*எல்லாம்
தெரிந்தவன்*
“ஊர்வீதி
எல்லாம் அத்துபடி
சந்துபொந்து குண்டுகுழி
சாக்கடைத் தேங்கலும் கூட.
நாய்களோடு நல்ல பரிச்சயம்
இது யார்வீட்டுப் பூனை
என்பதும் தெரியும்.
எந்த மரநிழல் நிற்க ஏற்றது
எது பூத்துதிர்கிறது
எல்லாம் அறிவான்.
யார் இட்ட கோலம் அழகு
அவனுக்குத் தெரியும்.
முச்சந்தியில் இஸ்திரி
போடுபவனிடம்
தினந்தோறும்
பீடிக்கு நெருப்பு வாங்கி
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டான்.
சித்தர் பாடல்களை
அப்படியே ஒப்பிக்கிறான்.
யாரோ தந்திருக்கிறார்கள்
பீட்டர் இங்கிலாந்து சட்டை
அணிந்திருக்கிறான்.
மளிகைக்கடைக்காரருக்குச்
சில்லறை தருகிறான்.
‘ஏந்தாயி கண்ணு கலங்கியிருக்கு..?’
விசாரிக்கவும் தெரிகிறது.
கிரிக்கெட் பந்து அவன்மீது
பட்டது
சிரித்தபடி எடுத்து
வீசுகிறான்.
அவனுக்கு யார்மீதும் புகார்
இல்லை
புகழ்ச்சி இல்லை
கேள்வி இல்லை
விமர்சனம் இல்லை.
நேற்றை மறக்க
நாளையைத் துறக்கத்
தெரிந்திருக்கிறது.
அவனைப்
பிச்சைக்காரன் என்று
எப்படிச் சொல்ல முடியும்..?”
*மகுடேஸ்வரன்*
அழகிய ஆழமான கவிதை.
ReplyDeleteஅவனுக்கு யார்மீதும் புகார் இல்லை
புகழ்ச்சி இல்லை
கேள்வி இல்லை
விமர்சனம் இல்லை.
நேற்றை மறக்க
நாளையைத் துறக்கத்
தெரிந்திருக்கிறது.
என்ற வரிகள் அர்த்தமுள்ளவை.
- டாக்டர். ராஜேந்திரன்.