எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 27 October 2020

படித்ததில் பிடித்தவை (“அடி மாடுகள்” – சந்திரசேகரன் கவிதை)

 


*அடி மாடுகள்*

 

நாங்கள்

நரப் பூச்சிகளின்

நன்றி மறுப்பால்

அறுப்புக்குப் போகும்

அடிமாடுகள்..!

 

வயதான ஒருவன்

நோய் வந்த நண்பன்

பால் வறண்ட ஒருத்தி

முடமான முரடன்

நகரும் பொட்டலமாய்

சாகுமிடம் நோக்கி..!

 

நான்கு நாட்கள்

நீரில்லாமல்

நின்றபடி பயணம்..!

கால் தோய்ந்து

சாய்ந்து கொள்ள

சக மாட்டு முதுகுகள்..!

 

வயிறு காயும்

முதல் நாள் மட்டுமே

மலஜலம் அவதி..!

 

உழைப்பை உண்ட பின்

உடம்பையும் கூறு கேட்டாய்..!

பால் மட்டும் போதாதென்று

உதிரமும் உறிஞ்சக் கேட்டாய்..!

செத்தும் கொடுக்கிறோம்

சுவைத்துக் கொள்ளுங்கள்..!

 

ஆனால் எங்கள்

மரணப் பயணத்தை

சிறிதேனும்

மரியாதைப் படுத்துங்கள்..!

 

போன ஆண்டு பொங்கலுக்கு

பொட்டிட்டுப் பூ வைத்து

கடவுளாய் படையல் இட்ட

நீயே வெட்டி இருந்தால்

நிம்மதியாய் செத்திருப்பேன்..!

 

*சந்திரசேகரன்*


1 comment:

  1. ஸ்ரீராம்3 November 2020 at 17:53

    நன்றி மறந்த மனிதர்களின் குரூரம்.

    ReplyDelete