எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 23 March 2021

படித்ததில் பிடித்தவை (“மரண வீடு” – நிழலி கவிதை)

 


*மரண வீடு*

 

எல்லா செத்த வீடுகளிலும்

என் மனம்

என் சாவுக்காக அழுகின்றது.

 

தான் செத்த பின்

தனக்காக அழ முடியாத

துயரம் அதுக்கு.

 

பாவம்

வளர்த்தப்பட்ட உடலில்

தன் உடலை ஒட்டி

அழும் மனிதர்களில்

தன் மனிதர்களை ஒட்டி

வேவு பார்க்கின்றது

கள்ள மனசு.

 

ஒவ்வொரு சாவு வீடும்

தனக்கான

ஒரு ஒத்திகை பார்க்கும்

இடம் என்று

சொல்லுது

மனம்.

 

எல்லாச் சாவுகளின்

செய்திகளின் போதும்

எல்லா மரணம் பற்றிய

தகவல்களின் போதும்

விக்கித்து

தன் சாவை

நினைத்து ஒரு கணம்

தடுமாறுகின்றது.

 

எல்லா வீதி விபத்துகளும்

என்னை அச்சுறுத்துவன போன்றுதான்

எல்லாச் சாவுகளும்

என்னை அச்சுறுத்துகின்றன.

 

செத்தவருக்காக அழும் கண்ணீர்

துளிகளில் பல

எனக்காக அழுவன

என கண்கள் சொல்வதில்லை.

 

மரணம் பற்றிய

செய்திக் குறிப்புகளில்

என் சாவு

பற்றிய தேடல்களை

செய்கின்றது

மனம்..!

 

*நிழலி*




1 comment:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *நிழலி* ஈழத்து
    ஆண் கவிஞர்.
    தற்போது கனடா-வில்
    வசிக்கிறார்.
    பிறந்த நாள் :
    ஞாயிறு 15 டிசம்பர் 1974.

    ReplyDelete