்துப் பாருங்கள்..!

 

கடவுள்களின் இப்போதைய

திருவிளையாடல்களில் ஒன்று

குழந்தைகளின் பென்சில் ரப்பரை

பிடுங்கி வைத்துக்கொள்வதுதான்..!

 

அழுதுகொண்டு வரும்

கடவுள்களை நீங்கள்

அடிப்பதைப் பார்த்துத்தான்

நமக்கேன் வம்பு என்று

கடவுள் வரவே மாட்டேனென்கிறார்..!

 

குழந்தையைக் காணாமல்

நீங்கள் பதைபதைத்துத் தேடும்போது

தூக்கிவைத்திருந்த குழந்தையை

இறக்கி விட்டு விட்டு

சட்டென அங்கே ஒரு

சிட்டுக்குருவியாகவோ பூனைக்குட்டியாகவோ

கடவுள் உருமாறிக்கொள்கிறார்..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*


2 comments:

  1. Nice and superb lines.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்29 November 2020 at 08:16

    வாழ்வில் குழந்தைகள் என்ற புது மலர்கள் பூக்காதிருந்திருந்தால் உலகம் என்றோ பாலைவனம் ஆகி இருக்கும்.

    ReplyDelete