எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 25 October 2020

படித்ததில் பிடித்தவை (“ஒரு நக்சலைட்டாகிய நான்…” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*ஒரு நக்சலைட்டாகிய நான்*

 

இன்று ஒரு தொலைகாட்சி நடிகையை கைது செய்தார்கள்

கைதுகள் இடைவெளியின்றி தொடர்கின்றன

நேற்று ஒரு வழக்கறிஞனை

நேற்றைக்கு முந்தைய தினம் ஒருதிரைப்பட நடிகனை

அதற்கு முந்தைய தினம் ஒரு பத்திரிகையாளனை

அதற்கு முந்தைய தினம் ஒரு சமூக செயல்பாட்டாளனை

அதற்கு முந்தைய தினம் ஒரு மாணவியை

அதற்கு முந்தைய தினம் ஒரு மூதாட்டியை

அதற்கு முந்தைய தினம் சில விவசாயிகளை

 

அவர்களிடம் ஒரு பட்டியல் இருக்கிறது

எப்படி நம்மிடம்

எதிர்க்கப்படவேண்டியவர்கள் என்று

ஒரு பட்டியல் இருக்கிறதோ அதேபோல

 

ஒருவரை கைது செய்யும் முன்

அவர்களுக்கு ஒரு பெயரிட வேண்டியிருக்கிறது

அவர்கள் கைது செய்வது மனிதர்களை அல்ல

அந்தப் பெயர்களை

அவை அவர்களை நடுங்கச் செய்யும் பெயர்கள்

சட்டத்தைப் பற்றியோ நீதியைப்பற்றியோ கவலைப்படாமல்

ஒருவரை அழிக்கவேண்டும் என்றால்

அவருக்கு அந்தப்பெயரை சூட்ட வேண்டும்

 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும்

முதலில் அதை ஒரு விளையாட்டு என்றே நினைத்தார்கள்

பிறகு அவர்கள் புரிந்து கொண்டார்கள்

அதற்குப் பின்னால் ஒரு பயங்கர திட்டம் இருப்பதை

அவர்கள் எல்லோரும் ஒரே குற்றத்தை செய்தார்கள்

அநீதிக்கு எதிராக பேசினார்கள்

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக பேசினார்கள்

நீதிதான் நமது காலத்தின் பயங்கரவாதம் என்று

அவர்களுக்கு இப்போது சொல்லபடுகிறது

 

கைதுகள் இப்படி ஒரு திட்டமிட்ட ஒழுங்கில்

நடைபெறும் என்று நான் நினைத்ததில்லை

நெருக்கடி நிலை அறிவிக்கபட்டபோது

எனக்கு ஏழு வயது

நன்றாக நினைவிருக்கிறது

சுவரெங்கும் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்கள்

இருபதம்ச திட்ட விளம்பரங்கள்

இந்திராவே இந்தியா இந்தியாவே இந்திரா

அப்போது எனக்கு தெரியாது

நெருக்கடிகால தொடர் கைதுகள் பற்றி

பின்னர் படித்துத் தெரிந்து கொண்டேன்

இப்போது பார்த்துத் தெரிந்துகொள்கிறேன்

நாம் இருண்ட காலத்தின் வாசற்படியில்

நின்று கொண்டிருக்கிறோம்

 

கைதுகள் இத்தோடு நிற்கப்போவது இல்லை

அடுத்தது நானாக இருக்கலாம்

அல்லது நீங்களாக இருக்கலாம்

பயப்படுகிறீர்களா?

அதுதான் அவர்கள் விரும்புவது

அவர்கள் விரும்புவதை

தயவு செய்து அவர்களுக்குத் தராதீர்கள்

அவர்கள் நம் இதயத்தில்

எதை அழிக்க விரும்புகிறார்களோ

அதை நாம் இன்னும் பெரிதாக்க வேண்டும்

 

சமூகவிரோதிகளின் பட்டியல்

நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகிறது

அவர்கள் மலைகளில் இருக்கிறார்கள்

காடுகளில் இருக்கிறார்கள்

பத்திரிகை அலுவலகங்களில் இருக்கிறார்கள்

அவர்கள் நம் அனைவரையுமே

சமூகவிரோதிகள் என்று அழைக்கிறார்கள்

அது நம் காலத்தின் சிறந்த பெயர்

நாம் அதை ஒருபோதும் மறுக்கவேண்டாம்

 

நேற்று என் இளம் நண்பன் ஒருவன்

தொலைகாட்சியில் தோன்றி

நான் ஒரு சமூகவிரோதிஎன்று

அறிவித்துக் கொண்டான்

இந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்

நாம் சரியாக சிந்திக்கிறோம்

சரியாக செயல்படுகிறோம் என்பதன்

அடையாளம் அது.

இன்று மாலை கடற்கரையிலும்

பூங்காகளிலும் கூடுவோம்

ஒரு சமுக விரோதியாக நான்

ஒரு பயங்கரவாதியான நான்

ஒரு நக்சலைட்டாகிய நான்…

என்று வரிசையாக உறுதிமொழி ஏற்றுகொள்வோம்

அங்கிருந்து நம் அதிகாரம் பிறக்கிறது

 

நமது பெயர்களை நாம் முடிவு செய்வதில்லை

நமது பெற்றோர்கள் முடிவு செய்வதில்லை

நமது காலம்தான் முடிவு செய்கிறது..!

 

*மனுஷ்ய புத்திரன்*

No comments:

Post a Comment