*எங்கள்
வீட்டிற்கும் பெரியார் வந்திருந்தார்*
“பெரியார்
எங்கள் தெருமுனை
பொட்டல் திடலிற்கு
மேகங்களை அதிரவைக்கும்
தொண்டர்களின் கூட்டத்தோடு
ஒரு சமயம்
வந்திருந்தார்.
நடுக்கூடத்தில் அமர்ந்தவாறு
நானும் சின்னு பாட்டியும்
சொற்பொழிவை
கேட்டுக்கொண்டிருந்தோம்.
இரண்டு நாள் திருமணம்
இரண்டு மணி நேரத்தாம்பத்யம்
இறுதி யாத்திரைக்குத்தயாரான
மாப்பிள்ளை
அருகதை இல்லை என்றாயிற்று
நடைமுறை வாழ்க்கை
சின்னு பாட்டிக்கு.
ஒரு வேளை உணவு
ஈர்ப்பற்ற சாம்பல் நிறத்தில்
இரண்டே புடவைகள்
இறப்பை நேசிக்கவைக்கும்
ஒரு தயார் நிலை.
கூட்டம் முடிந்தவுடன்
நெடு நேரம் மௌனமாயிருந்த
சின்னு பாட்டி
முதன் முதலில்
என் அம்மாவிடம் கேட்டாள்
அடுத்த தடவை
அழுத்தமான அரக்கு நிறத்தில்
பார்டர் போட்ட புடவை
வேண்டுமென்று.
அன்று எங்கள் வீட்டிற்கும்
பெரியார் வந்திருந்தார்..!”
*பிரேம பிரபா*
👌👌👌
ReplyDeleteபெரியார் சீர்திருத்தங்களை தன் வீட்டில் இருந்தே ஆரம்பித்தவர். திருமணமாகி ஒரே மாதத்தில் விதவையான தன்னுடைய தங்கையின் 10 வயது மகளுக்கு (கணவன் வயது 13) மறுமணம் செய்து வைத்தவர். அந்நாட்களில் விதவைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது; தலையை (குறிப்பாக உயர்சாதி இந்துப் பெண்கள்) மழித்து கொள்ள வேண்டும்; வெள்ளைச் சேலைதான் அணிய வேண்டும்; நகை எதுவும் அணியக் கூடாது. ஒரு விதவை படும் துன்பத்தை கண் கூடாகப் பார்த்ததால் விதவை மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தார் பெரியார்.
ReplyDeleteஇவையெல்லாம் இந்தக் கவிதையை வாசிக்கும் போது மீண்டும் மீண்டும் இவற்றை நம் மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டியதாயிருக்கிறது தோழமைகளே..!
- திரு. சக்கையா.
(மின் இலக்கியப் பூங்கா – புலனம் பதிவு)