எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 16 October 2020

படித்ததில் பிடித்தவை (“கருகிய கவிதை” – கவிஞர் சச்சிதானந்தன் கவிதை)

 


*கருகிய கவிதை*

 

நான் கருகித் தீரவிருக்கும்

ஒரு கவிதை

நீங்கள் யூகித்தது போலவே

ஒரு பெண்பிள்ளையின் காதல் கவிதை.

 

பெண் பிள்ளைகளின் காதல் கவிதைகள்

சில சமயங்களில் மட்டுமே

நெருப்பிலிருந்து தப்புகின்றன

அப்பாவின் நெருப்பிலிருந்தும் 

அண்ணனின் நெருப்பிலிருந்தும்

அம்மாவின் நெருப்பிலிருந்தும் கூட

அவர்களுடைய அம்மாவிடமிருந்து பரவியது 

அந்த நெருப்பு.

 

சில பெண்பிள்ளைகள் மட்டுமே

இந்த நெருப்பிலிருந்து அரைகுறையாகத் தப்புகிறார்கள்

முழுவதும் கருகாத அவர்களை

நாம் சில்வியா பிளாத் என்று

அக்மதோவா என்று

கமலாதாஸ் என்று அழைக்கிறோம்.

 

சில பெண்பிள்ளைகள்

நெருப்பின் விதியிலிருந்து தப்புவதற்காக

காதலுக்கு

பக்தியின் முகத்திரையை அணிவிக்கிறார்கள்

அப்போது ஒரு மீரா பிறக்கிறாள்

ஒரு ஆண்டாளும் ஒரு மகாதேவி அக்காவும் 

பிறக்கிறார்கள்.

 

ஒவ்வொரு கன்னியாஸ்திரீயும்

நித்திய இளைஞரான யேசுவுக்கான

கருகிய காதல் கவிதையே.

 

அபூர்வமாக, அதி அபூர்வமாக

ஒரு பெண் பிள்ளை உலகைப் பார்த்துச் சிரிக்கும்

வலிமை பெறுகிறாள்.

பெண்களுக்கு மட்டும் சாத்தியமான மென் பரிவுடன்.

அப்போது நாம் அவளுக்கு

சிம்போர்ஸ்கா என்று பெயரிடுகிறோம்.

 

அப்புறம்

சாப்போ தப்பியது

அவளுடைய காதல் கவிதைகளில்

பெண் பிள்ளைகளையே முன்வைத்துப் 

பேசியதனால்தான்..!

 

*கவிஞர் சச்சிதானந்தன்*

(மலையாளக் கவிதை.

தமிழ் மொழி பெயர்ப்பு : தோழர். சுகுமாறன்)

 

{*சில்வியா பிளாத்* இவர் புகழ் பெற்ற அமெரிக்க பெண் இசைக் கலைஞர்.

 

*கமலா தாஸ்* என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதை நூலுக்காக கேரள சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.

 

*அன்னா அக்மதோவா* 1889 இல் பிறந்த ரஷ்ய பெண் கவிஞர். உலகப் பிரசித்தி பெற்ற மிகச் சிறப்பான கவிதைகளை படைத்தவர். யுனெஸ்கோநிறுவனம், 1989 ஆம் ஆண்டினை அக்மதோவா ஆண்டுஎனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார்.

 

*சிம்போர்ஸ்கா* போலந்து நாட்டைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டவை. சிம்போர்ஸ்கா 1996 -ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றவர் ஆவார். நோபல் குழு, "இவரது கவிதைகள் மிகவும் நுணுக்கமாக மனித வாழ்வையும் இயற்கையையும் சித்தரிக்கின்றன" என்று புகழ்ந்தது.

 

 *சாப்போ* என்றால் தமிழ்மொழியில் வெண்பா போன்ற கிரேக்க கவிதை வடிவம்.}

 

[பகிர்வு: திரு. சக்கையா, ‘மின் இலக்கியப் பூங்கா புலனம் பதிவு.]


2 comments:

  1. மனித ராசியின் தாய்மொழி கவிதை. அது மொழிகளுக்கு அப்பாலிருக்கும் மொழி. அது எல்லோருக்கும் சொந்தமானதுதான். மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்கூட என்று சொல்லவே விரும்புகிறேன். ஏனெனில், கவிதையினூடாகப் பேசுவது மனிதர்கள் மட்டுமல்ல. அசைவதும் அசையாததுமான பிரபஞ்சம் முழுவதும்தான்.

    - சச்சிதானந்தன்

    https://www.vikatan.com/arts/literature/136674-satchidanandan-an-international-malayalam-poet

    ReplyDelete