எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 30 March 2021

படித்ததில் பிடித்தவை (“நகரச் சாவு” – பிருந்தா சாரதி கவிதை)

 


*நகரச் சாவு*

 

அடுக்குமாடி குடியிருப்பின்

வாகன நிறுத்துமிடத்தில்

கண்ணாடி அமரர் பெட்டிக்குள்

இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது

அதன் ஏதோ ஒருதளத்தில் வசித்த

மூத்தக் குடிமகனின் உயிர் பிரிந்த உடல்.

 

மதிய வெயிலின் உக்கிரத்தில்

மரணவாசனை வீசும் ரோஜா மாலைகளின்

விபரீத மணத்தை சுவாசித்துக் கொண்டு

நிழல் விலகிய சாமியானா பந்தல் தாண்டி

கசகசக்கும் வியர்வை துடைத்தபடி

அயர்ச்சியோடு நிற்கிறார்கள்

துக்கம் கேட்கவந்த

ஒருசில நகரவாசிகள்.

 

அந்நேரம் அவர்கள் உணர்வது

மரணத்தின் மாயப்புதிரையா..?

நண்பகல் வெறுமையையா..?

அன்று நின்ற தம் அலுவல்கள் குறித்த

ரகசியக் கவலையையா..?

 

இந்தக் கேள்விகள் ஏதுமற்று

போக்குவரத்து நிறைந்த

அந்த சாலையில்

கிடைத்த இடமொன்றில்

பச்சை மூங்கிலை வெட்டி

பாடை கட்டும் பெரியவர்

முணுமுணுக்கிறார்

 

சாவக் கூட

இந்த ஊர்ல

இடம் இல்லாமப் போச்சு..!

 

*பிருந்தா சாரதி*




2 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *பிருந்தா சாரதி*
    என்றழைக்கப்படுகின்ற
    நா. சுப்பிரமணியன்
    ஓர் இந்திய திரைப்பட
    இயக்குனரும்,
    வசனகர்த்தாவும் ஆவார்.
    லிங்குசாமி இயக்கத்தில்
    வெளிவந்த "ஆனந்தம்"
    திரைப்படத்தில் வசனம் எழுதி
    தன்னுடைய திரைப்பட
    வாழ்க்கையை தொடங்கினார்.
    லிங்குசாமியுடன் இணைந்து
    "பையா", "வேட்டை" படங்களில்
    பணியாற்றிவர் பின்பு சுயமாக
    "தித்திக்குதே" படத்தை
    இயக்கினார்.

    1965 - ல் கும்பகோணத்தில்
    பிறந்தவர்.
    இவருடைய பெற்றோர்
    சுப.நாராயணன்-ருக்மணி ஆவர்.
    இவர் கும்பகோணம் அரசு
    ஆண்கள் கல்லூரியில்
    இயற்பியலில் இளங்கலைப்
    பட்டமும், மதுரைக் காமராஜர்
    பல்கலைக் கழகத்தில் தமிழில்
    முதுகலைப் பட்டமும்
    பெற்றிருக்கிறார்.

    கீழ்க்கண்ட கவிதை நூல்கள்
    உள்ளிட்ட பல நூல்களை
    எழுதியுள்ளார்.

    பறவையின் நிழல்
    (கவிதைத் தொகுப்பு),
    டிஸ்கவரி புக் பேலஸ்,
    சென்னை, ஏப்ரல்-2015.

    ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்
    (கவிதைத் தொகுப்பு),
    டிஸ்கவரி புக் பேலஸ்,
    சென்னை, ஏப்ரல்-2016.

    எண்ணும் எழுத்தும்
    (கவிதைத் தொகுப்பு),
    படி வெளியீடு,
    கே கே நகர் மேற்கு,
    சென்னை-600 078, ஜனவரி-2017.

    மீன்கள் உறங்கும் குளம்
    (ஹைகூ கவிதைகள் தொகுப்பு),
    டிஸ்கவரி புக் பேலஸ்,
    கே.கே.நகர், சென்னை-600 078,
    செப்டெம்பர்-2017.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்30 March 2021 at 20:20

    இறந்த பின்
    முதியவர்களுக்கு
    நகரச் சூழலில்
    அளிக்கபடும்
    இறுதி மரியாதையை?
    கவிஞர் வேதனையுடன்
    கவிதையில் வடித்திருக்கிறார்.

    மிக அருமை.

    ReplyDelete